இலங்கையின் நல்லிணக்க நடைமுறைக்கு பங்களிப்பினை வழங்குவதை விட தனியார் துறை அபிவிருத்தி, இளைஞர் நலன் பேணல் மற்றும் கடல்சார் கைத்தொழில் ஆகியவையே தமது அரசாங்கத்துக்கு கவர்ச்சிகரமான துறைகளாக தென்படுவதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே இராஜாங்க செயலாளர் மரியென் ஹேகன் கூறுகிறார். இலங்கையில் அவர் வடக்கில் முகமாலைக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை பார்வையிட்டார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1இலக்க தீர்மானம் தொடர்பாக, தமது அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து வருவதுடன் இது வரை எட்டப்பட்டவை தொடர்பாக வரவேற்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இலங்கை விஜயத்தின் போது அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, வெளிநாட்டமைச்சர் திலக் மாரப்பன மற்றும் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.நோர்வே இராஜாங்க செயலாளர் மரியென் ஹேகன் எமக்கு வழங்கிய பேட்டி:
கேள்வி: இலங்கைக்கு தாங்கள் மேற்கொண்டுள்ள விஜயத்தின் நோக்கம் என்ன?
பதில்: நாங்கள் இங்கு வந்திருப்பதன் பிரதான நோக்கங்களில் ஒன்று கண்ணிவெடி அகற்றப்படுவதைப் பார்ப்பதாகும். வடக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகழ்வினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கத்துக்கு 60 மில்லியன் நோர்வேஜிய குரோன் (சுமார் 1200மில்லியன் ரூபா) நிதிப் பங்களிப்பினை கொண்டு வந்திருக்கிறோம்.மேற்கூறப்பட்ட காணிகளில் இருந்து கண்ணிவெடிகளை அப்புறப்படுத்துவதற்கு பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்கு இது மிகவும் முக்கியமானதாகும். 2020க்கு முன்னர் அங்குள்ள காணிகளில் இருந்து கண்ணிவெடிகள் முழுமையாக அப்புறப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. நோர்வேயின் பங்களிப்பின் மூலம் கண்ணிவெடிகள் அகழ்வு வேலைகள் குறித்த காலத்தில் நிறைவு பெறும் என்று நம்பலாம்.
கேள்வி:- கன்ணிவெடி அகற்றல் தொடர்பாக மீதமுள்ள வேலையை முடிப்பதற்கு இலங்கைக்கு மேலும் 12மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கள் பங்களிப்பு 7மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவுக்கு உள்ளது. இது தேவைப்படும் நிதியில் கணிசமான அளவாகும்.
பதில்: கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளுக்கு ஒரு உதவி வழங்கும் நாடாக நாங்கள் இருந்து வருகிறோம். கண்ணிவெடி தடை மாநாட்டின் கடப்பாடுகளின் கீழ் சில குறிக்கோள்களை நிறைவேற்றும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. மாநாட்டின் தலைமைத்துவம் இவ்வருடம் நோர்வேயிடம் உள்ளது. அதேநேரம் கொத்து குண்டுகள் மாநாட்டின் தலைமைத்துவம் இலங்கையிடம் உள்ளது. எங்கள் செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவே. எனவே சேர்ந்து செயலாற்றுவது எங்கள் இரண்டு நாடுகளுக்கும் பெறுமதியானது.
கேள்வி: இதுவரை காணப்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பொறுத்து 2020 ம் ஆண்டளவில் கண்ணிவெடிகளை முற்றாக அகற்றும் இலக்கை இலங்கை எட்ட முடியும் என்று நம்புகிறீர்களா?
பதில்: நடைமுறையின் நோக்கமே அதுதான். எமது பங்களிப்பு அதனை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதற்கு உதவும் என்று நம்புகிறேன். அரசாங்கமும் இதற்கு கடமைப்பட்டுள்ளது.
கேள்வி: இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்து இத்துடன் பத்து வருடங்கள் ஆகின்றன. எனினும் பழையதை முற்றாக மறப்பதில் சிக்கல் நிலையையே காண முடிகிறது. இலங்கையின் நல்லிணக்க நடைமுறையில் நோர்வேயின் பங்களிப்பு எந்த வகையிலாவது இருக்கும் என்பதை நீங்கள் காண்கிறீர்களா?
பதில்:- நாங்கள் பின்னோக்கிப் பார்க்கும் போது இருதரப்பிலும் யுத்தத்தை முடிப்பதற்கு அமைதிப் பேச்சு நடத்துமாறு நோர்வேயிடம் கேட்கப்பட்டது. துரதிஷ்டவசமாக அது அவ்வாறு இடம்பெறவில்லை. இப்போது புதிய ஆரம்பமொன்றை ஏற்படுத்த முயற்சி செய்யும் இலங்கையை வலுப்படுத்த நாம் இங்கு வந்திருக்கிறோம். 30/1தீர்மானம் மற்றும் அதன் அபிவிருத்தி தொடர்பாக நாம் நெருங்கிக் கண்காணித்து வருகிறோம். நாம் இங்கு தனியார் தரப்பினருடனும் இணைந்து செயற்பட வந்திருக்கிறோம். நாட்டின் எதிர்காலம் தமக்குரியது என்று நம்பும் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் தமக்கென்ற எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர்களது குடும்பங்களை பார்த்துக் கொள்ள முடியும்.
இலங்கையில் பாரிய பொதுத்துறையொன்று உள்ளது. இது தனியார் துறையின் நிதியுதவியில் செயற்படுகிறது. எனவே தனியார் துறையின் வளர்ச்சி முக்கியமானதாகும். அபிவிருத்தி செயற்பாட்டின் ஒரு பங்காளர் எந்த வகையில் இந்த நாடுகள் அவர்களது இலக்கை எட்டுவதற்கு உதவுவது முக்கியமானதாகும். என்னை இது போன்ற பல விடயங்கள் அழைத்து வந்திருக்கின்றன. உதாரணத்துக்கு கடல் சார்ந்த கைத்தொழில்கள் மற்றும் திறமையான தொழிலாளர் வர்க்கம். இது இலங்கையின் எதிர்காலம் பற்றியதாகும்.
கேள்வி: மீன்பிடித் துறையில் இலங்கைக்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ளனவா?
பதில்: இலங்கை இந்த விடயத்தில் இந்த பிராந்தியத்தில் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டிய நாடு, அத்துடன் அது பல்வேறு நாடுகளின் மட்டத்தில் பணியாற்றுகிறது. அதில் நோர்வேயும் ஒன்று.
கேள்வி: ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை தொடர் தற்போது இடம்பெறுகிறது. இதில் இலங்கை மீது தொடர் கண்காணிப்பு அவசியம் என்று சர்வதேச ரீதியில் குரல் எழுப்பப்பட்டு வரும் அதேவேளை, மற்றொருசாரார் இலங்கை விவகாரத்தை அவர்களே பார்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். மோதல்கள் முடிவடைந்து இத்துடன் பத்து வருடங்கள் கடந்துவிட்டன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒரு உறுப்பினர் என்ற நிலையில் நோர்வே இவ்விடயத்தில் என்ன நினைக்கிறது?
பதில்: ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாம் வரவேற்கிறோம். காணாமற் போனோரின் அலுவலகத்துக்கு நாம் விஜயம் செய்தோம். காணாமற் போனோரை பொறுத்தவரை இந்த அலுவலகம் மிகவும் முக்கியமானது. காணாமற் போனோரின் குடும்பங்கள் பதில்களை தேடிக் கொள்ளவும், ஆற்றுப்படுத்தப்படவும் அடுத்த கட்டத்துக்கு செல்லவும் இது முக்கியமாகும்.
அலுவலகத்தில் பணியாற்றுவோரையும் நாம் சந்தித்து பேசினோம். அவர்களது பணி என்னென்ன என்பதை கேட்டறிந்தோம். ஏற்பட்டுள்ள முன்னேற்றம் திருப்தி தருவதாக உள்ளது. தொடர்ந்தும் நாம் இது பற்றி அதிகளவு காட்டி வருகிறோம். இது எதிர்காலத்தில் மேலும் பயனளிக்கும் என்று நம்புகிறோம்.
(மஞ்சுளா பெர்னாண்டோ)
Add new comment