நிலைபேறான அபிவிருத்திக்கு சகவாழ்வுதான் அடிப்படை | தினகரன்

நிலைபேறான அபிவிருத்திக்கு சகவாழ்வுதான் அடிப்படை

இலங்கையில் இனங்களுக்கிடையே சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டங்கள் பல மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பல்லின மக்கள் வாழும் நாடொன்றின் நிலைபேறான அபிவிருத்திக்கும் அந்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் சகவாழ்வும் புரிந்துணர்வும் ஒற்றுமையும் மிகவும் அவசியம். அதனூடாகத்தான் எந்தவொரு தேசத்தையும் துரித அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லக் கூடியதாக இருக்கும். இதற்கு உலகின் பல நாடுகள் சிறந்த முன்னுதாரணங்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.

அதேநேரம் இன, மத மொழி ரீதியிலான பார்வையும் சந்தேகங்களும் மேலோங்கிக் காணப்படும் எந்த நாடும் ஒருபோதும் நிலைபேறான அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் அடைந்து கொள்ளவும் முடியாது. அதற்கும் பல தேசங்கள் முன்னுதாரணங்களாக உள்ளன.

அந்த வகையில் பல்லின மக்கள் வாழும் இலங்கை சுதந்திரமடைந்து இற்றைக்கு 70 வருடங்கள் கடந்து விட்டன. இந்நாடு சுதந்திரமடையும் போது பொருளாதார ரீதியில் இந்நாட்டை விடவும் பெரிதும் பின்தங்கிக் காணப்பட்ட பல நாடுகள் இன்று இந்நாட்டை பின்தள்ளி முன்னேற்றப் பாதையில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. அதற்கு அந்த நாடுகளது மக்களின் இன, மத பேதங்களுக்கு அப்பாலான பார்வையே முக்கிய காரணமாகும். அவ்வாறான நாடுகளைச் சேர்ந்த மக்களும் தேசத்தின் முன்னேற்றம், அபிவிருத்திக்ேக முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கின்றனர்.

ஆனால் இலங்கை சுதந்திரமடைந்து ஏழு தசாப்தங்கள் கடந்தும் வளர்முக நாடு என்ற வட்டத்துக்குள்தான் இற்றை வரையும் உள்ளது. பல்லின மக்களைக் கொண்ட இந்நாட்டில் இன, மத, மொழி ரீதியிலான பார்வைக்கு அளிக்கப்படுகின்ற முக்கியத்துவம், நாட்டின் அபிவிருத்தியிலும் முன்னேற்த்திலும் காட்டப்படாதுள்ளது. அதன் வெளிப்பாடே தற்போதைய நிலைமைக்குக் காரணமாகும்.

இந்நாட்டில் இன, மத, மொழி ரீதியிலான பார்வை தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்ததால் உருவான சந்தேகங்களின் விளைவாக நாடு 30 வருட கால யுத்தத்திற்குள் தள்ளப்பட்டது.

இதன் விளைவாக இந்நாடு அபிவிருத்திப் பாதையில் மேலும் பல வருடங்கள் பின்தள்ளப்பட்டதோடு இந்நாட்டின் விலைமதிக்க முடியாத பெறுமதிமிக்க மனித வளங்களும் சொத்துக்களும் இழக்கப்பட்டுள்ளன. அந்த யுத்தம் தோற்றுவித்துள்ள காயங்களும் வடுக்களும் ஆழமானவை.

பல்லின மக்கள் வாழும் நாட்டின் சுபீட்சத்துக்கும் முன்னேற்றத்திற்கும் இவ்வாறான இன, மத, மொழி ரீதியிலான பார்வைகளோ அவற்றின் அடிப்படையாகத் தோற்றம் பெற்ற காயங்களோ உகந்ததல்ல. அவை ஒருபோதும் நாட்டுக்கு நன்மையளிக்கப் போவதுமில்லை. சகவாழ்வு நல்லிணக்கத்தின் ஊடாக உண்மையான ஆற்றுப்படுத்தல்களை அவற்றுக்கு அளிக்க வேண்டும்.

இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொண்ட 2015இல் பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் முன்னேற்றத்தையும் மக்களின் சுபீட்சத்தையும் பிரதான இலக்காகக் கொண்டு சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இவ்வேலைத் திட்டங்களின் பயனாக 2015க்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட இன, மத, மொழி ரீதியிலான பார்வையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதனால் இவ்வேலைத் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனூடாக இனமத ரீதியிலான பார்வைக்கு அப்பால் ஒன்றுபட்டு இலங்கையர் என்ற அடையாளத்துடன் முன்னேறிச் செல்லும் நிலைமை உருவாகும்.

இந்த வகையில் நாட்டின் நலன்களில் அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகளும் அரசாங்கத்தின் சகவாழ்வு மற்றும் நல்லிணக்க வேலைத் திட்டங்களுக்கு பக்கபலமாக அமையும் ஒத்துழைப்புக்களை நல்கி வருகின்றன. அவற்றில் தேசிய சமாதானப் பேரவையும் முக்கிய பங்காற்றி வருகின்றது. அந்த அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தறை, வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த சர்வமத தலைவர்களும் சிவில் பிரதிநிதிகளும் புத்தளம், மன்னார், திருகோணமலை போன்ற மாட்டங்களுக்கு தற்போது நல்லெண்ண விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

'இனங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்டுள்ள இவ்வேலைத் திட்டம் பெரிதும் வரவேற்கத்தக்கதும் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கக் கூடியதுமாகும்' என்று சர்வமதக் குழுவின் பிரதிநிதி ஒருவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இவ்வாறான நல்லிணக்க விஜயங்களின் ஊடாக ஒரு பிரதேசத்தின் சமய கலாசார விழுமியங்களை மற்றொரு பிரதேசத்தவர்களால் அறிந்து, புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கப் பெறும். அப்பிரதேச மக்களின் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ளக் கூடிய வாயப்புக் கிடைக்கும். நாட்டில் நிலைபேறான சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு ஒவ்வொரு இன மதத்தினரின் உணர்வுகளையும் தேவைகளையும், எதிர்பார்ப்புக்களையும் அடுத்த இன, மதத்தினர் சகோதரத்துவ வாஞ்சையுடன் அறிந்து புரிந்து கொள்ளக் கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும். இதற்கு ஊடகங்களும் பாரிய பங்களிப்புச் செய்யலாம்.

இவ்வாறான நிலைமை உருவாகும் போது இன, மத, பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் நிலைமை உருவாகும். இதற்கு தற்போதைய நல்லிணக்க ஏற்பாடுகள் பக்கத்துணையாக அமையும். இன, மத பேதங்களுக்கு அப்பால் ஒருவரையொருவர் சகோதரத்துவ வாஞ்சையுடன் புரிந்து கொள்ளும் போது நாட்டில் துரித அபிவிருத்தி ஏற்பட நீண்ட காலம் எடுக்காது. இவ்வாறான நிலைமை ஏனைய நாடுகளுக்கும் நல்ல முன்னுதாரணமாக அமையும். அதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.


Add new comment

Or log in with...