'தமிழர்களின் இருப்பை தக்கவைக்க கட்சி பேதங்களை மறந்து செயற்படுங்கள்' | தினகரன்

'தமிழர்களின் இருப்பை தக்கவைக்க கட்சி பேதங்களை மறந்து செயற்படுங்கள்'

தமிழ் மக்களுடைய இருப்பைத் தக்கவவைத்து தீர்வைப் பெறுவதற்காக வடக்கு கிழக்கிலுள்ளவர்கள் போராடுவது போன்று அரசிற்குள் இருந்தும் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். தமிழ் மக்களுக்காக எனது பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வரத் தயாராகவே இருக்கின்றேன். ஆகவே ஒரு அரச அமைச்சராக அப்பாவியான என்னை குறை கூறாதீர்கள் என தெரிவித்திருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், தமிழ் மக்களின் கலை, கலாசாரம் பாதுகாக்கப்பட்டு இருப்பைத் தக்க வைப்பதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் கூட்டிணைந்து செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.  

கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கம்பன் விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.. 

பௌத்த மேலாதிக்க சிந்தனை என்பது இன்று நேற்று வந்த சிந்தனை அல்ல. அது நீண்டகாலமாகவே அவர்களிடமிருக்கின்ற ஒரு சிந்தனை தான். இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த நாட்டிற்கு முழுமையான சொந்தக்காரர்கள் தாம் தான் என்ற ஒரே எண்ணப்பாடு அன்றிலிருந்து இன்றுவரை அவர்களிடத்தே இருக்கின்றது.  

நாட்டில் ஆட்சிக்கு வருகின்ற பச்சை, நீலம், சிவப்பு என மைத்திபால அனைத்து ஆட்சியாளர்களும் இதனைத் தான் செய்கின்றார்கள். இதனையே இங்குள்ள பலரும் எதிர்கிக்னறனர்.   அது போன்றே அரசிற்குள்ளே இருந்து கொண்டு நானும் எதிர்த்து வருகின்றேன். தமிழ் மக்களின் பல பிரச்சனைகளுக்காக நீங்கள் வெளியே இருந்து போராடுகின்றீர்கள், நாங்கள் அரசிற்கு உள்ளே இருந்து போராடுகின்றோம். ஆகவே எங்கள் இலக்குகள் ஒன்று தான். ஆகையினால் அரசிற்குள்ளே இருக்கின்ற அமைச்சர் வந்துவிட்டார் என்று அப்பாவியான என்னைக் குறை சொல்ல கூடாது.  

எமது இருப்பை உறுதிப்படுத்துவதற்கு தனிநாடு, சமஷ்டி, வடக்கு கிழக்கு இணைப்பு என ஏதாவது வந்தால் தமிழர்கள் தமிழர்களாக வாழ்வதற்கான இருப்பை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆகவே தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க கட்சி பேதமில்லாமல் தமிழர்களாக நாங்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

(பருத்தித்துறை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...