ஆயிரம் தபாலக அதிபர்கள் விரைவில் நியமனம் | தினகரன்

ஆயிரம் தபாலக அதிபர்கள் விரைவில் நியமனம்

போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவு

தேசிய அரசாங்கத்துடன் இணைந்திருந்த கட்சியினரின் செயற்பாடுகளால் எதிர்பார்த்த சேவையை வழங்கமுடியாது போனதாகத் தெரிவித்த, தபால் மற்றும்  முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், இதன்போது தனி அரசாஙங்கம் அமைத்துள்ளதால் சேவைகளைத் துரிதப்படுத்த முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கண்டி ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் பொக்காவல எனுமிடத்தில்  சதொச  நிறுவனத்தின் புதிய கிளை ஒன்றை (16) திறந்து வைத்த பின் உரையாற்றும்போது அவர்  இதனை தெரிவித்தார். இங்கு மேலும் அவர் கூறியதாவது-

நல்லாட்சி அரசுடன் இணைந்திருந்த சிலரின் செயற்பாடுகளால் எதிர்பார்த்த சேவைகளை வழங்க முடியாமற்போனது. தற்போது தனியான அரசாங்கம் அமைந்துள்ளதால் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர்கள் சொகுசாக வாழ்வதாகச் சிலர் நினைக்கின்றனர்.இப்பதவியை ஏற்ற பின்னர்தான் இதிலுள்ள சிரமங்கள் தெரியவரும். எனது குடும்பத்தினருடன் கூடப் பேசுவதற்கு எனக்கு நேரம் கிடைப்பதில்லை. கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம், உயர்தரப்பரீட்சைகளில் சித்தியடைந்தோருக்கு தபாலக அதிபர் பதவிகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கென போட்டிப் பரீட்சை நடாத்தி ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அரசின் வரவு செலவு திட்ட யோசனைகளில் மக்களுக்கு தேவையான சகல நிவாரணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த வரவு செலவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது தபாலக அதிபர்களும் நியமிக்கப்படுவர்.  இந்நியமனங்களில் எந்த அரசியல் தலையீடுகளும் இருக்காது என்றார்.

(அக்குறணை குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...