நாடு திரும்பும் அகதிகளுக்கு அரசின் செயற்றிட்டம் அவசியம் | தினகரன்


நாடு திரும்பும் அகதிகளுக்கு அரசின் செயற்றிட்டம் அவசியம்

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழ் மக்கள் நாடு திரும்புவதற்கு விருப்பம் கொண்டிருக்கின்ற போதிலும் இங்கு அவர்களுக்கான வீடு, காணி, வாழ்வாதாரம் குறித்த எந்தவிதமான உத்தரவாதமும் கிடைக்காத நிலையில் அவர்கள் அச்சம் கொண்டு நாடு திரும்புவது குறித்து இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பில் விசேட செயற்திட்டப் பொறிமுறையொன்றை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமெனவும் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இந்தக் கோரிக்கையை அரசாங்கமோ, பிரதமரோ தட்டிக்கழிக்கும் போக்கில் செயற்படக்கூடாது.

போர் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டு எதிர்வரும் மே மாதத்துடன் பத்து வருடங்கள் நிறைவடைகின்றன. இந்தப் பத்து வருடங்களில் இருந்த அரசாங்கமும் சரி இருக்கின்ற அரசும் சரி தமிழ் அகதிகள் விடயத்தில் உரிய முறையில் அக்கறை செலுத்தத் தவறிவிட்டுள்ளன. தமிழகத்திலுள்ள தமிழ் அகதிகளுக்கும், புலம்பெயர் இலங்கைத் தமிழர்களையும் தாயகம் திரும்புமாறு அரசுகள் அழைப்பு விடுத்த போதிலும் அவர்களின் வாழ்வாதாரம், இருப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் உரிய செயற்திட்டமெதனையும் இன்றுவரை முன்வைக்கவில்லை.

இந்த நிலைமை தொடர்வதன் காரணமாக தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளதை வெளிப்படையாகவே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இனிமேலும் தாமதம் காட்டுவது ஆரோக்கியமானதல்லவென்பதை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்தியாவில் நீண்டகாலமாக அகதிகளாக வாழும் தமிழ் மக்கள் தாயகம் திரும்புவதில் விருப்பம் கொண்டிருக்கின்ற போதிலும் அரசின் எந்தவிதமான சாதகமான போக்கையும் காண முடியாத நிலையில் அவர்கள் தாயகம் திரும்புவதில் அச்சம் கொண்டிருக்கின்றனர். எந்த உத்தரவாதமும் உறுதிபபடுத்தாத நிலையில் எப்படி நாடு திரும்ப முடியும் என்ற கேள்வியை அவர்கள் தொடுப்பதில் நியாயம் இருப்பதாகவே நோக்க முடிகிறது.

போர் முடிந்த கையோடு அன்றைய அரசு நாடு திரும்புமாறு தமிழ் அகதிகளுக்கு அழைப்பு விடுத்தது. அத்துடன் பல வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டன. அவற்றை நம்பி இங்கு வந்தவர்கள் இன்று நடுத்தெருவில் விடப்பட்டிருக்கும் நிலையில் வரவிருப்பம் கொண்டிருக்கும் அகதிகள் தாயகம் திரும்புவதில் தயக்கம் காட்டுகின்றனர். வந்துள்ளவர்கள் வரவிருப்பம் கொண்டிருப்பவர்களை வரவேண்டாமென எச்சரித்துள்ளனர். இவர்கள் விடயத்தில் அரசாங்கம் நம்பிக்கை ஊட்டக்கூடியதான எந்தவொரு செயற்பாட்டையும் இன்று வரை முன்னெடுக்கவில்லை. அவர்கள் கொண்டிருக்கும் அச்சம் நியாயமானது தானே?

