இன ரீதியான செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு முட்டுக்கட்டை | தினகரன்

இன ரீதியான செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு முட்டுக்கட்டை

இலங்கையை காலனித்துவ நாடாக வைத்திருந்த ஆங்கிலேயருக்கு எதிரான அமைதிவழிப் போராட்டத்தில் இலங்கையில் வாழும் அனைத்து இன புத்திஜீவிகளும் கைகோர்த்திருந்தனர். ஆரம்ப நிலையில் மதரீதியிலான ஒன்றுகூடல்கள் நல்ல பலன்களைத் தந்தன என வரலாற்றை ஆராயும் ஒவ்வொருவரும் அறிவார்கள்.

நாட்டின் தென்பகுதியில் அநகாரிக தர்மபாலவும் வடக்கில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் தலைமையிலும் மதம் மற்றும் இனரீதியிலான குழுக்கள் தோற்றம் பெற்றன. இந்த தமிழ், சிங்கள தலைவர்களுடன் முஸ்லிம் தலைவர்களான சித்திலெப்பை, ஏ.எம்.அப்துல் அஸீஸ், ரி. பி. ஜாயா, சேர் ராசிக் பரீத் போன்றவர்களும் ஒன்றாக கைகோர்த்தனர்.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இன, மத, சாதி, பிரதேச வேறுபாடுகள் எவையுமின்றி சகலரும் ஒருமித்து போராடியதனால் இரத்தம் சிந்தாமல் எமக்கு சுதந்திரம் கிடைத்தது என வரலாற்றுப் பேராசிரியர் கே. எம்.டி. சில்வா கூறியுள்ளார்.இவையெல்லாம் பழைய வரலாறுகளாகும்.

இவ்வாறான நிலையிலேயே திருகோணமலை மேல்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதாவது.

இனவிகிதாசார அடிப்படையில் நியமனம் வழங்குவதற்கு எந்த அரச அதிகாரிக்கும் அதிகாரம் கிடையாது. அவ்வாறான நியமனம் அல்லது தெரிவானது உயர் நீதிமன்றம் வழங்கிய தீரப்பை மீறுவதான செயற்பாடாகும் என மேல்நீதிமன்றம் கூறியுள்ளது.

கிழக்கு மாகாணத்துக்கான முகாமைத்துவ உதவியாளர் நியமனத்தில் இன ரீதியான பாகுபாடு பார்க்கப்படுவதாகத் தெரிவித்து பெண் ஒருவரால் திருகோணமலை மேல்நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்கின் விசாரணையின் போதே நீதிபதி இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வழக்கின் எதிர் மனுதாரர்களாக கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் அடங்குவர். இன ரீதியான செயற்பாடுகளும் நடைமுறைகளும் இன்னும் அகலவில்லை என்பதையே இத்தீர்ப்பு புலப்படுத்துகிறது.

இன ரீதியாக சிந்தித்ததன் எதிரொலியே 1983 ஜுலைக் கலவரம். இதை இந்த நாட்டு மக்கள் முற்றாக வெறுக்கின்றனர். எனவே அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்கின்ற எந்தவொரு செயற்பாட்டையும் அனைவரும் நிராகரிக்க வேண்டும். அதுவே இனநல்லிணக்கத்துக்கு அத்திவாரமாகும்.

ஆர். நடராஜன்
பனங்காடு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...