ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ண உதைபந்தாட்டம் இன்று கொழும்பில் கோலாகலமாக ஆரம்பம் | தினகரன்

ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ண உதைபந்தாட்டம் இன்று கொழும்பில் கோலாகலமாக ஆரம்பம்

கொழும்பு ஹமீத் அல் -ஹுசைனி கல்லூரியின் 80 ஆவது மாணவர் குழு ஏற்பாடு செய்துள்ள 12ஆவது வருடாந்த அழைப்புப் பாடசாலைகள் உதைபந்தாட்டப் போட்டி கொழும்பு சுகததாச அரங்கில் கோலாகலமாக இன்று ஆரம்பமாகிறது. இப் போட்டி ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ணத்துக்காக நடத்தப்படுகின்றது.

இவ் வருடம் அல் அஸ்ஹர் ம. க. (திஹாரிய), அல் முபாரக் ம.க. (மல்வானை), ஆனந்த (கொழும்பு), டி. எஸ். சேனாநாயக்க (கொழும்பு), டி மெஸினொட் (கந்தானை), தர்மதூத்த (பதுளை), கேட்வே (கொழும்பு), ஹமீத் அல் ஹுசைனி (கொழும்பு), இந்து (பம்பலப்பிட்டி), திருச்சிலுவை (களுத்துறை), இஸிபத்தன (கொழும்பு), லும்பிணி (கொழும்பு), மாரிஸ் ஸ்டெல்லா (நீர்கொழும்பு), முஸ்லிம் ம.க. (களுத்துறை), றோயல் (கொழும்பு), சென். தோமஸ் (கல்கிஸ்ஸை), புனித ஆசீர்வாதப்பர், (கொட்டாஞ்சேனை), புனித பேதுருவானவர் (பம்பலப்பிட்டி), வெஸ்லி (கொழும்பு) ஆகிய 19 பாடசாலைகள் பங்குபற்றுகின்றன. 16 அணிகள் சுற்று மற்றும் முன்னோடி கால் இறுதிப் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று காலை 9.30 மணி முதல் நடைபெறும்.

ஆரம்ப விழா வைபவம் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஹமீத் அல் ஹுசைனி அணிக்கும் பம்பலப்பிட்டி இந்து அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறும். தொடர்ந்து 17, 18, 20ஆம் திகதிகளில் முன்னோடி கால் இறுதிகள், கால் இறுதிகள் நடைபெறுவதுடன் 22ஆம் திகதி அரை இறுதிகளும் 30ஆம் திகதி 3ஆம் இடத்துக்கான போட்டியும் சம்பியனைத் தீர்மானிக்கும் போட்டியும் நடைபெறும். அரை இறுதிகளும் இறுதிப் போட்டியும் கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் நடைபெறும்.

ஒவ்வொரு போட்டியிலும் ஆட்டநாயகன் விருது வழங்கப்படும். அத்துடன் சுற்றுப் போட்டியில் அதி சிறந்த கோல்காப்பாளர், அதிக கோல்போடும் வீரர், பெறுமதிவாய்ந்த வீரர் ஆகிய விருதுகளும் வழங்கப்படும்.

(பரீத் ஏ றகுமான் )

 


Add new comment

Or log in with...