சர்வதேச தலையீடுகளன்றி நல்லிணக்கப்பாடே தேவை | தினகரன்

சர்வதேச தலையீடுகளன்றி நல்லிணக்கப்பாடே தேவை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத் தொடரின் ஒரு மாத கால அமர்வு உலக நாடுகளில் மனித உரிமைகளை பேணுவது தொடர்பிலான விடயத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இலங்கை விவகாரம் குறித்த ஆராய்வு மூன்று தினங்களுக்கு ஒதுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இந்த முறை இலங்கை விவகாரம் மிகவும் சூடிபிடித்ததாகவே காணப்பட்டுள்ளது. நிலைமாறுகால நீதிச் செயற்பாடு காலவரையறைக்குள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வலியுறுத்தி இருக்கின்றார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இலங்கை தனது நிலைப்பாட்டை சர்வதேச நாடுகளுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தனதுரையின் போது இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச தலையீடுகளுக்கோ, அழுத்தங்களுக்கோ எந்த வகையிலும் இடமளிக்க முடியாதென அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார். சர்வதேச நடைமுறைகளை உள்ளடக்கிய புத்தாக்கமான மற்றும் சாத்தியமான உள்ளூர் பொறிமுறையூடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், சர்வதேச சமூகமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் திலக் மாரப்பன வலியுறுத்தி இருக்கின்றார்.

முக்கியமான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் முன்மொழியப்பட்ட இலங்கையில் ஐ.நா. ஆணையாளர் அலுவலகம் அமைக்கும் யோசனையை இலங்கை முற்றுமுழுதாக நிராகரித்து விட்டது. எமது நாட்டுக்கு சுயாதீனமான நீதித்துறையொன்று இருக்கும் நிலையில் சர்வதேச நீதித்துறையின் தேவை அநாவசியமானதென்பதை வலியுறுத்தி அந்த யோசனையை நிராகரித்துள்ளது. அதேசமயம் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் தேடும் விடயத்தில் அழுத்தங்கள் பிரயோகப்படுத்தப்படுவதை கடுமையாக விமர்சித்திருக்கும் இலங்கை இந்த விடயத்தில் உள்ளகப் பொறிமுறை மூலம் கையாளும் யோசனையை முன்மொழிந்துள்ளது.

அதே சமயம் தீர்வு விடயத்தில் காலவரையறை வகுப்பதானது தீர்வு முன்னெடுப்புக்களை தோல்வியடைச் செய்யும் முயற்சியாகும். இந்த விடயத்தில் மிக ஆழமாகச் சிந்திக்க வேண்டிய கடப்பாட்டை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச சமூகமும் கொண்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இலங்கையில் அலுவலகம் அமைக்கும் யோசனை குறித்து முன்வைக்கப்படும் நியாயப்பாடுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக காணப்படவில்லை. என்பதை வெளிவிவகார அமைச்சர் தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கின்றார்.

அத்துடன் இலங்கை உள்ளக நீதித்துறையின் மீது பூரண நம்பிக்கை கொண்டிருப்பதாலும், சுயாதீன நீதிச்சேவையொன்று காணப்படுவதாலும், விசாரணைகளுக்கு இலங்கையர் அல்லாதவர்களை நீதித்துறையினுள் உள்வாங்குவதற்கு எமது அரசியலமைப்பில் அனுமதிக்கப்படவில்லை என்பதையும் இலங்கை தெளிவாக விளக்கியுள்ளது. இலங்கையரல்லாத நீதிபதிகள் நீதித்துறையினுள் உள்வாங்கப்பட வேண்டுமானால் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டிய அவசியமும் உள்ளது.

எமது சுயாதீன நீதித்துறையின் மீதான நம்பிக்கை வலுவாகக் காணப்படுவதால் இதில் மாற்றமொன்று ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது. அப்படிச் செய்ய முற்பட்டால் எமது நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படலாம். எனவேதான் நிலைமாறுகால நீதிப்பொறிமுறை அமைத்தல் குறித்த யோசனையை இலங்கை ஏற்றுக் கொள்ள மறுத்து அதனை நிராகரித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டில் நியாயம் இருப்பதை நன்கு புரிந்து கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

அதேசமயம் காலவரையை முழுமையாக அமுல்படுத்துவதை மனிதஉரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இலங்கை இந்த குறிப்பிட்ட காலவரையறையை நடைமுறைப்படுத்துவதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் குறிப்பிட்டதொரு காலஅவகாசத்தை வழங்க வேண்டுமென்றே வெளிவிவகார அமைச்சர் தமதுரையில் மேலும் வலியுறுத்தியுள்ளார். இந்தக்கோரிக்கை தொடர்பில் சர்வதேச சமூகம் அதன் ஆதரவை வெளிப்படுத்தியுள்ள போதிலும், மனித உரிமைகள் பேரவை இன்னமும் உறுதியான எந்தத் தீர்மானத்தையும் எடுக்காத நிலையே காணப்படுகின்றது.

ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது இலங்கையின் புரையோடிப் போன பிரச்சினை தொடர்பில் உறுதியான தீர்வு எட்டப்பட வேண்டுமென்பதில் இலங்கையும், சர்வதேச சமூகமும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்ற போதும் இவர்களுக்கிடையே மேலோங்கி நிற்கும் கருத்து முரண்பாடுகளை நிவர்த்திக்க வேண்டிய அவசியமே இன்று ஏற்பட்டிருக்கின்றது. இது அவ்வளவு சாதகமானதாகக் கொள்ள முடியாதுள்ளது.

இந்த விடயத்தில் சகல விபரங்களையும் உள்வாங்கிய பரந்துபட்டதொரு திட்டம் இருக்க வேண்டியதன் அவசியத்தைக் கொண்ட எதிர்பார்ப்பே சகல தரப்பினரிடமும் காணப்படுகின்றது. அதனை உருவாக்குவதிலும், வெற்றி காண்பதிலும் தாமதம் ஏற்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை சகலரும் கொண்டிருக்கின்ற போதும் முட்டுக்கட்டைகளை களைவதில்தான் முரண்பாடு காணப்படுவதை உணர முடிகிறது.

எது எவ்வாறாக இருக்கின்ற போதிலும் இழுத்தடிப்பு ஆரோக்கியமானதல்ல. இந்த விடயத்தில் தாமதம் கூடாது விரைவான செயற்பாடுகள் மிக அவசியமானதாகும். சர்வதேச தலையீடுகள் ஏற்படக் கூடியதான நெருக்கடி நிலைகள் மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கப்படக் கூடாது என்பதையே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். இலங்கை உள்ளகப் பிரச்சினையை தாமே தீர்த்துக் கொள்ள போவதாக கூறுவது நியாயமானது என்று ஏற்றுக் கொண்டாலும் கூட யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் பிரச்சினை புரையோடிப்போன புண்ணாகக் காயப்பட்டு நிற்பதன் காரணமாகவே வெளித்தலையீடுகளுக்குக் காரணமாக அமைகின்றது. இனியாவது சகல தரப்புகளும் இதயசுத்தியோடு செயற்படுவார்களானால் இலங்கைப் பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வொன்றுக்குள் நுழையக் கூடியதாக இருக்கும். இன்றேல் விளைவுகள் பாரதூரமானதாகவே அமையலாம் என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.


Add new comment

Or log in with...