சுப்பர் ஓவரில் தென்னாபிரிக்கா வெற்றி | தினகரன்

சுப்பர் ஓவரில் தென்னாபிரிக்கா வெற்றி

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ரி 20 போட்டியில் இலங்கை அணி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய போதும், துரதிஷ்டவசமாக சுப்பர் ஓவரில் மயிரிழையில் தோல்வியை தழுவியது.

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததுடன், தென்னாபிரிக்க அணியையும் 134 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது. பின்னர் இடம்பெற்ற சுப்பர் ஓவரில் தென்னாபிரிக்க அணி 14 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இலங்கை அணியால் 5 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

இந்தப் போட்டியில் தென்னாபிரிக்க அணியின் பணிப்பின் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. ஒருநாள் தொடரை போன்று இந்தப் போட்டியிலும் துடுப்பாட்ட வீரர்கள் தங்களுடைய பங்களிப்பை வழங்க தவறியிருந்தனர்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ரி 20 போட்டியில் அறிமுகமாகிய அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் துடுப்பாட்டத்தை கட்டியெழுப்பினர்.

இதில், அவிஷ்க பெர்னாண்டோ சிக்ஸருக்கு விளாசிய பந்தினை இலாவகமாக ரீஷா ஹென்ரிக்ஸ் பிடியெடுக்க, 16 ஓட்டங்களுடன் அவிஷ்க பெர்னாண்டோ வெளியேறினார். தொடர்ந்து வருகைத்தந்த துடுப்பாட்ட வீரர்கள் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணி குறைந்த ஓட்ட வேகத்துடன் துடுப்பெடுத்தாடியது.

கமிந்து மெண்டிஸ் மாத்திரம் சிறந்த ஓட்ட வேகத்துடன் 29 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், எதிர்பார்க்கப்பட்ட திசர பெரேரா 18 பந்துகளுக்கு 18 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொடுக்க, தனன்ஜய டி சில்வாவும் பந்துகளை பௌண்டரிகளுக்கு விளாச தடுமாறினார். இறுதியில் இசுரு உதான 6 பந்துகளுக்கு 12 ஓட்டங்களையும், அகில தனன்ஜய 4 பந்துகளுக்கு 8 ஓட்டங்களையும் பெற, இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது.

தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் என்டைல் பெஹலுக்வாயோ 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஏனைய பந்து வீச்சாளர்கள் தலா ஒவ்வொரு விக்கெட்டுகள் வீதம் பகிர்ந்தனர்.

பின்னர் களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் குயிண்டன் டி கொக் மற்றும் ரீஷா ஹென்ரிக்ஸ் நேர்த்தியாக ஓட்டங்களை குவித்தனர். எனினும், துரதிஷ்டவசமாக ரீஷா ஹெக்ரிக்ஸ் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். இதனையடுத்து அகில தனன்ஜயவின் பந்துவீச்சில் குயிண்டன் டி கொக் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தென்னாபிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்த போதும் அணித் தலைவர் என்ற ரீதியில் டு ப்ளெசிஸ் ஓட்டங்களை அதிகரிக்க முற்பட்டார். எனினும், ஜெப்ரி வெண்டர்சேவின் பந்து வீச்சில் 21 ஓட்டங்களுடன் டு ப்ளெசிஸ் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் முதல் பந்தில் பௌண்டரி அடித்து அதிரடியான ஆட்டத்தை ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய போதும், பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர், ரஸ்ஸி வென் டெர் டஸனுடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தார். இவர், இசுரு உதான வீசிய 15 ஓவரில் 20 ஓட்டங்களை விளாசி, அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.

இறுதிக்கட்டத்தில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய லசித் மாலிங்க போட்டியின் திசையை மாற்ற தொடங்கினார். தனது மூன்றாவது ஓவரில் மாலிங்க ரஸ்ஸி வென் டெர் டஸனை ஆட்டமிழக்க செய்ய, அதே ஓவரில் டேவிட் மில்லர் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். பின்னர், தென்னாபிரிக்க அணிக்கு 2 ஓவர்களுக்கு 6 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரை வீசிய மாலிங்க ஒரு ஓட்டத்தை மாத்திரம் கொடுத்து ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

ஒரு ஓவருக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இசுரு உதான சிறப்பாக பந்து வீசி முதல் 5 பந்துகளுக்கு 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்தார். இறுதி பந்துக்கு 2 ஓட்டங்கள் பெறவேண்டிய நிலையில், ரன்-அவுட் வாய்ப்பினை டிக்வெல்ல தவறவிட்டதன் மூலம் இரு அணிகளும் ஒரே ஓட்ட எண்ணிக்கையை அடைய போட்டி சமனிலையானது. இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்த, அகில தனஞ்ஜய, ஜெப்ரி வெண்டர்சே மற்றும் தனஞ்ஜய டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியில் சுப்பர் ஓவர் வழங்கப்பட மில்லரின் அதிரடியுடன் தென்னாபிரிக்க அணி 15 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியை தழுவியது. இதன்படி, 3 போட்டிகள் கொண்ட ரி 20 தொடரில் தென்னாபிரிக்க அணி 1-−0 என முன்னிலை வகிக்கின்றது.


Add new comment

Or log in with...