2018ல் ஏற்றுமதித்துறை 4.7 வீதத்தால் அதிகரிப்பு | தினகரன்

2018ல் ஏற்றுமதித்துறை 4.7 வீதத்தால் அதிகரிப்பு

மத்திய வங்கி தகவல்  

வணிகப்பொருள் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் கடந்த டிசம்பர் மாதம் 1.4 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது 1,033 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  

2017ஆம் ஆண்டின் அதே காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் இது முன்னேற்றகரமான நிலைமையாக அமைந்துள்ளது.  

ஏற்றுமதி வருவாய்களின் வளர்ச்சிக்கு கைத்தொழில் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பு முக்கியமாகப் பங்களித்தன. எனினும், வேளாண்மை மற்றும் கனிப்பொருள் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தன. கைத்தொழில் ஏற்றுமதிகளிலிருந்தான ஏற்றுமதி வருவாய்கள் 2018 டிசம்பர் மாதம் அதிகரித்தமைக்கு புடவைகள் மற்றும் ஆடைகளின் உயர்ந்த ஏற்றுமதிகளே முக்கிய காரணமாகும்.  

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆடைகளுக்கு ஏற்பட்ட உயர்ந்த கேள்வி இத்துணைத் துறையிலிருந்தான ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு உதவின.

இறப்பர் உற்பத்திகளிலிருந்தான ஏற்றுமதி வருவாய்கள் இம்மாத காலப்பகுதியில் அதிகரித்தமைக்கு அறுவைச் சிகிச்சை மற்றும் ஏனைய கையுறைகள் தவிர்ந்த மற்றைய அனைத்து வகைகளினதும் மேம்பட்ட செயலாற்றமே காரணமாகும். உணவு, குடிபானங்கள் மற்றும் புகையிலை, பொறிகள் மற்றும் எந்திர சாதனங்கள், அடிப்படை உலோகங்கள் மற்றும் அவற்றின் பொருட்கள், இரசாயன உற்பத்திகள் மற்றும் போக்குவரத்துச் சாதனங்கள் என்பனவற்றிலிருந்தான ஏற்றுமதி வருவாய்களும் உயர்வடைந்தன. 

எனினும், ஆண்டின் முதல் 11 மாத காலப்பகுதியில் சிறந்த செயலாற்றத்தினைக் கொண்டிருந்த பெற்றோலிய உற்பத்திகளிலிருந்தான ஏற்றுமதி வருவாய்கள் டிசம்பர் மாதம் வீழ்ச்சியடைந்தமைக்கு இலகு எண்ணெய் ஏற்றுமதிகளின் குறைந்தளவே காரணமாகும். எனினும், நீர்க்கல மற்றும் வானூர்தி எரிபொருட்களின் ஏற்றுமதிகள் இம்மாத காலப்பகுதியில் அதிகரித்தன.  ஒன்று சேர்ந்த அடிப்படையில் ஏற்றுமதி வருவாய்கள் 2017இன 11,360 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2018ல் 11,890 மில்லியன் அமெரிக்க டொலராக அதாவது 4.7 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு கைத்தொழில் ஏற்றுமதிகள் தூண்டுதலாக அமைந்த வேளையில் வேளாண்மை மற்றும் கனிப்பொருள் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தன. 

ஒன்று சேர்ந்த அடிப்படையில் 2018இல் ஏற்றுமதி அளவுச் சுட்டெண் 0.5 சதவீதத்தினால் சிறிதளவால் அதிகரித்த வேளையில் ஏற்றுமதி அலகு பெறுமதிச் சுட்டெண் 4.1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.   

(மகேஸ்வரன் பிரசாத்)


Add new comment

Or log in with...