கப்பல் துறையை தாராளமயப்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் முனைவு | தினகரன்

கப்பல் துறையை தாராளமயப்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் முனைவு

கப்பல்துறை தாராளமயப்படுத்தலின் முதல் கட்டமாக கப்பல் முகவர்களின் வெளிநாட்டு உரிமை 60வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

அதேநேரம் புதிய துறைமுக முனையத்தை அமைப்பது தொடர்பான கேள்விப்பத்திரம் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்த டனிஷ் கப்பல் போக்குவரத்து நிறுவனமான மார்க்ஸ் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளன. 

கப்பல்துறையை தாராளமயப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக பொருளாதார கொள்கைகள் மற்றும் சர்வதேச அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்குத் தெரிவித்திருப்பதாக முதலீட்டுச் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் முதற்கட்டமாக கப்பல் முகவர் கம்பனிகளில் வெளிநாட்டவர்களுக்கு 60வீத உரிமை வழங்கப்படவிருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது விடயத்தில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துடன் நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் அவசியமானதாகும். அது மாத்திரமன்றி இதனை விருத்தி செய்வதன் ஊடாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளையும் நாட்டுக்குள் கொண்டுவர முடியும்.  

கப்பல் முகவர் கம்பனிகளில் 40வீத உரிமையையே வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டிருக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தப்போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.  

இதேவேளை, 8வது தடவையாக நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை முதலீட்டு கலந்துரையாடலில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவிருப்பதுடன், குறிப்பாக கப்பல் துறையை தாராளமயப்படுத்துவது தொடர்பில் முடிவுகள் எட்டப்படும் என்றும் முதலீட்டு ஊக்குவிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத் தரப்பினர், கப்பல்துறை அமைச்சு, நிதியமைச்சு மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் நடத்தப்படும் உயர்மட்டக் கலந்துரையாடல்களில் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளுக்கு கேள்விப்பத்திரம் கோருவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...