தாய்மாரை வதைக்கும் முதுகுவலி | தினகரன்

தாய்மாரை வதைக்கும் முதுகுவலி

இன்றைய காலகட்டத்தில் இளமையிலே முதுகு வலி, மூட்டு வலி என அதிக பெண்கள் அவதிப்படுகின்றனர். அதுவும் குழந்தை பெற்ற பின்னர் தான் இப்பிரச்சினைக்கு பெரிதும் உள்ளாகின்றனர். இதற்கென கை வைத்தியம் செய்தும் பெரிய பலன் கிடைக்கப் பெறாதவர்களே அனேகர்.

அதனால் இவ்வாறு வலி ஏற்படுவதற்கான காரணம் என்ன? அதற்கான தீர்வை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்? என்பன தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் அவசியத் தேவையாக மாறியுள்ளது. ஆனால் இவ்வாறான வலிக்கு வாழ்க்கையமைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் இவ்வாறான வலியைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொள்வது குறித்து கவனம் செலுத்துவது நன்மை பயக்கக் கூடியதாக அமையும். அந்த வகையில் வலி தொடர்பில் தெளிவான புரிந்துணர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதாவது முதுகில் ஏற்படுகின்ற வலி நடு முதுகில் ஏற்படுகின்றதா? அல்லது அடி முதுகில் ஏற்படுகின்றதா? என்பதை கவனமாக நோக்க வேண்டும்.  

அதேநேரம் சிசேரியன் செய்யும் தாய்மாருக்கு முதுகில் ஊசி போடப்படுவதால் அது தொடர்பான வலி சிலருக்கு நீண்ட காலம் வரை காணப்படலாம். அதனால் சிசேரியன் செய்து குழந்தையைப் பிரசவித்த பெண்கள் தண்ணீர், பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை அதிகம் பருகுவது நல்லது. இவர்கள் நீண்ட தூரம் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.  

மேலும் உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறை என்றாலும் முதுகு வலி ஏற்படலாம். சில நேரம் கீழ் முதுகில் வலி ஏற்பட பல விடயங்கள் துணை புரியலாம்.

அவற்றில் வயிற்றில் ஏதேனும் பிரச்சினை காணப்படல், தாய்மார் மத்தியில் ஏற்படும் மன அழுத்தம், சிறுநீரகம், சிறுநீரக பையில் கல் காணப்படல், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சினை போன்றன குறிப்பிடத்தக்கவையாகும்.  அத்தோடு உடல் பருமன், திடீரென குனிந்து நிமிர்தல், மேடு பள்ளம் கொண்ட வீதிகளில் தினமும் பயணித்தல், ஒழுங்குமுறையாக உட்காராமை என்பனவும் கூட முதுகுவலி ஏற்ப துணைபுரியும்.  

அதன் காரணத்தினால் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் நாற்காலியில் அடியில் முதுகுக்கு சிறு தலையணை வைத்துக்கொள்வது நல்லது. கூன் விழாதபடி உட்காருவது தான் நல்லது. அத்தோடு அடிக்கடி எழுந்து சிறிது நடக்க வேண்டும். உட்கார்ந்திருக்கும்போது தொங்கவிட்ட கால்களின் நிலையை அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டும்.  

உடற்பயிற்சி, நடை, நீச்சல், யோகாசனம் போன்ற ஏதேனும் ஒன்றைத் தொடர்ந்து செய்து வந்தால் முதுகுவலி வராமல் தவிர்க்கலாம். இதற்கு பசும்பால், முட்டை, கொண்டைக்கடலை, கருப்பு எள்ளு உருண்டை, தோடம், பாதாம், உளுந்து ஆகியவற்றையும் சாப்பிடலாம். முதுகு வலி உள்ளவர்கள், கால்களை சிறிது மடித்த நிலையில், கால்களுக்கு இடையே தலையணை வைத்து உறங்கலாம். குறிப்பாக சமதளமான மெத்தையில் உறங்குவதே பயன்மிக்கதாக அமையும்.  

ஆனால் இவ்வாறான வலிக்கு முகம் கொடுப்பவர்கள் உயரமான காலணிகளை அணியக்கூடாது. நடத்தல், நிற்றல் போன்றவை இரண்டு கால்களுக்கும் சமமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு காலுக்கு மாத்திரம் அதிக எடையைக் கொடுக்கக் கூடாது.  

மேலும் அதிக சுமையுள்ள பையை ஒரு தோளில் மாத்திரம் தூக்கக் கூடாது. அதாவது கைப்பை, குழந்தைகளுக்கான பைகள் குறிப்பிடத்தக்கவை.

ஒரு பட்டி கொண்ட கைப்பையை பயன்படுத்துபவர்கள் அப்பட்டி அகலம் கொண்டபடி இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் பல பெண்களுக்கு இதன் விளைவாகவும் முதுகு வலி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

தலை, தோள்ப்பட்டை, இடுப்பு என்பன ஒரே நேர்க்கோட்டில் இருப்பதே நல்லது.  

இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக முதுகு வலியை தவிர்த்துக் கொள்ளலாம்.  

 


Add new comment

Or log in with...