Saturday, April 20, 2024
Home » விதை உருளைக்கிழங்கு இறக்குமதி தொடர்பில் விசாரணை அவசியம்

விதை உருளைக்கிழங்கு இறக்குமதி தொடர்பில் விசாரணை அவசியம்

- யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிப்பு

by Prashahini
December 28, 2023 6:36 pm 0 comment

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே ஆளுநர் இதனை குறிப்பிட்டார்.

யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா, ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ஆகியோரின் தலைமையில், மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (28) நடைபெற்றது.

யாழ் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு அபாய நிலை, கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள், அபிவிருத்தி திட்டங்கள், மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

யாழ். மாவட்ட விவசாயிகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்கில் பற்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் வட மாகாண பிரதி பணிப்பாளரிடம் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கேள்விகளை முன்வைத்தார். எவ்வித தரச் சான்றிதழும் இன்றி குப்பிளான் களஞ்சியசாலைக்கு விதை உருளைக்கிழங்குகள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன, இதற்கான அனுமதியை வழங்கியது யார்?, தற்போது அவற்றை அழிப்பதற்குரிய செலவுகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான மாற்று செயற்பாடுகள் போன்ற பல விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் கேள்விகளை முன்வைத்தார்.

இந்நிலையில் விதை உருளைக்கிழங்கு இறக்குமதியில் மோசடிகள் இடம்பெற்றிருக்க கூடும் என்பதால் அது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்தினார்.

இந்த தீர்மானத்திற்கு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவும் இணக்கம் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் அமுல்படுத்த உத்தேசித்துள்ள 25000 வீட்டுத் திட்டம் தொடர்பில் இதுவரை உரிய தெளிவுப்படுத்தல்கள் கிடைக்கவில்லை என கூட்டத்தில் கலந்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவுப்படுத்துவதற்கான விசேட கூட்டத்தை விரைவில் ஏற்பாடு செய்வதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பாலியாறு திட்டம் தொடர்பிலும் இன்று தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன் யாழ். மாவட்ட கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோரிடம் அறவிடப்படும் தண்டப் பணத்தை, மீனவர்களின் நலன்புரி செயற்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டும் என, அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா இதன்போது அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் 04 ஆம் திகதி ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளமை தொடர்பிலும் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது தெளிவுப்படுத்தினார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT