சிறப்பாக நடந்தேறிய கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா | தினகரன்

சிறப்பாக நடந்தேறிய கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா

ஒன்பதாயிரம் பக்தர்கள் பங்கேற்பு 

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு நேற்று முன்தினம் (16) வெகு விமரிசையாக இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து சுமார் 8ஆயிரத்து 635பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.  

கச்சதீவுக்கு இம்முறை இந்தியாலிருந்து 64படகுகள், வள்ளங்களில் 2135பேரும் இலங்கையிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான படகுகளில் 6500பேரும் கச்சதீவுக்கு வருகை தந்திருந்தனர். அத்துடன் இரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 200இற்கும் மேற்பட்ட மதகுருமார்களும் அருட்சகோதரிகளும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.  

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை கூடுதலான இலங்கை பக்தர்கள் கலந்துகொண்டதைக் காண முடிந்தது.  

கடந்த வெள்ளிக்கிழமை15ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகியதுடன் மாலை சிலுவைப்பாதையும் இடம்பெற்றது. அத்துடன் சனிக்கிழமை காலை சிறப்பு திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்றதுடன் கொடி இறக்கமும் இடம்பெற்றது.  

கடற்படையின் அதிவேக படகான டோராவின் மூலம் காங்கேசன்துறையிலிருந்து கச்சதீவுக்கு யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் உட்படவிஷேட பிரமுகர்கள் அழைத்து வரப்பட்டனர். ஆயர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையைத் தொடர்ந்து திருப்பலி பூஜை இடம்பெற்றது. இலங்கை சார்பில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் நெடுந்தீவு பங்குதந்தையும் இந்தியாவின் சார்பில் இராமேஸ்வரம் சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு அருட்தந்தை ஜோசப் லூதர் ராஜாவும் விஷேடமாக அருட்தந்தை ரொபின்சன் விஜேசிங்க சிங்கள மொழியிலும் திருப்பலி பூஜையை நடத்தினர்.  

யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தின் முழுமையான வழிகாட்டலில் இலங்கை கடற் படையினரின் பூரண உதவியுடனும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேஷ் ராகவன், யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம், நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வருடாந்த திருவிழாவில் யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம், பாதுகாப்புபடைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் த சில்வா, வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரின் விக்ரமசிங்க, மல்லாகம் மஜிஸ்திரேட் நீதவான் அலெக்ஸ் ராஜா, ஊர்காவத்துறை நீதவான் ஏ. யூட்சன்,யாழ் மாநகரமுதல்வர் இமானுவல் ஆர்னொல்ட், இந்தியதுணைத் தூதுவர் பாலச்சந்திரன் உட்படமுக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.  

மீனவ மக்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய,கடலுக்கு அதிபதியாக விளங்கும் புனித அந்தோனியார் தேவாலயம் என கிறிஸ்தவர்களினால் போற்றப்படுகின்ற கச்சதீவு திருவிழாவிற்கு இம்முறை இலங்கையைச் சேர்ந்த பக்தர்களே அதிகமாக கலந்துகொண்டிருந்தனர். இவர்களில் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள பக்தர்கள் இம்முறை கூடுதலாகக் கலந்துகொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது.  

இந்தியாவிலிருந்து வருகை தந்த பக்தர்கள் இந்திய கடற்படை மற்றும் இந்திய கரையோர பாதுகாப்புப் படையினரின் வழித்துணையுடன் சர்வதேச கடல் எல்லைவரை அழைத்துவரப்பட்டதுடன் அங்கிருந்து கச்சதீவுவரை இலங்கை கடற்படையின் வழித்துணையுடனும் அழைத்துவரப்பட்டனர்.  

இதேவேளை, கச்சதீவு வருடாந்த திருவிழா நிகழ்வில் பங்குகொள்ள வருகை தரும் விஷேட பிரமுகர்களுக்கான கடல் போக்குவரத்துவசதிகளையும் இலங்கைகடற்படையினர் திட்டமிட்டஅடிப்படையில் ஏற்பாடுசெய்திருந்தனர்.  

அத்துடன் திருவிழாவைமுன்னிட்டுசுமார் 2000 மெற்றிக் தொன் பொருட்களைக் கடற்படையினர் தங்களது படகுகளில் கச்சதீவுக்குக்கொண்டு சென்றதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் த சில்வா தெரிவித்தார். பக்தர்களின் வருகை அதிகரிக்கும் பட்சத்தில் விநியோகிக்கும் நோக்கில் தேவையான பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட கப்பல் ஆழ்கடலில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தின் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் நிருவகிக்கப்பட்டுவருகின்ற இந்த கச்சதீவு,சுமார் 285 ஏக்கர் பரப்பளவைக் கொண்டபகுதியாகும். காங்கேசன்துறையிலிருந்து சுமார் 49 கடல் மைல் தொலைவிலும் (90 கிலோமீற்றர்) நெடுந்தீவிலிருந்துசுமார் 11 கடல் மைல் தொலைவிலும் (20கிலோமீற்றர்) சர்வதேச கடல் எல்லையிலிருந்து ஒரு கடல் மைல் தொலைவிலும் (1.8 கிலோமீற்றர்) இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து 12.5 கடல் மைல் தொலைவிலுமே இந்தத் தீவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

(கச்சதீவிலிருந்து ஸாதிக் ஷிஹான், ஏ.மொஹமட் பாயிஸ், புங்குடுதீவு குறூப் நிருபர்)  


Add new comment

Or log in with...