அவுஸ்திரேலியா - இலங்கை கொழும்பில் இராணுவ ஒத்திகை | தினகரன்


அவுஸ்திரேலியா - இலங்கை கொழும்பில் இராணுவ ஒத்திகை

அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் கூட்டு இராணுவ ஒத்திகை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 29ஆம் திகதி கொழும்பில் இடம்பெறும். இந்தோ – பசுபிக் பெருமுயற்சி – 2019என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்த கூட்டு இராணுவ ஒத்திகையாகும்.  

இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று (15) கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இலங்கையிலுள்ள அவுஸ்திரேலியாவின் பதில் உயர்ஸ்தானிகர் ஹொன் பிலிப், மற்றும் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கேப்டன் சீன் அன்வின் ஆகியோர் இந்தோ – பசுபிக் பெருமுயற்சி 2019தொடர்பாக விளக்கமளித்னர்.  

இலங்கையுடன் அவுஸ்திரேலியா மேற்கொள்ளும் மிகப் பெரிய கூட்டு இராணுவ ஒத்திகை இதுவாகும். அவுஸ்திரேலியாவில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் யுத்த தளபாடங்கள் மற்றும் ஆளணியினர் இந்த இராணுவ ஒத்திகையில் கலந்துகொள்வர்.  

அவுஸ்திரேலியாவின் கன்பர்ரா, நியூகாசில், பரமட்டா, சக்சஸ் ஆகிய நான்கு கப்பல்களுடன் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட படையினர் இந்த இராணுவ ஒத்திகையில் பங்குபற்றுவர்.  

அவுஸ்திரேலிய கப்பல்கள் கொழும்புக்கும் திருகோணமலைக்கும் விஜயம் செய்யும் அதேநேரம் அவுஸ்திரேலிய விமானப் படையினர் மத்தளவுக்கு விஜயம் செய்வர்.  

இலங்கையிலும் இலங்கை கடற்பகுதியிலும் இலங்கை ஆயுதப் படையினருடன் இணைந்து பல்வேறு இராணுவ ஒத்திகைகள் இடம்பெறும்.  

இந்தோ – பசுபிக் நாடுகள் என்ற வகையில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் வர்த்தகம், கடல்வழித் தொடர்புகள் மற்றும் இந்து சமுத்திரத்தில் கப்பல் செயற்பாடுகளில் பொதுவான அக்கறையைக் கொண்டுள்ளன. இந்து சமுத்திரத்தில உள்ள முக்கியமான கப்பல் தாழ்வாரம் என்று சொல்லக்கூடிய இடத்தில் இலங்கை அமைந்திருப்பதாக அவுஸ்திரேலியாவின் 206 பாதுகாப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.  


Add new comment

Or log in with...