வியாதிகளை விலை கொடுத்து வாங்கும் மனிதன்! | தினகரன்

வியாதிகளை விலை கொடுத்து வாங்கும் மனிதன்!

ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிகள் யாவை?

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வசதிகள், தொழில்நுட்பமுன்னேற்றங்கள் உலகெங்கும் பல்கிப்பெருகி உள்ளன. ஆனால் அதற்குச் சமாந்தரமாக மக்கள் மத்தியில் நோய்களும் அதிகரித்திருப்பதுதான் கவலைக்குரிய விடயமாகும். உலகில் மக்களுக்கு இயற்கை மரணத்தை உண்டாக்கும் பிரதான காரணி மாரடைப்புஆகும். மற்றொன்று பக்கவாத நோயாகும். இவ்விரு நோய்களையும் உண்டாக்குவதில் பிரதான பங்கு வகிப்பது நீரிழிவு என்பது கவனிக்கத்தக்கது. ஆண்டுதோறும் நவம்பர் 14ம் திகதி சர்வதேச நீரிழிவு நோய் எதிர்ப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. நீரிழிவு நோயை தவிர்ப்பது மற்றும் அதற்கு சரியாக சிகிச்சை அளிப்பது மூலம் மாரடைப்பு முதலான ஆபத்தான நோய்களைத் தவிர்க்கலாம்.

ஒவ்வொருவரும் நலமாக இருக்க நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு நோய்த் தாக்கம் மற்றும் அதனால் ஏற்படுகின்ற மோசமான விளைவுகளுக்கு உணவுப் பழக்கங்கள் முக்கிய காரணியாகும்.

இன்றைய நாளில் துரிதஉணவுகள் (fast food) பிரபல்யமானவை. குடும்பம் நலமாக இருக்கவும் அதன் ஊடாக தேசம் நலமாக இருக்கவும் உணவுப் பழக்கம்,உடற்பயிற்சி என்பன முக்கியமாகும். உணவுப் பழக்கங்கள் இக்காலத்தில் தாறுமாறாக இருப்பதுஆரோக்கியத்திற்கு பெரும் கெடுதலை விளைவிக்கின்றது.

நமது முன்னோர்களின் உணவில் புத்தம் புதிதாக அறுவடை செய்யப்பட்ட உணவுகள் இருந்தன. பூச்சிநாசினி,களைநாசினிபோன்ற இரசாயனங்கள் கலக்கப்படாத மரக்கறிகளும்,பழவகைகளும் முக்கிய இடம்பெற்றன.கடலோரங்களில் வாழ்ந்த முன்னோர்களின் உணவில் மீனும் ஏனைய ஆரோக்கியமான கடல் உணவுகளும் பிரதான பாகம் வகிந்தன. இவ்வாறான புதிய மரக்கறி,புதிய பழவகை,மீன் என்பன இதயம்,சிறுநீரகம், மூளை என்பவற்றிற்கு நோயுண்டாகாது பாதுகாத்தன. இந்த மரக்கறிகளுடன் ஒப்பிடும் போது இன்றைய காலத்து துரித உணவுகளாக பீட்சா,பொரித்த எண்ணெய் வடியும் கோழி இறைச்சி முதலானவை காணப்படுகின்றன.இந்த உணவுகள் ஆரோக்கியமற்றவை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

மரக்கறிகளுடன் ஒப்பிடும் போது இக்காலத்து பீட்சாக்களின் மாவும், சீஸ் முதலான அதீத கொழுப்புகளும் உடல் எடையை அதிகரிக்க வைக்கின்றன. உடல் எடை அதிகரிப்பதும் நீரிழிவு நோய் ஏற்பட முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று உலகில் 18 வயதுள்ளோரில் 8.5% பேருக்கு நீரிழிவு நோய் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பீட்சா,பொரித்த கோழி போன்றே இன்றைய உணவுகளில் அதீத இனிப்பு அளவும் காணப்படுகிறது. சோஸ், ஐஸ்கிறீம்,மென்பானங்கள் போன்றன இவற்றிற்கு சில உதாரணங்களாகும். இவை நீரிழிவு நோயாளிகளின் நிலையை மோசமாக்கி,சிறுநீரக செயலிழப்பு,மாரடைப்பு,பக்கவாதம், முதலியவற்றை ஏற்படுத்தும். அத்துடன் இந்த இனிப்புகள் மறுபுறத்தில் உடல் பருமனையும் அதிகரித்து அதனூடாகவும் பக்கவாதம்,மாரடைப்பு,சிறுநீரக செயலிழப்பு என்பன ஏற்படும்.

