பாவனையின்றியுள்ள டிரக்டர்களை பாவனைக்கு விடக் கோரிக்கை | தினகரன்

பாவனையின்றியுள்ள டிரக்டர்களை பாவனைக்கு விடக் கோரிக்கை

வடக்கு  மாகாணத்தில் உள்ள கமநல சேவைத் திணைக்களங்களில் பாவனையின்றி இருக்கும் பல  நூற்றுக்கணக்கான உழவு இயந்திரங்களை பாவனைக்கு  விடுமாறு விவசாயிகள்  கோரிக்கை விடுக்கின்றனர்.

வடக்கில் தற்போது 400உழவு இயந்திரங்கள்  உள்ளன.

வடக்கின்  5மாவட்ட கமநல சேவைத் திணைக்களங்களிற்கு இந்திய அரசின் உதவியால் சில உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மேலும் சில உழவு இயந்திரங்கள்  திணைக்களத்தினால் கொள்வனவு செய்யப்பட்டன. இவ்வாறு திணைக்களங்களில் காணப்படும் 400உழவு இயந்திரங்களில் பல  நூறு இயந்திரங்கள் எந்தவிதமான பாவனையும் இன்றி இயங்காத நிலையில் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு  நிறுத்தி வைத்திருக்கும் 400உழவு இயந்திரங்களில் முல்லைத்தீவு  மாவட்டத்தில் 127உழவு இயந்திரங்களில் 41உழவு இயந்திரங்கள் பழுதான  நிலையில் உள்ளன.  86உழவு இயந்திரங்கள் இயங்கு நிலையில் உள்ளன. கிளிநொச்சி  மாவட்டத்தில் 100உழவு இயந்திரங்கள் உள்ளபோதும் மாவட்டத்தின்  பயன்பாட்டிற்கு தற்போது 60இயந்திரங்களே போதுமானது எனச்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேபோன்று மன்னார் மாவட்டத்தில் 130 உழவு  இயந்திரங்கள் உள்ளபோதும் அங்கே 70 உழவு இயந்திரங்களே போதுமானது எனக்  கூறப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தில் 105 உழவு இயந்திரங்கள் காணப்படும்  நிலையில் அங்கும் அதிகமானவை பயன்பாடுகள் இன்றியே நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளன. எனவே  இவற்றினை விவசாயிகளிற்கு வழங்க முடியாது விடினும் வடக்கில் உள்ள அரச  திணைக்களங்களிற்கேனும் அவற்றினை பகிர்ந்தளித்து பயன்படுத்த ஆவண செய்ய  வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(கோப்பாய் நிருபர்)


Add new comment

Or log in with...