ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டம் | தினகரன்

ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டம்

ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை இந்த வருடத்திற்குள் உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை மேற்கொண்டு வருவதாக தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவரும், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியைகளுக்கான தேசிய தொழில்த் தகைமை சான்றிதழ் வழங்குவது தொடர்பான முன்னாயத்த மதிப்பீட்டு நடவடிக்கை மட்டக்களப்பு தொழில் பயிற்சிக் கல்லூரியில்   நேற்றுமுன்தினம் (18) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது,  'தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையானது வெறுமனே சான்றிதழ் வழங்கும் நிறுவனமாக செயற்படக்கூடாது. வேலைவாய்ப்புகளை உத்தரவாதப்படுத்திய தொழில்கள் மூலமாகச் சான்றிதழ்களை வழங்க வேண்டுமென்பதுடன், அதனைச் செய்வதற்கு நானும் நடவடிக்கை எடுத்துள்ளேன். அதற்கமைய எமது தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையானது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது' என்றார். 

'தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையை சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, எமது சான்றிதழ்களை அங்கீகரித்து, ஒரு சில வருடங்களை சர்வதேச பல்கலைக்கழகங்களில் உள்வாங்குகின்ற பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகின்றோம்.

எமது பிள்ளைகள் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையில் பெற்றுக்கொள்ளும் சான்றிதழ்கள் ஏதோ ஒரு வகையில் சர்வதேச பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்டு, ஓரிரு வருடங்களுக்குள் அவர்களது கல்வியை முடித்து, ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சியுள்ளவர்களாக ஆக்குவதற்கு நாங்கள் இந்த தேசிய தொழில் பயிற்சி அதிகார சபையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தங்களை செய்யுமளவு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.

ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக்களை இந்த வருடத்திற்குள் உருவாக்குவதற்கான அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளோம். அந்த ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களில் அதிகமான வேலைவாய்ப்புக்கள் இங்கு கொடுக்கப்படவுள்ளது' என்றார்.

(எம்.எஸ்.நூர்தீன் -புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...