இங்கு வந்து கஷ்டப்படுவதை விட தமிழகத்தில் கிடைப்பதைக்கொண்டு வாழ்ந்துவிட்டுப்போவோம் என்ற நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருக்கின்றனர். வடபுலத்தில் தமது சகல சொத்துக்களையும் இழந்த நிலையில் வெறுங்கையோடு போனவர்கள் எதை நம்பி இங்கு மீண்டும் வர முடியும் வாய் வாக்குறுதிகளை மட்டும் நம்பிவர முடியுமா? வந்தவர்கள் படும் அவலத்தைக் கண்டுகொண்டதன் பின்னரும் கண்களை மூடிக்கொண்டு வர முடியுமா? எனக் கேட்கும் கேள்விக்கு எம்மால் என்ன பதிலளிக்க முடியும். நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் ஏதாவதொரு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வந்தவர்கள் கூட தமக்கு சரியான வாழ்வாதாரம் உத்தரவாதப்படுத்தத் தவறியதால் திரும்பிச் சென்று விடுவோமா என்ற மனநிலையில் தான் காணப்படுகின்றனர். வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த தமிழ் மக்கள் இனியும் இந்த வாக்குறுதி கலாசாரத்தை நம்பும் நிலையில் இல்லை, காத்திரமான செயற்திட்டப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் மனங்களில் நம்பிக்கை ஏற்படுத்தினால் மட்டுமே இது சாத்தியப்பட முடியும். எதுவுமே செய்யாமல் சொந்த மண்ணுக்கு வந்து வாழுங்கள் என அழைப்பு விடுத்தால் அவர்கள் இங்கு கையேந்தி வாழவா அழைக்கப்படுகின்றனர் என்ற கேள்வியைத்தான் கேட்கிறார்கள்.

எனவேதான் தாயகம் திரும்பும் அகதிகளுக்கு வீட்டு வசதிகளுடன் சுயதொழில் வசதிகளையும் அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும். பொருளாதார ரீதியல் அவர்களது வாழ்வாதாரம் பலப்படுத்தப்பட்டதாக அமையப்பெறவேண்டும். இங்கு வந்து சொந்தமண்ணில் அகதி முகாம்களில் வாழ்வதில் அவர்கள் விருப்பம் கொள்ளவில்லை. உலர் உணவு நிவாரணம், நிதி உதவிகளில் தங்கி வாழ அவர்கள் சிறிதளவும் விருப்பம் கொள்ளவில்லை. சுயவிருப்புடன் இங்கு வரும் அந்த மக்களுக்கு உரிய விதத்தில வாழ்வாதார வசதிகளைப் பெற்றுக்கொடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ள இன்னொரு முக்கிய விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். இந்த மக்கள் அன்று சட்டபூர்வமான விதத்தில் அங்கு செல்லவில்லை. இரவோடிரவாக படகுகள் மூலம் உயிரைப் பணயம் வைத்தே சென்றனர். அவர்களிடம் கடவுச்சீட்டுக்களோ, சட்ட ரீதியான ஆவணங்களோ இதுவுமே கிடையாது. இந்தநிலையில் அவர்கள் சட்ட ரீதியாக இங்குவருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசுடன் இலங்கை அரசாங்கம் நேரடியாக பேசி அவர்களை திருப்பி அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விமானத்தில் அழைத்து வருவதென்றால் ஒருவருக்கு 40 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாவரை செலவிட நேரிடலாம். இதற்கு மாற்றுவழி கண்டறிப்படவேண்டும்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான கப்பல் சேவையை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு வரும் நிலையில் மத்திய அரசுடன் பேசி இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கான கப்பல் சேவையை துரிதப்படுத்தி போதுமான அளவு பொருட்கள் பொதிகளுடன் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமானதாகும்.

அகதிகளாக வெளியேறிய மக்கள் மீண்டும் இங்குவந்து அகதிகளாக வாழமுடியாது. சுயமாக வாழும்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். சொந்த நிலத்தில். சொந்த வீட்டில், சொந்த தொழில் முயற்சியுடன் தாயகத்தில் தலைநிமிர்ந்து வாழும் நிலையை அரசாங்கம் அந்த தமிழ் மக்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பிரதமரிடம் விடுக்கப்பட்டிருக்கும் இந்த வேண்டுகோள் காற்றோடு காற்றாக கலந்துவிட முடியாது. அரசாங்கம் தாமதம் காட்டாமல் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறி வைக்கின்றோம்.


Add new comment

Or log in with...