இன்றைய குழந்தைகள் பீட்சா,பொரித்த கோழி,சீஸ்,கேக், ஐஸ்கிறீம் முதலியவற்றை உண்பதில் விருப்பம் கொண்டுள்ளனர்.

இந்த உணவுகளால் இரத்தத்தில் கொலஸ்ரோல் அதிகமாக சேர்ந்து இரத்தக் குழாய்களில் படிந்து மாரடைப்பு,பக்கவாதம் ஆகிய நோய்களை ஏற்படுத்தும். ரோல்ஸ், பற்றிஸ், சமோசா முதலிய உணவுகள் எண்ணெயில் மிக நீண்ட நேரமாக ஆழமாக எண்ணெய் அவற்றில் ஊறும் வரை பொரிக்கப்படும்.எனவே இந்த உணவுகளும் கொலஸ்ரோல் முதலிய கொழுப்பு படிவுகளை ஏற்படுத்தும். ஆனால் இக்காலத்தில் இவற்றையே விரும்பி உண்ணுகின்றனர். கொழுப்பு, இனிப்பு, இரண்டுமே உடல் பருமனை அதிகரிக்கும். முக்கியமாக வயிற்றுப் பகுதியில் ஊளைச் சதையை உண்டாக்கும். இது ஒருவரின் அழகை கெடுப்பது மட்டுமன்றி இரத்த அழுத்தம் அதிகரிப்பு, நீரிழிவு,பக்கவாதம்,சிறுநீரக செயலிழப்பு முதலான நோய்களையும் ஏற்படுத்தும்.

பழங்களிலும் புத்தம் புது மரக்கறிகளிலும் உடல் ஆரோக்கியத்துக்கான நல்ல வகை பொருட்கள் நிறைய உள்ளன. விட்டமின் c முக்கியமானது ஆகும். இது நெல்லிக்கனியில் தான் மிக அதிகமாக கிடைக்கிறது. நெல்லிக்கனியில் உள்ள விட்டமின் c யில் இன்னொரு விசேடமும் உள்ளது. அதாவது மற்ற பழங்கள் மரக்கறிகளில் உள்ள விட்டமின் c இலகுவில், விரைவில் அழிந்து போய் விடும். ஆனால் நெல்லிக்கனியில் உள்ள விட்டமின் c நீண்ட காலம் அழியாது இருக்கும். இன்று பெரும் அங்காடிகளில் அப்பிள்,பெயார்ஸ்,திராட்சை முதலான பழங்கள் தாராளமா ககிடைக்கும். ஆனால் நெல்லியோ கிடையாது. மக்களில் அதை தேடுவோரும் இல்லை. நெல்லி ஒரு முக்கிய உதாரணம். இதைப் போல நிறைய பழங்கள்,மரக்கறிகள் நம் நாட்டில் கிடைக்கின்றன. இவற்றை உண்டால் விட்டமின் c உடன் மேலும் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.இது குடும்ப நலத்திற்கு மிக அவசியம்.

நெல்லிக்கனியைப் போல மற்றொரு உதாரணம் வல்லாரை ஆகும். வல்லாரை என்பது வல்ல+ஆரை என தமிழில் பிரித்துஎழுதலாம். வல்ல என்றால் வலிமையான என்று பொருள். ஆரை என்பது தமிழில் கீரையை குறிக்கும் இன்னொரு பெயராகும். ஆக வலிமையான கீரை என்பதே வல்லாரை. நமது முன்னோர் வல்லாரையில் இரும்புச்சத்து பெரும் தொகையில் உண்டு என்பதை எப்படியோ அறிந்து வைத்துள்ளனர். இரும்புச்சத்துடன் விட்டமின் ஊயும் வல்லாரையில் அதிகம் உள்ளது. இரும்புச்சத்து குடலில் உறிஞ்சப்படுவதற்கு விட்டமின் c அவசியம் என்பது மருத்துவத்தில் நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டைச் சுற்றிக் கடல் உள்ளது. மீனில் ஒமேகா 3 கொழுப்பு உள்ளது. இலங்கை கடலை விட குளிர் கடல் மீன்களில்தான் இது அதிகமுள்ளது. மீனில் உள்ள புரதம், கொழுப்பு இல்லாமை என்பவற்றால் மீன் சிறந்தஉணவு எனலாம்.

