1964 ஒப்பந்தப்படி இந்தியா திரும்பி முகாம்களில் உள்ளோருக்கு குடியுரிமை | தினகரன்

1964 ஒப்பந்தப்படி இந்தியா திரும்பி முகாம்களில் உள்ளோருக்கு குடியுரிமை

1964ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு திரும்பி அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் மேலும் தாமதமில்லாமல் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ், கேபிள் டிவி கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் வழங்கி உள்ளது.

மக்களவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பாரதிய ஜனதாவின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சாடினார். நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்து பணவீக்கம் அதிகரித்துவிட்டது என்றார். அதிமுக அரசின் ஊழலை பாரதிய ஜனதா கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசின் கடன் பன்மடங்கு உயர்ந்து விட்டது.

இந்நிலையில் நேர்மையான, நடுநிலையான மதச்சார்பற்ற நிர்வாக்த்திற்கு திமுக உறுதியளிப்பதாக கூறினார். திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க பலரும் ஒன்லைன் மூலமாக ஆலோசனை அளித்தனர் என கூறி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஸ்டாலின். திமுக-வின் தேர்தல் அறிக்கை பின்வருமாறு : பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பொருளாதாரமும் சரிந்துள்ளது. 1964 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஓப்பந்தப்படி இந்தியாவுக்கு திரும்பி அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் அனைவரும் மேலும் தாமதமில்லாமல் இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட , தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க சட்டத்திருத்தம் செய்யப்படும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய சட்டம் நிறைவேற்றப்படும். கேபிள் டிவி கட்டணம் முந்தைய அளவுக்கு குறைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை பயன்படுத்த சட்டம் திருத்தம் செய்யப்படும்.


Add new comment

Or log in with...