Friday, March 29, 2024
Home » உண்மை பேசுதலின் சிறப்பு

உண்மை பேசுதலின் சிறப்பு

by Gayan Abeykoon
December 29, 2023 11:25 am 0 comment

த்தனை சோதனைகள் வந்த போதிலும் உண்மை பேச வேண்டும். இதை திருக்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளது. இறையச்சம் மிக்க மனிதனின் அன்றாட வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்று அல் குர்ஆனும், நபிமொழிகளும் விரிவாக எடுத்தியம்பியுள்ளன.

ஒரு மனிதன் தன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான நற்குணம் உண்மை பேசுதலாகும். சொல்லிலும், செயலிலும் உண்மையாக நடந்துகொள்ளுதல் வேண்டும்.

இஸ்லாத்தின் பார்வையில் உண்மை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதற்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் அனுப்பிய இறைத்தூதர்களை எடுத்துக்கொள்ளலாம். முதல் இறைத்தூதர் ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை வந்த அனைத்து இறைத்தூதர்களும் உண்மையைப் பேசி அதன் வழி நடந்துள்ளார்கள். எத்தனை சோதனைகள் வந்த போதிலும் அவர்கள் உண்மையில் இருந்து தவறவில்லை. இதை திருக்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளது.

“(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமை பற்றியும் (சிறிது) கூறுங்கள். நிச்சயமாக அவர் மிக்க உண்மையானவராகவும் நபியாகவும் இருந்தார்” (19:41)

இத்ரீஸ் (அலை) அவர்கள் குறித்து கூறும்போது, “(நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுங்கள். நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் (நம்முடைய) நபியாகவும் இருந்தார்”. (19:56)

இறுதித்தூதர் முகம்மது (ஸல்) அவர்களை மக்கள் ‘உண்மையாளர்’, ‘நம்பிக்கையாளர்’ என்றே அழைத்தனர். அந்தளவுக்கு இன, மத வேறுபாடு இன்றி அவரது சொல்லும், செயலும் அன்றாட வாழ்க்கையின் அனைத்து செயற்பாடுகளிலும் உண்மையானதாக அமைந்திருந்தது.

இறை நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது, இறைவனுக்கு அஞ்சி நடக்க வேண்டும், மறுமை மீது நம்பிக்கை கொள்ள வேண்டும், உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று அல் குர்ஆன் வலியுறுத்தியுள்ளது.

“இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள், மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்”. (9:119)

ஒரு மனிதன் உண்மையைப்பேசி, உண்மையாக நடந்து கொண்டால் அந்த செயலின் மூலம் அவன் சொர்க்கத்திற்கு செல்ல முடியும் என்று நபிமொழிகள் குறிப்பிடுகின்றன.

‘உண்மை நன்மைக்கே வழிகாட்டும். நன்மை சுவனத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதன் உண்மையையே பேசி, உண்மையையே தேடினால் அல்லாஹ்வின் ஏட்டில் அவன் ஓர் உண்மையாளன் என்று எழுதப்படுவான். பொய் பாவத்திற்கு வழிகாட்டும். பாவம் நரகிற்கு வழிகாட்டும். ஒரு மனிதன் பொய் பேசும் காலமெல்லாம் அல்லாஹ்வின் ஏட்டில் அவன் ஒரு பொய்யன் என்று எழுதப்படுவான்’. (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

‘உண்மை பேசுவதாக எனக்கு உத்தரவாதம் தாருங்கள். சுவனத்தை நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகின்றேன்’.

(ஆதாரம்: அஹ்மத்).

‘உண்மை என்பது மன அமைதியைத் தரும். பொய் என்பது கலக்கத்தைத் தரும்’.

(ஆதாரம்: திர்மதி, அஹ்மத்).

இவ்வாறு உண்மை பேசுதலின் முக்கியத்துவத்தை நபி(ஸல்) அவர்கள் எடுத்தியம்பியுள்ளார்கள்.

மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. இவ்வாழ்க்கையில் உள்ள உலக இன்பங்களில் மயங்கி பொய்யும், புறமும் பேசி வாழ்வது மறுமை வாழ்வை வீணடித்துவிடும். அந்த பாவச்செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

எனவே உண்மையே பேசுவோம், நன்மைகளையே நாடுவோம். எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள்புரியட்டும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT