சிறுநீரகம் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய உள்ளுறுப்பு | தினகரன்

சிறுநீரகம் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய உள்ளுறுப்பு

மனித உடலிலுள்ள சிறுநீரகம் இரத்தத்தை சுத்திகரிப்பதைப் பிரதான பணியாகக் கொண்டுள்ளது. குறிப்பாக மனிதனின் இரண்டு சிறுநீரகங்களும் 180 லீற்றர் குருதியைத் தினமும் சுத்திகரிக்கின்றன. அதேநேரம் நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லீற்றர் சிறுநீரையும் சிறுநீரகம்  உற்பத்தி செய்கின்றது.  

என்றாலும் சிறுநீரை வெளியேற்றுவது மாத்திரம் தான் சிறுநீரகத்தின் பணியல்ல. அது இன்னும் பிற முக்கிய பணிகளையும் மேற்கொள்கின்றது. குறிப்பாக உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக்கொள்வதோடு இரத்த அழுத்தத்தை உரிய அளவில் பேணுவதும் சிறுநீரகம் தான். அத்தோடு செங்குருதி சிறுதுணிக்கைகளின் உற்பத்திக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவும் சிறுநீரகம் உடலில் உற்பத்தியாகும் நச்சுப்பொருட்களை மாத்திரமல்லாமல் சாப்பிடும் உணவிலும் மருந்துகளிலும் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவுகின்றது.  

மேலும் மூச்சுக்குழாய், குருதிக்குழாய், குடல் திசுக்கள் போன்றவற்றின் இயக்கங்களையும் சிறுநீரகமே ஊக்குவிக்கின்றது.  

இவ்வாறு மனிதனுக்கு மிகப்பெறுமதி மிக்க பணிகளை ஆற்றி வருகின்ற சிறுநீரகம் பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக கட்டுப்படாத நீரிழிவு, கட்டுப்பாட்டில் இல்லாத இரத்த அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடல் பருமன், காசநோய், வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுதல், உணவு நச்சுகள், இரத்தத்தில் ஏற்படும் நச்சுத்தொற்று (Septicemia), புரொஸ்டேட் வீக்கம், புற்றுநோய், உலோகம் கலந்த மூலிகை மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் சிறுநீரகம் பாதிக்கப்படுகின்றது. ஆனால் சிறுநீரகப் பாதிப்பை ஆரம்பத்திலேயே இனம் கண்டு உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். தவறும் பட்சத்தில் சிறுநீரகம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.  

அதேநேரம் சிறுநீரகம் திடீரென செயலிழக்கும் சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கின்றன. அவற்றையும் கவனத்தில் கொண்டு செயற்படுவது அவசியமானது. அதாவது வாந்தி பேதி காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்து சிறுநீரகத்துக்கான இரத்த ஓட்டம் குறைந்தாலும், மலேரியா, எலிக்காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகளினாலும், பாம்புக்கடி, குளவி கொட்டுதல் போன்ற விஷக்கடிகள் ஏற்பட்டாலும், மருந்து ஒவ்வாமை என்பவற்றாலும், கர்ப்பிணிகளுக்கு ஆபத்தான கருச்சிதைவு, அதீத உதிரப்போக்கு போன்ற பிரசவச் சிக்கல்கள் ஏற்பட்டாலும் சிறுநீரகம் திடீரெனச் செயலிழந்து போகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறுநீர் வெளியேறுவது குறைவடையும். அதனால் முகமும், பாதங்களும் வீக்கமடையும். அத்தோடு சிலருக்கு உடலில் நீர்கோத்து உடல் முழுவதும் வீங்கவும் முடியும்.  

மேலும் கட்டுப்படாமல் நீடித்து நிலைக்கும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகச் செயலிழக்கும். அது ஒரு கட்டத்தில் முழுமையாக செயலிழந்துவிடும். இதன் விளைவாக சிறுநீர் வெளியேறுவது குறைந்து, உடலில் கழிவுகள் தேங்கி பொது ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இந்நிலை உயிருக்கு ஆபத்து ஏற்பட வழிவகுக்கும்.  

குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறல், பசி குறைதல், வாந்தி ஏற்படல், சாப்பிட முடியாமை, தூக்கமின்மை, குருதிச்சோகை ஏற்படல், உடலில் அரிப்பும் சோர்வும் ஏற்படல், முகம், கைகால்களில் வீக்கம் தோன்றல், மூச்சிறைப்பு உண்டாதல் என்பன நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறிகளாகும்.  

என்றாலும் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புக்கள் ஆரம்பத்திலேயே வெளியில் தெரிய வராது. மாறாக அவை பெரிதாகி ஆபத்தான கட்டத்தை அடைந்த பின்னர் தான் அவற்றின் அறிகுறிகள் வெளியில் தெரியவரும். அதனால் 40 வயதைக் கடந்தவர்கள், நீரிழிவு நோயாளர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பரம்பரை ரீதியான சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள், சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள், சிறுநீரில் இரத்தம் கலந்துவரும் பிரச்சினை உள்ளவர்கள், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருப்பவர்கள், அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படுபவர்கள் ஆகியோர் ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகம் தொடர்பில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குறிப்பாக இரத்தம், சிறுநீர்ப் பரிசோதனை, வயிற்று பகுதி எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஐ.வி.பி பரிசோதனை (Intravenous pyelogram – IVP), சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற பரிசோனைகள் சிறுநீரகச் செயல்பாட்டை அறிய உதவக்கூடியவையாகும்.  

