சுற்றாடல் பாதுகாப்பு விடயத்தில் சர்வதேசத்தின் கரிசனை | தினகரன்

சுற்றாடல் பாதுகாப்பு விடயத்தில் சர்வதேசத்தின் கரிசனை

நாம் வாழும் சுற்றாடல் மிக வேகமாக மாசடைந்து கொண்டு வருகின்றது. புவியின் சுற்றாடல் இவ்வாறு தொடர்ந்து மாசடைந்து கொண்டு செல்லுமானால், புவியில் மனிதன் மாத்திரமன்றி எந்தவொரு உயிரினமுமே வாழ முடியாத நிலைமை ஏற்பட்டு விடக் கூடிய ஆபத்து உண்டு.

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாடு சமீபத்தில் கென்ய நாட்டின் நைரோபி நகரில் நடைபெற்றிருக்கும் இவ்வேளையில், சுற்றாடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை இலங்கையிலும் தீவிரப்படுத்துவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

புவியில் அனைத்து உயிரினங்களும் தொடர்ந்தும் நிலைத்து வாழ வேண்டுமானால் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்படுவது அவசியம். புவியின் சூழல் மென்மேலும் மாசுபடுத்தப்பட்டுக் கொண்டேயிருக்குமானால் உயிர் வாழ்க்கையென்பதே அச்சுறுத்தலுக்கு உள்ளாகி விடும்.

தரைச் சூழல், நீர்ச் சூழல், வளிச் சூழல் ஆகிய மூன்றுமே நாளுக்குநாள் வேமாக மாசடைந்து கொண்டு செல்கின்றன. இதற்குக் காரணம் மனிதனின் செயற்பாடுகள்!

உலகெங்கும் மக்களின் குடித்தொகை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சனத்தொகையின் அதிகரிப்புக்கேற்ப அனைத்துத் தேவைகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. மனிதன் தனது தேவைக்கான உற்பத்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதேசமயம் சௌகரியமான வாழ்க்கையையும் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றான்.

இவற்றின் விளைவினாலேயே எமது சுற்றாடல் மாசடைந்து கொண்டு செல்கின்றது.

விஞ்ஞான தொழில்நுட்பம் அபார வேகத்தில் வளர்ச்சியடைந்து வருவதனால், மனிதன் தனது தேவைகளுக்கான பொருட்களையும் தாராளமாக உற்பத்தி செய்து கொண்டேயிருக்கின்றான். இவற்றின் எதிர்விளைவுகள் தொடர்பாக மனிதன் சற்றேனும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இவ்வாறான எதிர்விளைவுகளாலேயே எமது சூழல் அன்றாடம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது.

எமது நாட்டின் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பை எடுத்துக் கொள்வோமானால், பிரதானமாக குறிப்பிடக் கூடிய காரணிகளாக பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகளே அமைந்திருக்கின்றன. இக்கழிவுகள் நிலச் சூழலை மாத்திரமன்றி நீர்ச்சூழலையும் மாசுபடுத்தி வருவது குறித்து சூழல் பாதுகாப்பு தொடர்பான நிபுணர்கள் தொடர்ந்தும் எச்சரிக்கை செய்தபடியே உள்ளார்கள். ஆனாலும் அதனால் குறிப்பிடத்தக்க பலாபலனை இன்னும்தான் எட்ட முடியாதிருக்கின்றது.

இலங்கையில் பொலித்தின், பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பதற்கான தீர்மானங்கள் பல தடவைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், அதற்கான பலாபலன்கள் எட்டப்படவில்லை. அரசின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் ஒருசில நாட்களுக்கு மட்டுமே தொடர்வது வழமை. அரசின் கட்டுப்பாடுகளுக்கு மாறாக பொலித்தீன் பைகளை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதுமுண்டு.

சில நாட்கள் சென்ற பின்னர் பொலித்தீன் கட்டுப்பாடு தொடர்பாக எவருமே கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. எமது நாட்டைப் பொறுத்த வரை சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பலவீனமான நிலைமை இதுதான்!

பிளாஸ்டிக்கும், பொலித்தீனும் எம்மை மீண்டும் ஆட்கொண்டு விட்டன. இவற்றில் இருந்து ஒருபோதுமே மீள முடியாத ஒரு நிலைமையே எமக்கு ஏற்பட்டிருக்கின்றது.

