கடந்த வாரம் 12 வைத்திய நிபுணர்கள் இராஜினாமா | தினகரன்

கடந்த வாரம் 12 வைத்திய நிபுணர்கள் இராஜினாமா

"எமது நாட்டில் இரண்டாயிரம் வைத்திய நிபுணர்கள் இருக்கின்ற போதிலும் அவர்களுள் பெரும்பாலானோர் தூர இடங்களுக்கு சென்று கடமையாற்ற விரும்புவதில்லை.

பணம் சம்பாதிப்பதற்கு வசதியான இடங்களையே அவர்கள் நாடிச் செல்கின்றனர். கடந்த வாரம் 12 வைத்திய நிபுணர்கள் தமது தொழிலை இராஜினாமா செய்து விட்டு வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்" என சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கதிரியக்கப் பிரிவு மற்றும் மேம்பாலம் என்பவற்றை திங்கட்கிழமை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; "வைத்தியத்துறை இன்று உலகில் முன்னேற்றமடைந்துள்ள போதிலும் எமது நாட்டில் எல்லா வைத்தியசாலைகளிலும் குறைபாடுகளும் பிரச்சினைகளும் இருக்கவே செய்கின்றன. அதிலும் அவசர சத்திர சிகிச்சை பிரிவு இல்லாமை மிகவும் சிக்கலான விடயமாகும். 

வைத்திய நிபுணர்களின் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. மக்களின் வரிப் பணத்தில் படித்து விட்டு மக்களுக்கு சேவையாற்ற மறுப்பது நியாயமில்லை. பணக்காரர்கள் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவார்கள். ஏழைகளால் அது முடியாது. இது பெரும் அநீதி. இந்நிலை மாற வேண்டும். 

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. சத்திர சிகிச்சை பிரிவு , கிளினிக் தொகுதி போன்றவற்றை அமைப்பதற்கான நிதி, தற்போதைய வரவு- செலவுத் திட்டம் நிறைவேறியதும் ஒதுக்கப்படும். இந்த வருடத்துக்குள் இவற்றை நிர்மாணித்து முடிக்க வேண்டும் என்பதே எனது திட்டம். 

கடந்த அரசில் புற்று நோயாளி ஒருவருக்கு வழங்கப்படும் மருந்துகள் 15 இலட்சம் ரூபாவிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் நல்லாட்சியில் அமைச்சர் ராஜித சேனாரத்தன, அந்தக் கட்டுப்பாட்டை நீக்கி, அந்த நோயாளி உயிர் பிழைக்கும் வரை அல்லது மரணிக்கும் வரை மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். சிலருக்கு 100 மில்லியன் ரூபா வரையிலும் மருந்துகள் வழங்கப்படுகின்றன" என்றும் அவர் குறிப்பிட்டார். 

(கல்முனை விசேட நிருபர்) 


Add new comment

Or log in with...