சிறுநீரகப் பாதிப்பை ஆரம்பத்திலேயே  கண்டறிந்தால் நோய்க்கான அடிப்படைக் காரணத்தை மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். ஆனால், சிறுநீரகம் தீவிரமாக செயலிழந்து விட்டால் மருந்து சிகிச்சை மாத்திரம் போதாது ‘டயாலிசிஸ்’ (Dialysis) என்னும் இரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும். சிலருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை (Kidney Transplantation) கூட செய்ய வேண்டி வரும்.  

ஆகவே சிறுநீரகப் பாதுகாப்பு தொடர்பில் பின்வரும் விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். அதாவது உயர் இரத்த அழுத்தம், உப்பு, குருதியில் குளுக்கோஸின் அளவு, புகைப்பிடித்தல், தண்ணீர், மதுபானம் ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும்.  

உயர் இரத்த அழுத்தம்  

அந்த வகையில் சிறுநீரகத்தின் முதல் எதிரி உயர் இரத்த அழுத்தமாகும். அதனால் அதனைக் கட்டுப்பாட்டு நிலையில் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகம் பாதிக்கப்படுவதைப் பெரும்பாலும் தவிர்த்து விடலாம். அதன் காரணத்தினால் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், மாதாமாதம் தங்கள் இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.  

உப்பு  

அதேநேரம் ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மாத்திரமேயாகும். அதைவிடவும் குறைவான உப்பை எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். உப்பு நிறைந்த உணவுப் பொருட்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், சோடா தாண்ணீர் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட பக்கெட் உணவுகள், துரித உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகள் ஆகியவற்றில் உப்பு கூடுதலாகவே பயன்படுத்தப்படும். இவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.  

குருதியில் குளுக்கோஸின் அளவு  

நீரிழிவு நோயுள்ளவர்கள் குருதியில் குளுக்கோஸின் அளவைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் குளுக்கோஸ் இருக்க வேண்டிய சரியான அளவு 120 மில்லி கிராம்/டெசி லீற்றர் ஆகும். அத்தோடு இந்நோய்க்கு உள்ளானவர்கள் வருடத்திற்கு ஒரு தடவை சிறுநீரகச் செயல்பாடு குறித்த பரிசோதனைகளை அவர்கள் செய்து கொள்ள வேண்டும்.  

புகைப்பிடித்தல்  

புகைப்பிடித்தல் பொருளில் காணப்படும் 'நிகொட்டின்' நஞ்சு இரத்தக்குழாய்களைச் சுருக்கிவிடும். இதன் விளைவாக இரத்த அழுத்தம் அதிகரித்து, சிறுநீரகத்துக்குப் பாதிப்பு ஏற்படும். அத்தோடு சிறுநீரகப் புற்றுநோயும் சிறுநீர்ப்பைப் புற்றுநோயும் வருவதற்கான வாய்ப்பைப் புகைப்பிடித்தல் பழக்கம் அதிகப்படுத்தும்.  

தண்ணீர் பருகுதல்  

மேலும் வெப்பப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் தினசரி 3 – 4 லீற்றர் தண்ணீரைப் பருக  வேண்டும். அப்போது தான் சிறுநீரகத்திலிருந்து யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் சீராக வெளியேறும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் இது தடுக்க உதவும். அதேவேளையில் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், மருத்துவர் ஆலோசனைப்படி தண்ணீர் குடிப்பது நல்லது.  

ஆனால் மூட்டுவலி, முதுகுவலி ஆகியவற்றுக்கு பாவிக்கும்   மாத்திரை மருந்துகள், ஸ்டீரொய்ட் மாத்திரைகள் போன்ற வீரியமுள்ள மருந்துகளை அளவுக்கு மேல் பயன்படுத்துவது நல்லதல்ல. அது  சிறுநீரகத்தைப் பாதிக்கும். அதனால் மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்தவொரு மருந்தையும் பாவிக்கக் கூடாது. மாற்று மருத்துவம் என்னும் பெயரில் தகுதியில்லாத மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்தோடு   சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்து விட வேண்டும். அப்போது தான் அதிலுள்ள கழிவுகள் உடனுக்குடன் வெளியேறி சிறுநீரகப்பாதை சுத்தமாக இருக்கும். நோய்த்தொற்று ஏற்படாது. அதேநேரம்  

தினமும் குளிக்கும்போது இனப்பெருக்க உறுப்புகளை நன்றாகச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் சிறுநீரகத்தில் தொற்று ஏற்படுவதையும்  தவிர்த்துக் கொள்ளலாம். அத்தோடு மதுப்பானம் அருந்துவதையும் தவிர்ப்பதே நல்லது. ஏனெனில் அதிலுள்ள இரசாயனப் பதார்த்தங்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடியவையாகும்.  

ஆகவே மனிதனின் ஆரோக்கிய நலன்களில் முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது மிகவும் இன்றையமையாததாகும். குறிப்பாக உடற்பயிற்சி, நடைப்பயிற்சி  சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும். 

(முஹம்மத் மர்லின்)


Add new comment

Or log in with...