உயர்கல்விக்காக வெளிநாடு சென்றவர்கள் நாடு திரும்புவது உறுதி செய்யப்படவேண்டும் | தினகரன்


உயர்கல்விக்காக வெளிநாடு சென்றவர்கள் நாடு திரும்புவது உறுதி செய்யப்படவேண்டும்

உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள எம்மவர்கள் தமது படிப்பை முடித்துக்கொண்டு மீண்டும் நாட்டுக்குத் திரும்புவது உறுதிசெய்யப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எமது நாட்டில் 10,000 ற்கும் மேற்பட்டோர் வருடாந்தம் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக செல்லும்போதும் அவர்கள் மீள நாடு திரும்புவதில்லை. அவர்களின் சேவையை நாட்டுக்காக பெறமுடியாதுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிள்ளைகள் எவ்வாறு சிந்திப்பது என்பதை சொல்லிக்கொடுப்பதாகக் கல்விமுறை அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று கல்வி மற்றும் உயர் கல்வியமைச்சுக்கான நிதியொதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வித்துறையில் பாரிய முன்னேற்றங்களை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. ‘ஸ்மாற்’ வகுப்பு, பாடசாலை மாணவர்களுக்கு கணனிகளை வழங்குதல் உள்ளிட்ட சிறந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது நாட்டில் உயர்கல்வி கற்ற 30,000 பேருக்கே பல்கலைக்கழகத்திற்கான அனுமதி கிட்டுகிறது. சுமார் 1,30,000 பேர் பல்கலை அனுமதி இல்லாமல் போகின்றது. இவர்களில வசதி படைத்த 10,000 பேர் வரை வருடாந்தம் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி கற்கின்றனர். எனினும் அவர்கள் மீள நாடு திரும்புவதில்லை.

கல்வி என்பது அரசாங்கத்தினால் மட்டும் தனியே கட்டியெழுப்பக்கூடியதொன்றல்ல பல்வேறு தரப்பினரதும் பங்களிப்பு அதற்கு அவசியமாகிறது. அந்த வகையில் வெளிநாடு செல்வோர் மீள நாடு திரும்ப தமது பங்களிப்பைத் தாய்நாட்டுக்கு வழங்குவது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ்பாஹிம்)

 


Add new comment

Or log in with...