பொலித்தீனையும் பிளாஸ்டிக்கையும் தொடர்ந்தும் பயன்பாட்டில் வைத்துக் கொண்டு சுற்றாடல் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்துவது பயனற்ற காரியமாகும். இவையிரண்டுமே சுற்றாடல் பாதுகாப்பின் பிரதான எதிரிகளாக உள்ளன.

மண்ணுக்குள் செல்கின்ற பொலித்தீன் கழிவுகள் நூறு வருடங்களுக்குப் பின்னரும் சிதைவடையாமல் உள்ளதால் அவை நிலச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பைத் தருகின்றன. அதேசமயம் பொலித்தீனில் பொதி செய்யப்படுகின்ற உணவுப் பொருட்களால் மனிதனுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பொலித்தீன் பைகளுடன் சேர்த்து வீசப்படும் உணவுக் கழிவுகளை உட்கொள்வதனால் மாடுகள், யானைகள், மான்கள் போன்றனவெல்லாம் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

நீர்நிலைகளுக்குள் வீசப்படுகின்ற பிளாஸ்டிக் கழிவுகள் கண்களுக்குத் தெரியாத மிக நுண்ணிய துகள்களாகப் பிரிவடைந்து நீருடன் கலந்து விடுகின்றன. கடலின் மேற்பரப்பில் இவை மிதப்பதனால் ‘அல்காக்கள்' போன்ற கடல்வாழ் நுண்ணங்கிகளால் பச்சையத்தைக் கொண்டு உணவைத் தொகுத்துக் கொள்ள முடியாதிருக்கின்றது. பிளாஸ்டிக் நுண்துகள்கள் படிப்படியாக கடலை ஆக்கிரமிக்கத் தொடங்குமானால் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தரைச் சூழலையும் நீர்ச் சூழலையும் மாசுபடுத்துகின்ற இராசாயனக் கழிவுகள் தொடர்பாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாடு நடந்து முடிந்திருக்கும் இவ்வேளையில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

நாடெங்கும் தொழிற்சாலைகள் பெருகிக் கொண்டு செல்கின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகின்ற நச்சுப் புகையானது வளிமண்டலத்தை மாசுபடுத்துவது ஒருபுறமிருக்க, திரவக் கழிவுகளாலும் கூடுதல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகின்ற திரவக் கழிவுகள் நச்சு இரசாயனங்களைக் கொண்டுள்ளன. அவை நீர்நிலைகளைச் சென்றடையும் போது, மீன்கள் போன்ற உயிரினங்களின் உடலைச் சென்றடைகின்றன. மீன்களை உண்ணும் போது இரசாயனப் பொருட்கள் நேரடியாகவே மனித உடலைச் சென்றடைகின்றன.

நீர், நிலைகளின் சூழலில் வளருகின்ற கீரைகளை நாம் உண்ணும் போது நச்சு இரசாயனப் பதார்த்தங்களை உள்ளெடுக்கின்றோம்.

உலகெங்கும் மக்களுக்கு இன்றைய காலத்தில் ஏற்படுகின்ற கொடிய வியாதிகளுக்கெல்லாம் நச்சு இராசாயனப் பொருட்களே காரணமென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

புவியில் உயிரின வாழ்வுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்து வருகின்ற போதிலும், இவற்றில் இருந்து மீள்வதற்கான காத்திரமான நடவடிக்கைகள் உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் மேற்கொள்ளப்படுவதாக இல்லை.

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் பெருக்கம் அதிகரித்தபடியே செல்கின்றது. விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியும் அதிகரித்தபடியே உள்ளது.

மக்களின் தேவைகள் அதிகரிக்கும் போது அதற்கேற்றவாறு உற்பத்தியும் அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகும். ஆனாலும் எமது சுற்றாடலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாக தொடர்ந்தும் நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது. சுற்றாடல் எல்லை மீறி மாசடையுமானால் அதன் எதிர்வினையை புவியின் உயிரினங்களே அனுபவிக்க வேண்டியிருக்கும்.


Add new comment

Or log in with...