இலங்கைத் தேயிலையின் கவலைக்குரிய எதிர்காலம்! | தினகரன்


இலங்கைத் தேயிலையின் கவலைக்குரிய எதிர்காலம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கக் கோரும் போராட்டங்கள் மலையகத்தில் முடிவின்றி இன்னும்தான் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருவதைக் காண முடிகின்றது. இவ்விவகாரமானது நீண்ட காலமாக இழுபறி நிலையிலேயே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு கூட்டு ஒப்பந்தமும் சாதகமான தீர்வைத் தரவில்லை.

ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் அடியோடு உடன்படவில்லை. அதேசமயம் ஆயிரம் ரூபாவுக்குக் குறைவான நாட்சம்பளத்தை ஏற்றுக் கொள்வதற்கு மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்னும்தான் தயாராக இல்லை. ஆனாலும் அவர்களால் எதுவுமே செய்ய முடியாமல் போய் விட்டது. கூட்டு ஒப்பந்தமும் தொழிலாளரின் எதிர்பார்ப்பை மழுங்கடித்து விட்டது.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும், தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு விவகாரம் இன்னுமே இழுபறி நிலைமையில்தான் சென்று கொண்டிருக்கிறது.தொழிலாளர்கள் வேறு வழியின்றி விரக்தியுடன் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆயிரம் ரூபா தினச் சம்பளம் வழங்கப்படாது போனதால் மலையகப் பெருந்தோட்டங்களில் சாதகமான நிலைமையொன்று ஏற்படுமென எதிர்பார்க்க முடியாது. கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை ஒரு தீர்வாகத் தென்படவில்லை.ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது போனால், பெருந்தோட்டங்களை நிர்வகிப்பதைக் கைவிட்டு விட்டு கம்பனிகள் வெளியேறி விட வேண்டுமென தொழிலாளர்களின் சார்பில் குரல் எழுப்பப்படுவதையும் கேட்க முடிகின்றது.

அனைத்துச் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இவ்விடயத்தில் இணக்கப்பாட்டுக்கு வர முடியாமல் போனதாலேயே ஆயிரம் ரூபா கோரிக்ைக அமுங்கிப் போனதாக மலையக தோட்டத் தொழிலாளர்கள் இப்போது வேதனையுடன் கூறுகின்றனர். அதில் உண்மை இல்லாமலில்லை.

கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் போனாலும் இவ்விடயத்தில் தலையீடு செய்து தொழிலாளர்களின் மனவேதனையைப் போக்க வேண்டிய கடமை அரசுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் உண்டு. அதேசமயம் பெருந்தோட்டங்களை நிர்வகிக்கின்ற கம்பனிகள் மீது மறைமுக அழுத்தத்தைப் பிரயோகிக்கக் கூடிய வல்லமை அரசாங்கத்துக்கு உண்டு. எனவே அரசாங்கத்தின் அழுத்தத்தாலேயே தோட்டத் தொழிலாளர் சம்பள விடயத்தில் தொழிலாளர்களின் மன ஏக்கத்துக்கு நிரந்தரமான தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு வழியுண்டு என்பது உண்மை.

இது ஒருபுறமிருக்க, மலையகப் பெருந்தோட்டங்களை அரசாங்கம் மீண்டும் தனது நேரடிப் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகள் தற்போது வலுவடைந்து வருகின்றன. பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்களாக இருந்த போதிலும், சிங்கள அரசியல்வாதிகளே அம்மக்களின் அவல நிலைமை தொடர்பாக பரிதாபப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

பெருந்தோட்ட நிர்வாகங்களை முன்னரைப் போல அரசாங்கம் பொறுப்பேற்று அம்மக்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்குவதுடன் மாத்திரமின்றி, அம்மக்களின் வாழ்க்கை நிலைமையை நாட்டின் ஏனைய மக்களுக்கு நிகராக கட்டியெழுப்ப வேண்டுமென்ற கோரிக்கையையும் சிங்கள அரசியல்வாதிகள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற சம்பளம் அநீதியானதென்பதையே இக்ேகாரிக்ைககள் எமக்கு உணர்த்துகின்றன. அதேசமயம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் இனமத பேதம் நோக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டமை நினைவிருக்கலாம்.

இன்றைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை அடிப்டையாக வைத்துப் பார்க்கின்ற போது, குடும்பமொன்று நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாவுடன் சீவியம் நடத்துவதென்பது முடியாத காரியம். தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட தேவை உணவு மட்டுமல்ல. கல்வி, சுகாதாரம், உடை, உறையுள் என்றெல்லாம் அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் நிறையவே இருக்கின்றன என்பதை புரிந்து கொள்வது அவசியம். இவ்வாறான நிலையில் ஆயிரம் ருபாவென்பது இன்றைய காலத்தில் அற்பமான சாதாரண தொகையாகும். ஆனால் அந்த ஆயிரம் ரூபாவும் அவர்களுக்குக் கிடைக்காமல் கைநழுவிப் போய் விட்டது.

பெருந்தோட்டக் கம்பனிகளைப் பொறுத்தவரையில் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதென்பது இயலுமான காரியமென்று மலையக தொழிற்சங்கங்கள் முன்னர் சுட்டிக் காட்டியிருந்ததையும் இவ்விடத்தில் நினைவு கூருவது பொருத்தமாகும்.

மலையக பெருந்தோட்டத் துறையுடன் சம்பந்தப்படுகின்ற அனைத்துத் தரப்பினரும் முதலில் ஒரு விடயத்தை உணர்ந்து கொள்வது அவசியம். முன்னொரு காலத்தில் உலக அரங்கில் முதன்மைத் தரம் பெற்று விளங்கிய ‘இலங்கை தேயிலை’ தற்போது தனது நன்மதிப்பை படிப்படியாக இழந்து கொண்டு வருகின்றது.

பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்தப்படவில்லை. தேயிலைத் தோட்டங்கள் மீளுருவாக்கம் செய்யப்படாததால் அவை அழிவடைந்து செல்கின்றன. அதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் அவல வாழ்வைப் போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் அவர்கள் விரக்தி நிலையிலேயே உள்ளனர்.தொழிலாளர்கள் விரக்தி நிலைமையில் இருக்ைகயில் தேயிலைத் தொழில்துறையை முன்னேற்றுவதென்பது முடியாத காரியம்.

சம்பள உயர்வைப் பொறுத்த வரை தோட்டத் தொழிலாளர்களின் நிறைவேறாமல் போன கனவை அலட்சியப்படுத்த முடியாதிருக்கிறது. சம்பள விவகாரம் மாத்திமன்றி பெருந்தோட்டத்துறையை மீளக்கட்டியெழுப்பும் காத்திரமான நடவடிக்கைகளும் அவசியம். இல்லையேல் இலங்கைத் தேயிலையின் நாமம் முற்றாக மங்கி விடுமென்பது கசப்பான உண்மை.


Add new comment

Or log in with...