மைய்யித்துக்காக பிரார்த்தித்தல் | தினகரன்

மைய்யித்துக்காக பிரார்த்தித்தல்

மைய்யித்தை அடக்கம் செய்த பின், உறவினர்கள் உடனே அவ்விடத்தை விட்டு நகர வேண்டாம்! உஸ்மான் இப்னு அஃப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்;

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ​ைமய்யித்தை அடக்கம் செய்தபின் அங்கு நின்று பின்வருமாறு கூறுவார்கள், ''உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்.''(ஆதாரம்: அபூதாவூத்)

நாம் மய்யித்தை அடக்கம் செய்தவுடன் , உடனே அங்கேயிருந்து புறப்படத்தான் பார்ப்போம். அல்லது ஹஸ்ரத் 'துஆ'  ஓதுவார் . எல்லோரும் வாடிக்கையாக வழக்கமாக ஆமீன் கூறுவோம். அந்த மய்யித்துக்காக நாம் யாராவது ஒருவர் சிறிது நேரம் இருந்து உருக்கமாக அல்லாஹ்விடம் துஆச் செய்வோமா ... ?

அம்ரு இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்;

''நீங்கள் என்னை அடக்கம் செய்தால் ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம்வரை எனது கப்ரைச் சுற்றி நில்லுங்கள். உங்களைக் கொண்டு நான் ஆறுதல் அடையவும், எனது இரட்சகனின் தூதுவருக்கு எதைக் கூறவேண்டும் என்பதை நான் அறிந்து கொள்வதற்காகவும் (கப்ரைச் சுற்றி நில்லுங்கள்) எனக் கூறினார்கள்.

ஒரு ஆட்டை அறுத்து என்பது பொருள்: ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம் வரை, எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஒரு மணி நேரம் அதிகம் தான் ஆகும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்; அடக்கம் செய்தபின் முஅத்தின் வழக்கமாக ஓதும் 'துஆ'வுடன் திரும்பி, மறுபடியும் பள்ளிவாசலுக்குள் நுழைந்து விடுகிறோம்.

மேற்காணும் ஹதீஸிலிருந்து அடக்கம் செய்தபின் உறவினர்கள் அந்த மய்யித்துக்கு து'ஆ செய்வது முக்கியமானது மட்டுமின்றி, அந்த மய்யித்துக்கு மிகவும் அவசியமானது என்பதையும் விளங்கலாம்.

மறுபடியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுருத்தியதை எண்ணிப்பாருங்கள்.

"உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்."

ஆக அடக்கம் செய்யப்பட்டவுடன் அந்த மய்யித் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என்பது மட்டுமல்ல அந்த நேரத்தில் நாம் கேட்கும் துஆ அந்த மய்யித் உறுதியுடன் இருப்பதற்கு உதவியாக இருக்கும் எனும்பொழுது அந்த மய்யித்துக்கு அந்த உதவி எவ்வளவு முக்கியம் என்பதையும் நாம் உணர வேண்டும்.

மய்யித்தை விசாரணை செய்யப்படும் அந்த நேரத்தில் துஆ செய்யும் மகத்தான வாய்ப்பு மீண்டும் வரப்போவதில்லை! எனவே அந்த துஆ எவ்வளவு முக்கியம் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

மௌலவி

தல்ஹா (தீனி)

வாரியபொல


Add new comment

Or log in with...