சுற்றுலாத்துறை முன்னேற்றத்துக்கு 14பேருடன் புதிய ஆலோசனைக்குழு | தினகரன்

சுற்றுலாத்துறை முன்னேற்றத்துக்கு 14பேருடன் புதிய ஆலோசனைக்குழு

இவ்வருடத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை 3மில்லியனாக அதிகரிப்பதற்கு புதிய ஆலோசகர் குழுவொன்றை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க நியமித்துள்ளார். முக்கிய வியாபாரப் புள்ளி ஹரி ஜயவர்த்தன தலைமையில் 14பேரைக் கொண்டதாக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இதில் முன்னணிதொழிலதிபர்களான தம்மிக்க பெரேரா (ஹெய்லிஸ்), மெரில் பொர்னான்டோ (டில்மா), அபாஸ் இசுபலி (ஹேமாஸ்), சஞ்சீவ் கார்டினர் (கோல்பேஸ் ஹோட்டல் குழுமம்), கிரிஷ் பாலேந்திரா (ஜோன் கீல்ஸ்), ஷிரோமல் குரே (ஜெட்விங்) உட்பட முன்னணி நிறுவனங்களின் தலைவர்களே உள்ளடங்குகின்றனர். 

புதிதாக நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் முதல் தடவையாகக் கூடியது.

சுற்றுலாத்துறையின் நான்கு நிறுவனங்களின் தலைவர்கள் சுற்றுலாத்துறை தொடர்பான முன்னேற்ற அறிக்கைகளை இந்தக் குழுவிடம் சமர்ப்பித்தனர்.  

சுற்றுலாப் பயணிகளின் வருகை இதுவரை இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது.

இவ்வருடத்தில் நடைபெறவிருக்கும் பாரிய சர்வதேச நிகழ்வுகளின் ஊடாக பெரும் எண்ணிக்கையான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

அரசியல் சூழல், பாதுகாப்பு நிலைமைகள் என்பன பலப்படுத்தப்பட்டு இவ்வருடத்தின் இறுதிப் பகுதியில் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

வனஜீவராசிகள் விடயத்தை சுற்றுலாத்துறை அமைச்சுடன் இணைத்திருப்பது சிறந்ததொரு நடைமுறையாகும் எனக் குறிப்பிட்ட ஆலோசனைக் குழுவின் தலைவர் ஹரி ஜயவர்த்தன, இதனால் பல பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.  

விமான நிலையத்தின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜோன் கீல்ஸின் தலைவர் கிரிஷ் பாலேந்திரா, 2020ஆம் ஆண் 4மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைப்பதாயின் அதற்குரிய விமான நிலைய வசதிகள் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். விமான நிலையத்தில் புதிதான 'டேர்மினல்' ஒன்றை அமைப்பது நீண்டகாலத்துக்கான மாற்று வழியாக இருக்காது. அவசரத்துக்கான மாற்றாக மாத்திரமே அமையும் என்றார். 

சுற்றுலாத் துறையின் ஊடாக அடுத்த இரண்டு வருடத்தில் 7 பில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டுவது இலக்காகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   


Add new comment

Or log in with...