புத்தாக்க உற்பத்திக்கு அறிவுசார் சந்தை; வரவு - செலவுத்திட்டத்தில் கூடுதல் கவனம் | தினகரன்

புத்தாக்க உற்பத்திக்கு அறிவுசார் சந்தை; வரவு - செலவுத்திட்டத்தில் கூடுதல் கவனம்

புத்தாக்கமான உற்பத்திகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றமான உற்பத்திகளை மேற்கொள்வதற்கு அவசியமான அறிவுசார் சந்தையை ஏற்படுத்துவதற்கே அரசாங்கம் வரவுசெலவுத்திட்டத்தில் கவனம் செலுத்தியிருப்பதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோகம் தொடர்பான அமைச்சர் கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களின் தேவை களை மையாகக் கொண்ட வலையமைப்பிலிருந்து விடுபட்டு, உற்பத்தியை மையமாகக் கொண்ட வலையமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் ஊடாகவே நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

இதனை அடிப்படையாகக் கொண்டே புத்தாக்கமான உற்பத்திகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான உற்பத்திகளை அதிகரிக்க புதிய தொழில்முயற்சியாளர்களை பலப்படுத்த அரசாங்கம் முன்வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2019ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கும் நோக்கிலேயே கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

இளம் தொழில்முயற்சியாளர்கள் பலர் உருவாகி வருகின்றனர். அவர்களை மேலும் தைரியப்படுத்தும் நோக்கில் என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கடன்வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் புத்தாக்கமான உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளே அதிகரிக்கப்பட வேண்டும்.

பாரம்பரிய உற்பத்திகளிலிருந்து தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றமான உற்பத்திகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இதனைக் கருத்தில் கொண்டு மென்பொருள் தயாரிக்கும் தொழில்முயற்சிகளில் 55ற்கும் அதிகமானவர்கள் பணியாற்றினால் அவர்களின் சம்பளத்துக்கு வருமான வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆரம்ப நிலையில் உள்ள நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை மேலும் அதிகரித்து உலக சந்தைக்குத் தேவையான தொழில்நுட்ப சார் உற்பத்திகளை வழங்க முடியும் என்றார்.

நுகர்வோரை அடிப்படையாகக் கொண்ட வலையமைப்புக்களிலிருந்து விடுபட்டு உற்பத்தியை அடிப்படையாகக்கொண்ட வலையமைப்புக்களுக்குச் செல்ல வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்தியிருந்த ஆய்வில் இது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சம்பிரதாயமான உற்பத்திகளில் ஈடுபட்டால் பங்களாதேஷ் போன்ற தொழிலாளர் செலவு குறைந்த நாடுகளில் அதே உற்பத்திகள் செல்லத் தொடங்கும்.

இவ்வாறான சூழ்நிலையில் புத்தாக்கமான மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய உற்பத்திகளை மேற்கொள்வதே நாட்டை சிறந்த இடத்துக்குக் கொண்டு செல்ல வழிவகுக்கும்.

இந்தியா போன்ற நாடுகளுடன் போட்டிபோடுவதை விடுத்து இஸ்ரேல் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளுடன் போட்டிபோடவேண்டிய நிலைமையே தற்பொழுது ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.

இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கு சர்வதேச சந்தையில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் வெப்பம் மற்றும் குளிர் ஆகியவற்றிலிருந்து உற்பத்திகளைப் பாதுகாக்கும் களஞ்சியத் தொகுதிகள் அமைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். 5 ஆயிரம் மெற்றின் தொன்களை களஞ்சியப்படுத்தக் கூடிய வகையில் 6 அறைகளைக் கொண்ட களஞ்சியத் தொகுதியொன்று எதிர்வரும் மாதம் தம்புள்ளையில் அமைக்கப்படவிருப்பதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் பின்னர் தம்புள்ளை, எம்பிலிப்பிட்டிய, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலும் இவ்வாறான களஞ்சியங்கள் திறக்கப்படும். குளிர் மற்றும் வெய்யில் காலங்களில் மரக்கறிகள் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளைப் பாதுகாத்து அவற்றை சர்வதேச சந்தைக்கு அனுப்புவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான களஞ்சியத் தொகுதிகளில் முதலீடு செய்வதற்கு தனியார் துறையினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

அவ்வாறு முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களுக்காக சகல வரிகளையும் நீக்கியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...