ஆப்கான் 2ஆவது டெஸ்ட் போட்டியிலேயே கன்னி டெஸ்ட் வெற்றி | தினகரன்

ஆப்கான் 2ஆவது டெஸ்ட் போட்டியிலேயே கன்னி டெஸ்ட் வெற்றி

ஆப்கான் 2ஆவது டெஸ்ட் போட்டியிலேயே கன்னி டெஸ்ட் வெற்றி-Only Test-AFG Taste First Test vIreland-AFGvIRE

ஆப்கானிஸ்தான் அணி தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியை 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் தெஹ்ரா டென்னில் இடம்பெற்ற அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில், இவ்வெற்றியை ஆப்கானிஸ்தான் அணி வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன், மிக குறைந்த போட்டிகளில் முதலாவது டெஸ்ட் வெற்றியை பெற்ற அணியாக ஆப்கானிஸ்தான் அணி, தனது பெயரை பதிவு செய்துள்ளது.

ஆப்கான் 2ஆவது டெஸ்ட் போட்டியிலேயே கன்னி டெஸ்ட் வெற்றி-Only Test-AFG Taste First Test vIreland-AFGvIRE

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு, சர்வதேச கிரிக்கட் சபையினால் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் திகதி டெஸ்ட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் டெஸ்ட் வாய்ப்பைப் பெறும் 11வது மற்றும் 12வது அணிகளாக இரு அணிகளும் வாய்ப்பை பெற்றன. ஆப்கானிஸ்தான் அணி 2009 ஆம் ஆண்டு ஒரு நாள் சர்வதேச போட்டிக்கான வாய்ப்பை பெற்றதோடு, அயர்லாந்து 2005 இல் அவ்வாய்ப்பை பெற்றிருந்தது.

ஆப்கானிஸ்தான் அணி கடந்த வருடம் (2018) பெங்களூரில் தனது கன்னி டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் விளையாடியிருந்தது. கடந்த ஜூன் 14 ஆம் திகதி இடம்பெற்ற இப்போட்டியில் இந்திய அணி 262 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் ஒரே ஒரு போட்டியை கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளது.

ஆப்கான் 2ஆவது டெஸ்ட் போட்டியிலேயே கன்னி டெஸ்ட் வெற்றி-Only Test-AFG Taste First Test vIreland-AFGvIRE

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது. தரவே முதல் இன்னிங்ஸிற்காக 172 ஓட்டங்களைப் பெற்ற அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 288 ஓட்டங்களை பெற்றது.

இப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 314 ஓட்டங்களைப் பெற்றது. அந்த வகையில் வெற்றி பெறுவதற்கு 147 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில்  3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 149 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இச்சாதனையை அவ்வணி புரிந்துள்ளது.

பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக பிரகாசித்த ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முதல் இன்னிங்ஸிற்காக, ரஹ்மத் ஷாஹ் 98 ஓட்டங்களையும், அணித் தலைவர் அஸ்கர் ஆப்கான் 67 ஓட்டங்களையும், ஹஸ்மதுல்லாஹ் ஷஹீதி 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இரண்டாம் இன்னிங்ஸிற்காக இன்சானுல்லாஹ் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களையும், ரஹ்மத் ஷாஹ் 76 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இப்போட்டியில் பந்துவீச்சில் யமீன் அஹ்மத்சாய் மொத்தமாக 6 விக்கெட்டுகளையும், ரஷீட் கான் 7 விக்கெட்டுகளையும், மொஹம்மட் நபி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக, சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ரஹ்மத் ஷாஹ் தெரிவானார்.

இந்தியாவின் தெஹ் டன்னில் இடம்பெற்ற, இத்தொடர் முழுவதிலும் செல்வாக்குச் செலுத்திய ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரை 3 - 0 எனவும், 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை 2 - 2 என சமப்படுத்தியிருந்தது. இரண்டாவது ஒரு நாள் போட்டி, ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், 49.3 ஓவரில் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.

அயர்லாந்து 172, 288
ஆப்கானிஸ்தான் 314, 149/3 (47.5)
வெற்றி இலக்கு : 147


Add new comment

Or log in with...