வாகன சாரதிகளுக்கு முதலில் அவசியம் மனிதாபிமானம்! | தினகரன்

வாகன சாரதிகளுக்கு முதலில் அவசியம் மனிதாபிமானம்!

நாட்டில் முன்னொரு போதும் இல்லாதபடி வீதி விபத்துகள் அதிகரித்துள்ளன. வளர்முக நாடொன்றுக்கு இந்த அதிகரிப்பு ஆரோக்கியமானதல்ல. அதேநேரம் உலகில் வாகன விபத்துகள் அதிகம் இடம்பெறும் வளர்முக நாடுகளில் ஒன்றாக இலங்கையும் மாறி விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.

அதன் காரணத்தினால் வாகன விபத்துகளை தவிர்ப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் பொலிஸாரும் சட்டம், ஒழுங்கு துறையினரும் விசேட கவனம் செலுத்தி வருகின்றனர்.

வீதி விபத்துகளால் நாளொன்றுக்கு சுமார் 8 பேர் உயிரிழப்பதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அத்தோடு காயங்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையும் அதனை விட இரண்டு மூன்று மடங்கையும் தாண்டிக் காணப்படுகின்றது.

இவ்வாறு வீதி விபத்துகள் அதிகரித்துச் செல்வதற்கான காரணமென்ன? அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? என்பன தொடர்பில் போக்குவரத்து பொலிஸாரும் சட்டத்துறையினரும் சமூக ஆர்வலர்களும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

உண்மையில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு வாகன விபத்துகள் அதிகரித்திருப்பதற்கு பல காரணங்கள் அடிப்படையாக அமைந்திருக்கின்றன. முன்பை விட வீதிகள் சிரமமின்றி பயணம் செய்யக் கூடிய வகையில் சிறந்த முறையில் காணப்படல், வாகனங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் அபரிமிதமான அதிகரிப்பு, வீதிப்போக்குவரத்து சட்டங்களை மதித்து நடக்க சாரதிகள் தவறுதல் என்பன அவற்றில் முக்கியமான காரணங்களாக உள்ளன.

இக்காரணங்களில் வீதிப் போக்குவரத்து சட்டங்களை மதித்து நடக்கத் தவறும் சாரதிகளின் செயற்பாடுகள்தான் பெரும்பாலான வீதிவிபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றன. இதனை போக்குவரத்து பொலிஸ் தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன. அதாவது, இரவு பகல் பாராது ஒரே சாரதி தொடராக வாகனம் செலுத்துதல், அளவுக்கு அதிகமாக வானொலி மற்றும் தொலைக்காட்சிகளின் ஒலியை அதிகரித்தபடி வாகனத்தைச் செலுத்துதல், கையடக்கத் தொலைபேசியில் அளவளாவியபடி வாகனம் செலுத்துதல், மது மற்றும் போதைப் பொருட்களை பாவித்தபடி வாகனம் செலுத்துதல், போட்டியிட்டு முந்திச் செல்ல முயலுதல் என்பன இலங்கையின் வீதி விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன் விளைவாக இவ்விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இருந்தும் வீதி விபத்துகளும் அதன் மூலமான உயிரிழப்புகளும் காயங்களும் சொத்து சேதங்களும் குறைந்ததாக இல்லை.

அந்த வகையில், கடந்த 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸார் நடத்திய திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது 1321 பேர் மது அருந்திய நிலையில் வாகனம் செலுத்திய போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் துறைப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். இது மிகவும் பாரதூரமான குற்றமாகும்.

சாரதியானவர், மதுஅருந்திய நிலையில் வாகனம் செலுத்துவதானது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அதனால் மதுஅருந்திய நிலையில் வாகனத்தை செலுத்த முன்னர் சாரதிகள் ஒரு தரம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஏனெனில், மது அருந்திய நிலையில் வாகனத்தை சீராகவும் ஒழுங்குமுறையாகவும் செலுத்த முடியாது. மது மற்றும் போதைப்பொருள் ஏற்படுத்தும் தாக்கம் இதற்கு காரணம். இதன் விளைவாக வாகனத்தைச் செலுத்தும் போது ஏற்படக் கூடிய விபரீதங்களும் கொஞ்சநஞ்சமல்ல. இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. இவை தொடர்பில் சாரதிகள் கவனம் செலுத்த வேண்டும்.

அதேநேரம், மது அருந்திய நிலையில் தாம் வாகனம் செலுத்தப் போவது மனிதர்களோ உயிரினங்களோ அற்ற பிரதேசமல்ல என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுமாத்திரமல்லாமல் தாம் செலுத்தும் வாகனத்தில் தான் மாத்திரமல்லாமல் தன்னைப் போன்ற பல மனித உயிர்கள் பயணிப்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாகன சாரதி என்பவர் தமது வாகனத்தில் பயணிக்கும் பயணிகளதும் வீதியில் செல்லும் ஏனைய வாகனங்களில் பயணிக்கும் பயணிகளதும், பாதசாரிகளதும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியவராவார். தாம் ஒரு சாரதி என்றாலும் தம்மை நம்பி குடும்பம், உறவினர்கள் இருப்பதையும் அவர்கள் ஒருபோது மறந்து செயற்படலாகாது.

இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக எடுத்துநோக்கும் போது சாரதியானவர் பொறுப்புணர்வோடும் முன்னவதானத்தோடும் செயற்பட வேண்டியவராவார். அவர் ஒருபோதும் உணர்ச்சிவசப்படலுக்கும், ஆத்திரமூட்டுதலுக்கும் உள்ளாகலாகாது. அவர் எப்போதும் அடுத்தவரின் நலன்கள் குறித்து கவனம் செலுத்தக் கூடியவராக இருக்க வேண்டும். அப்போதுதான் வீதிவிபத்துக்களை உண்மையாகவே குறைக்கக் கூடியதாக இருக்கும். ஒவ்வொரு சாரதியும் பொறுப்புடன் செயற்படும் போது இந்த ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும். அதன் மூலம் வாகன விபத்துக்கள் குறைவடைவதோடு உயிரிழப்புக்களிலும் காயங்களுக்குள்ளாதலிலும் பாரிய வீழ்ச்சியும் ஏற்படும்.

ஆகவே மது உள்ளிட்ட போதைப்பொருள் பாவனைகளைத் தவிர்த்து பொறுப்புமிக்க சாரதிகளாக திகழ்வதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். இதுதான் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாகவுள்ளது. அதனூடாக பொலிஸாரும் சட்டத்துறையினரும் மாத்திரமல்லாமல் மக்களும் எதிர்பார்க்கும் பொறுப்புமிக்க சாரதிகளை உருவாக்கக் கூடியதாக இருக்கும். அதற்காக சாரதிகள் உட்பட சகலரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.


Add new comment

Or log in with...