விமானப் பயணச் சீட்டு நிறுவனமொன்று பண மோசடி; யாழ். பொலிஸில் முறைப்பாடு பதிவு | தினகரன்

விமானப் பயணச் சீட்டு நிறுவனமொன்று பண மோசடி; யாழ். பொலிஸில் முறைப்பாடு பதிவு

யாழ்ப்பாணத்தில் விமானப் பயணச் சீட்டுகளைக் பெற்றுக்கொடுக்கும் நிறுவனமொன்று, 70 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக, யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களே, தமது பணம் குறித்த நிறுவனத்தினால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்றும் (16) நேற்று முன்தினமும் (15) முறைப்பாடு செய்துள்ளனர்.

இதுவரையில் சுமார் 24 பேரிடம்  70 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெளிநாடுகளிற்குச் செல்லும் பயணிகளுக்கு விமானச் சீட்டுகளை மேற்படி நிறுவனம் பெற்றுக்கொடுத்து வந்துள்ளது. இதற்கமைய  யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா, கனடா, சுவிஸ், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளுக்குச் செல்லவுள்ள பயணிகள், தமது விமானப் பயணச் சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக இத்தனியார்  நிறுவனத்தில் பதிவு செய்துள்ளதுடன், இவ்வாறு பயணிப்பவர்கள் தமது ஒருவழி,  இருவழிப் பயணமாக கட்டணத்தையும் செலுத்தி விமானச் சீட்டுகளையும் பெற்றுக்கொண்டனர். இதன்  பின்னர்,  ஓரிரு தினங்களில் குறித்த நிறுவனத்திலிருந்து தொலைபேசியில் அறிவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டதுடன், பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற பின்னர், விமானச் சீட்டுகள் இரத்துச் செய்யப்பட்டதாகக் கூறி விமான நிலைய அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்ட  சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், பல தடவைகள் குறித்த நிறுவனத்திலிருந்து பயணிகளுக்கு விமானச் சீட்டுகள் இரத்துச் செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதுடன்,  மீண்டும் பதியுமாறும்  தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பயணிகள், தமது அவசர நிலையால் விமானச் சீட்டுகளை  வழங்கும் வேறு நிறுவனங்கள் ஊடாக பதிவு செய்து வெளிநாடுகளிற்குச் சென்று வந்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பயணிகள் செய்வதறியாது குறித்த நிறுவன அலுவலகத்திற்குச் சென்று குழப்பத்தில்  ஈடுபட்டதுடன், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் (15) சுமார் 30 பேர் யாழ்.  பொலிஸ் நிலையத்தில்  பண மோசடி தொடர்பில் தெரிவித்ததைத் தொடர்ந்து, 12 பேரின் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, நேற்றும்  (16) குறித்த  நிறுவனத்தின் உரிமையாளரை பொலிஸார் விசாரணை செய்தனர். இதேவேளை, பாதிக்கப்பட்ட மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் சென்றபோது, 12பேரின் முறைப்பாடுகள் பொலிஸாரினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுவரையில் 24 பேரிடம்  70 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸாரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், சுமார் 3 இலட்சம் மற்றும் 4 இலட்சம் ரூபா பணத்தை இழந்தவர்கள் சிறு குற்றப்பிரிவு பொலிஸ் பிரிவிலும் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர்)

 

 


Add new comment

Or log in with...