பிறப்புச்சான்றிதழில் அடையாள அட்டை இலக்கம் பதியும் நடவடிக்கை அறிமுகம் | தினகரன்

பிறப்புச்சான்றிதழில் அடையாள அட்டை இலக்கம் பதியும் நடவடிக்கை அறிமுகம்

எதிர்காலங்களில் பிறப்புச் சான்றிதழுடன் அடையாளஅட்டை இலக்கமும் பதிவாகும் டிஜிட்டல் பதிவு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பதிவாளர் நாயக திணைக்களத்தின் 'மக்கள் உரிமை சர்வதேச தரம்' எனும் அறிமுக நிகழ்வு நாடு தழுவிய ரீதியில் நடைபெற்றன. 153ஆண்டுகள் பழமைவாய்ந்த பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் சேவைகளை நவீனமயப்படுத்தல் திட்டம் நாடுதழுவிய ரீதியில் நடைபெற்றுவருகின்றது. முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் காணிகளைப் பதிவுசெய்தல், ஒருநாள் சேவை மற்றும் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் என்பன நடைபெற்றன.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் உரையாற்றும்போது மேலும் தெரிவிக்கையில்,'மக்களுக்கான சேவை கள் வழங்குகின்ற எங்களின் செயற்பாடுகளில்   நாங்கள் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களின் சேவைகளை துரிதப்படுத்துவது அவசியமாகின்றது.  மக்களை அலைக்கழிப்பதை நாங்கள் தவிர்ப்பதும் துரிதமான செயற்பாட்டுக்கும் இது வழி வகுக்கும். 2019ஆம் ஆண்டு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு அவர்களின் பிறப்புப் பதிவு டிஜிட்டல் சான்று பிரதிகள் வழங்கப்படவுள்ளன. அதன் ஊடாக பிறப்புச் சான்றிதழில் அடையாள அட்டை இலக்கம் கூட குறிப்பிடப்படும். இந்த ஆண்டு குழந்தைகளுக்கும் அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்பட உள்ளது. அதுமட்டுமல்ல  பிறப்புச் சான்றிதழ்கள் இனிவருங்காலங்களில் மும்மொழிகளிலும் பிரசுரிக்கப்படும். நாட்டில் இருக்கின்ற இரு மொழிபேசும் மக்களுக்கும் அது பயனுள்ளதாகஅமையும். இவ்வாறான நடவடிக்கை மூலம் மக்களின் சேவைகளையும் சிறப்பான முறையில் வழங்குவதற்கு பதிவாளர் நாயகத் திணைக்களம் முன்வந்துள்ளது எனவும் தெரிவித்தார். 

(முல்லைத்தீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...