‘நற்செய்தி அறிவிப்பு இறை இரக்கத்தை அறிவிப்பதாக அமைய வேண்டும்’ | தினகரன்

‘நற்செய்தி அறிவிப்பு இறை இரக்கத்தை அறிவிப்பதாக அமைய வேண்டும்’

ஆறு ஆண்டுகள் பணி நிறைவில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்

பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பதவியில் ஆறு ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளார்.

2013 பெப்ரவரி 11ம் திகதி திருத்தந்தை 16 ம் பெனடிக்ட் தம் எட்டு ஆண்டு நிறைவில் திருச்சபையின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.

வத்திக்கானின் சிஸ்டீன் சிற்றாலயத்தில் கூடிய கர்தினால்கள் கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்களை அடுத்த திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தபோது பல்வேறு ஆச்சரியங்கள் அங்குப் பொதிந்திருந்தன. இயேசு சபையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை என்பதுடன்  இவர் அமெரிக்கக் கண்டத்திலிருந்து வரும் முதல் பாப்பரசருமாவார்.

புதிய திருந்தந்தையின்கீழ்  திருஅவைப் படிப்பினைகளில் அதாவது, கருக்கலைப்பு முறைகள்,  கற்புடைமை, பெண் அருள்பணியாளர்கள், ஒரே பாலின திருமணங்கள் என்பவற்றில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை, இருப்பினும் அவரின் புதிய அணுகுமுறைகள் பலரை திருஅவையை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பலரை திரும்பி வரவும் வைத்துள்ளது.

நற்செய்தி அறிவித்தலின் புதிய வழி குறித்து அவர் கூறியுள்ளதே இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நற்செய்தி  அறிவிப்பு என்பது இறைவனின் கருணையையும் இரக்கத்தையும் அறிவிப்பதாக இருக்கவேண்டும் என எடுத்துரைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் வார்த்தைகளால் மட்டுமல்ல வாழ்வு நடவடிக்கைகளாலும் அந்த அறிவித்தல் இடம்பெற வேண்டும் என எடுத்துரைத்தார். இவர் ஏழைகளையும் புலம்பெயர்ந்தோரையும் நோயுற்றோரையும் தேடிச்சென்று சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கிறிஸ்தவ விசுவாசத்தின் மையப்பகுதிக்கு இத் திருத்தந்தை கொண்டுவந்துள்ளார். இறைவனின் படைப்பைப் பாதுகாக்கும் பொறுப்புடையவர்கள் என்பதை வலியுறுத்தியே Laudato Si' என்ற சுற்றுமடலை வரைந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்தின் அமைப்பு முறைகளில் அவர் கொணர்ந்துள்ள மாற்றங்கள் இந்த ஆறு ஆண்டுகளில் ஏராளம் என கூறலாம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எளிமையானவர் ஏழைமக்கள் மீது அளவுகடந்த பாசமுள்ளவர். மதங்களிடையே நல்லுறவை வளர்க்க விரும்புபவர்.இது உலகம் முழுவதும் அறிந்த ஒன்று.

நல்ல செயல்களுக்கு விளம்பரம் தேவையில்லை என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர் நம் திருத்தந்தை. 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் கியூப அரசுத்தலைவர் Raul Castro  அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து கியூபக் கைதிகள் விடுவிக்கப்படுவதிலும் கியூபாவுக்கு எதிரான அமெரிக்க பொருளாதாரத்தடைகள் அகற்றப்படுவதற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முயற்சியைப் பாராட்டியபோதுதான் திருஅவையின் இரகசிய நல் முயற்சிகள் பலருக்குத் தெரியவந்தன.

1959ம் ஆண்டு முதல் கியூபாவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே இருந்த பனிப்போர் திருத்தந்தந்தையின் தீராத முயற்சியால் 2015ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் முடிவுக்கு வந்தது. ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைத் தலைவர் கிறில் அவர்களை 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தித்து, இரு கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையே நிலவிய ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான முரண்பாட்டை முடிவுக்குக் கொணர்ந்தார். ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டுமுறை தலைவரை ஒரு திருத்தந்தை சந்தித்தது அதுவே முதன்முறை.

அரசுச் சட்டங்கள் வழியாக மணமுறிவுப் பெற்று பிரிந்து வாழும் தம்பதியரையும் கருக்கலைப்பு செய்துள்ள தாய்களையும் ஒரே பாலின நாட்டமுடையோரையும் தீர்ப்பிடாமல் அவர்களைப் புரிந்துகொண்டு அவர்களின் பிரச்சனைகளை உணர நாம் முன்வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையில் இரக்கத்தின் யூபிலி ஆண்டை சிறப்பித்தது, உலக வறியோர் நாளை உருவாக்கியது, உலகில் மரணதண்டனையை எதிர்த்து வருவது, என பல நல்ல நடவடிக்கைகள் வந்து செல்கின்றன.

எல்லாவற்றிற்கும் முக்கிய நோக்கமாக இருப்பது, நாம் இன்னும் சிறந்ததொரு உலகை படைக்கவேண்டும் என்பதே.

இந்த திருத்தந்தையின் காலத்தில்தான் திருத்தந்தையர்கள் 23ம் ஜான், இரண்டாம் ஜோன்போல், ஆறாம் பவுல், அன்னை தெரேசா, இறை ஊழியர்கள் மற்றும் அவர்களின் 841 உடன் உழைப்பளர்கள் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கடந்த ஆறு ஆண்டுகால பணியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குடும்பம் இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றங்கள் உட்பட மூன்று உலக ஆயர்கள் மாமன்றங்களையும் திருஅவையில் சிறியோர் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஒரு மாமன்றத்தையும்  நடத்தியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் உலகின் நாற்பது நாடுகளில் 27 திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, திருஅவையின் 266வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரண்டு நாட்களுக்குப்பின் மார்ச் 16ம் திகதி ஏறத்தாழ 600 பத்திரிகையாளர்களை புனித ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்தார். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் முக்கியமானவை.

'நான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவ் வேளையில் என் அருகில் இருந்த பிரேசில் நாட்டு கர்தினால் Claudio Hummes அவர்கள் எனக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு ஏழைகளை மறந்துவிடாதீர்கள் என்றார். ஏழைகள் என்றதும் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களே. அவர் அமைதியின் மனிதர், ஏழ்மையின் மனிதர் மற்றும் இயற்கையைப் பாதுகாத்த மனிதர்',

அமைதி, ஏழ்மை, இயற்கை பாதுகாப்பு ஆகிய துறைகளில் திருத்தந்தையின் பணிகள் தொடர்வதை இன்றும் பார்க்கிறோம்.(ஸ)


Add new comment

Or log in with...