வரவு - செலவுத்திட்டம்; வர்த்தக சமூக ஊக்குவிப்பை வரவேற்கும் வரி நிபுணர்கள் | தினகரன்

வரவு - செலவுத்திட்டம்; வர்த்தக சமூக ஊக்குவிப்பை வரவேற்கும் வரி நிபுணர்கள்

2019ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டமானது நிலையான கொள்கைகள் மற்றும் வியாபார சமூகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலான ஒருங்கிணைந்த திட்டங்களை முன்வைக்கும் விதமாக அமைந்துள்ளது. இதனால் அரசாங்கத்தின் நலன்புரித் திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என துறைசார் வரி நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

பொருளாதார சேவைக் கட்டணத்தை 0.5 வீதத்திலிருந்து 0.25 வீதமாகக் குறைத்தமை, ஏற்றுமதியினால் கிடைக்கும் வருமானம், ஏற்றுமதிக்கான துறைமுகக் கட்டணம், கப்பல் போக்குவரத்து சேவை, கப்பல் முகவர் சேவை, கப்பல் பழுதுபார்த்தால் போன்றவற்றுக்கு 14 வீத வரிச் சலுகை வழங்கப்படுவது மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைக்கு 14 வீத வரிச் சலுகை போன்ற யோசனைகள் வியாபார சமூகத்தை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

கேபிஎம்ஜி நிறுவனத்தின் வரிக் கட்டுப்பாட்டு அதிகாரி சுரேஷ் பெரேரா குறிப்பிடுகையில், பொருளாதார சேவைக் கட்டணம் குறைக்கப்பட்டமையானது நிறுவனங்களில் நிதியின் பயன்பாட்டினை அதிகரிக்கும் என்பதுடன் வளர்ச்சிக்கும் உதவுவதாக அமையும் என்றார். 

2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் திகதிநடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட புதிய இறைவரிச் சட்டத்தின் ஊடாக ஏற்றுமதியாளர்கள் ஆகக் குறைந்த வருமானத்துக்கு 14 வீத வரிச் சலுகையை பெறுவதற்கு உரித்துடையவர்கள். எனினும், ஏற்றுமதிமூலம் 80 வீதத்துக்கும் அதிகமான தேறிய வருமானம் கிடைத்தால் மாத்திரமே இந்த சலுகையைப் பெற்றுக் கொள்ள முடியும்.  'தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத்திட்டமானது ஏற்றுமதியாளர்களின் தேறிய வருமானத்தை கணிப்பிடுவது எவ்வாறு என்று தெளிவாகக் கொண்டுள்ளது.

முதலீட்டு வருமானம் இதிலிருந்து நீக்கப்பட்டிருப்பதுடன், இதற்கு 28 வீத வரி அறவிடப்படுகிறது'என்றார். 

அது மாத்திரமன்றி இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள், சுற்றுலாத்துறை என்பவற்றுக்கு வரிச்சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானமானது நாட்டின் பொருளாதாரத்துக்கு கணிசமான பங்களிப்பைச் செலுத்தும் என்றும் வரி நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  

'இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்த சுற்றுலாத்துறை ஹோட்டல்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களுக்கு தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி நீக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் நாணயமாற்று வீத சட்டம் மற்றும் நாணய சட்டம் என்பவற்றில் சில வரையறைகளும் முன்மொழியப்பட்டுள்ளன' என்றும் பெரேரா தெரிவித்தார். 

கடனட்டை மற்றும் டெபிட் அட்டைகள் மூலம் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுக் கொடுப்பனவுகளுக்கு 3.5 வீத தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அறவிடப்படும் யோசனை விசேடமாகப் பேசப்படுகிறது.

கடனட்டைகளைப் பயன்படுத்தி வெளிநாட்டுக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது தற்பொழுது 2.5 வீத முத்திரை வரி அறவிடப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு சாதகமான விடயங்கள் வர்த்தக சமூகத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.     


Add new comment

Or log in with...