உணவுப் போலவே உடற் பயிற்சியும் மிக இன்றியமையாதது. இன்று சிறுவர்கள் கூட மிக அதிக எடையுடன் உலா வருவதைக் காணலாம். ஒரு வாரத்தின் 7 நாட்களில் 5 நாட்களாவது காலை அல்லது மாலையில் அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம். வேகமான நடைப்பயிற்சி சிறந்தது. பலர் தொழிலுக்கு காலையில் செல்லும் போதும் திரும்பி வீடு வரும் போதும் நீண்ட தூரம் நடப்பதாக கூறிக் கொள்வதைக் காணலாம்.மருத்துவத்தின்படி இது நடைப் பயிற்சிஅல்ல. வியர்வை சொட்டச் சொட்ட வேகமாக நடப்பதே நடைப்பயிற்சி. இது போல் வேறு உடற்பயிற்சிகளும் செய்யலாம். இவை மூலம் வயிற்றுத் தொகுதியைக் குறைக்கலாம். வயிற்று சதை அதிகரிக்க அதிகரிக்க இரத்தஅழுத்தம், நீரிழிவு,மாரடைப்பு,பக்கவாதம் அதிகரிக்கும்.உடற்பருமன் சுட்டி என்பது 18 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். இந்தச் சுட்டி உடல் நிறையைஅவரதுஉயரத்தின் வர்க்கத்தால் பிரித்துப் பெறப்படும்.

மேற்கூறிய உணவு,உடற்பயிற்சி என்பவற்றுடன் புகை பிடித்தல்,மதுபானம் அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்ப்பதும் முக்கியமாகும். இன்று பெண்களில் சிலரும் 'ஸ்டைல்' என்று கூறிக் கொண்டு புகை பிடிக்கவும் மது அருந்தவும் தொடங்கி உள்ளனர்.பெண்களில் மதுவின் ஆபத்தை குறைத்துக் கொள்ளும் உடல் பொறிமுறை ஆண்களை விட குறைவாகவே உள்ளது. புகை பிடிக்கும் நபரை விட சூழ உள்ளவர்கள் புகையில் பாதிக்கப்படுகின்றனர்.இது சூழ இருக்கும் குழந்தைகளில் ஆஸ்த்மா நோயைஏற்படுத்துவடன் புகை பிடிப்பவர், சூழ உள்ளவர் என சகலருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

மேற்கூறியவற்றுடன் நோய்களுக்கு உரிய சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்வதும் வைத்திய ஆலோசனையை தொடர்ந்து பெறுவதும் அவசியமாகும். பலர் ஆங்கில மருந்துகளால் பக்கவிளைவு ஏற்படும் என ஏனையவர் கூறுவதை கேட்டு மாத்திரை உட்கொள்வதை நிறுத்துகின்றனர். உதாரணமாக நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு மருந்து, உடற்பயிற்சி,உணவுக் கட்டுப்பாடு என்பன மிக முக்கியம். இல்லாவிடில் நிச்சயமாக சிறுநீரக செயலிழப்பு,பக்கவாதம்,மாரடைப்பு முதலிய நோய்கள் ஏற்படவே செய்யும். நாம் உண்ணும்,சமைக்கும் உணவை தெரிந்து எடுக்க வேண்டும். உடற்பயிற்சி எடையை பராமரித்தல், புகை மற்றும் மதுவை கைவிடல் மூலம் உடல் நலம் பேணி குடும்ப நலனையும் பேணலாம். இதன் மூலம் தேசத்தின் நலனும் பேணப்படும்.

இல்லாவிடில் மேற்கூறிய நோய்கள் ஏற்பட்டு மருத்துவச் செலவு,நேரச் செலவு, ஆரோக்கியக் கெடுதல் என்பன உண்டாகும்.வருமுன் காப்பதே சிறந்ததாகும்.

டொக்டர்
எஸ். சுரேன்திரஜித்


Add new comment

Or log in with...