Thursday, April 25, 2024
Home » சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியிலும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் இடைவிடாது தாக்குதல்

சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியிலும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் இடைவிடாது தாக்குதல்

உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு

by Gayan Abeykoon
December 29, 2023 8:18 am 0 comment

த்திய காசாவில் இஸ்ரேலியப் படை தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக சரமாரி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. போரில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் முயன்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

காசாவில் மோசமடைந்திருக்கும் மனிதாபிமான நெருக்கடியை தணிப்பது மற்றும் போர் நிறுத்தம் ஒன்றுக்கு சர்வதேசம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றபோதும் இஸ்ரேல் தனது உக்கிரத் தாக்குதல்களை தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக அது உறுதியாகக் கூறி வருகிறது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் மத்திய காசாவில் உள்ள அல் நுஸைரத் மீது நடத்திய மூன்று வான் தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மறுபுறம் நேற்று (28) கான் யூனிஸ் மருத்துவமனை ஒன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டு மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். பலஸ்தீன செம்பிறை சங்கத்தினால் நடத்தப்படும் அல் அமல் மருத்துவமனைக்கு அருகில் ஒரு மணி நேரத்திற்குள் மூன்று தடவை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதே பகுதியை இலக்கு வைத்து புதனன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கான் யூனிஸ் மற்றும் மத்திய பகுதிகளில் தாக்குதல்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாகவும், கழுதை வண்டிகளிலும், கார்களிலும் தப்பிச் செல்வதை தமது ஊழியர்கள் பார்த்ததாக ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. வீதியை ஒட்டி தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அது கூறியது.

இராஜதந்திர ரீதியில் இஸ்ரேலுக்கான அழுத்தமும் அதிகரித்து வருகிறது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்த பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளின் உதவியுடன் நீடித்த போர்நிறுத்தத்தை நோக்கி செயற்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

மத்திய காசாவின் அல் மகாசி மாவட்டத்தில் வான் தாக்குதல் ஒன்றில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் கூறியிருப்பதோடு வடக்கின் காசா நகரில் ஏழு பலஸ்தீனர்களின் சடலங்கள் அல் ஷிபா மருத்துவமனைக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இரவு முழுவதும் இஸ்ரேலிய ஷெல் தாக்குதல்கள் நீடித்ததாக மத்திய காசா குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இஸ்ரேலிய டாங்கிகள் அல் புரைஜ் மற்றும் அல் மகாசி பகுதிகள் ஊடாக செல்ல முயலும் நிலையிலேயே அங்கு தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.

இதனால் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 21,110 ஆக உயர்ந்துள்ளது. இதில் குறைந்தது 8,200 சிறுவர்கள் அடங்குவர். மேலும் 55,243 பேர் காயமடைந்துள்ளனர்.

மறுபுறம் காசாவில் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்து வரும் இஸ்ரேலிய இராணுவத்தின் மேலும் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு மற்றும் மத்திய காசாவில் புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் இவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

காசா பகுதியில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மாத்திரம் 22 இஸ்ரேலிய துருப்புகள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இதன்மூலம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காசாவில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது.

காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதோடு பலரும் அந்த குறுகிய நிலப்பகுதியில் பல தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தப் போர் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை தூண்டும் என்று மேற்கத்திய மற்றும் மத்திய கிழக்கு அரசுகள் கவலை அடைந்துள்ளன. இதில் லெபனானுடனான இஸ்ரேலின் வடக்கு எல்லையில் தொடர்ந்து பதற்ற சூழல் நீடிக்கிறது. முந்தைய எந்த நாட்களை விடவும் ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த புதனன்று இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டுகள் மற்றும் ஆயுதம் சுமந்த ஆளில்லா விமானங்களை அனுப்பி இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஹிஸ்புல்லா இராணுவத் தளங்கள் மற்றும் மற்ற இடங்களை இலக்கு வைத்து வான் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. நிலைமை மாற்றப்பட வேண்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

“ஹஸ்புல்லாக்களை எல்லையில் இருந்து விலக்கி வைப்பதற்கும் இஸ்ரேலின் வடக்கு குடியிருப்பளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துவதற்கும் சர்வதேசம் மற்றும் லெபனான் அரசு செயற்படாவிட்டால், இஸ்ரேலிய இராணுவம் அதனைச் செய்யும்” என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கான்ட்ஸ் குறிப்பிட்டார்.

சிரியா மீது இஸ்ரேல் நடத்தியதாக குற்றம்சாட்டப்படும் ஏவுகணைத் தாக்குதல் ஒன்றில் கடந்த திங்களன்று கொல்லப்பட்ட ஈரானின் மூத்த தளபதி ராசி முசாவியின் கொலைக்கு பழிதீர்க்க தாம் அல்லது தமது கூட்டணிகள் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான நேரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் புரட்சிக் காவல் படை புதன்கிழமை எச்சரித்திருந்தது.

இதேநேரம் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்று பகுதியில் உள்ள கிராமம் ஒன்றுக்கு அருகில் நேற்று ஆளில்லா விமானம் ஒன்று விழுந்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. இதற்கு ஹமாஸ் அமைப்புடன் நெருக்கமான ஈராக் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.

காசா போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் வன்முறை அதிகரித்திருப்பதோடு அங்கு இதுவரை 76 சிறுவர்கள் உட்பட 313 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெனின் மற்றும் ரமல்லா பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவத்தின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நேற்று தீவிரம் அடைந்திருந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT