பிரெக்சிட்: ஒப்பந்தமின்றி வெளியேற பிரிட்டன் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு | தினகரன்


பிரெக்சிட்: ஒப்பந்தமின்றி வெளியேற பிரிட்டன் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் உடன்படிக்கை இன்றி வெளியேறுவதையும் பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரித்துள்ளது.

பிரெக்சிட் நடவடிக்கை மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும்போது பிற ஐரோப்பிய நாடுகளுடன் அது கொள்ளவேண்டிய உறவு தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வரைவு ஒப்பந்தத்தை இறுதி செய்த பிரிட்டன் பிரதமர் தெரேசா மே அந்த வரைவு ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக கடந்த ஜனவரி மாதம் முன்வைத்தார்.

ஆனால், அந்த ஒப்பந்தத்துக்கு தெரேசா மேயின் சொந்தக் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்பு இருந்தது. அவரது சொந்தக் கட்சி எம்.பிக்கள் பலரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பிக்களும் எதிராக வாக்களித்ததை அடுத்து அந்த வரைவு ஒப்பந்தம் பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

அதனால், மீண்டும் ஒரு வரைவு ஒப்பந்தத்தை உருவாக்கி அதனை மீண்டும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக கடந்த செவ்வாய்க்கிழமை தெரேசா மே முன்வைத்தார். அதுவும் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான மார்ச் 29 காலக்கெடு முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், இரண்டாவது வரைவு ஒப்பந்தமும் பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, இரண்டு வாய்ப்புகள்தான் பிரிட்டனுக்கு முன் இருந்தன.

ஒப்பந்தம் ஏதும் இல்லாமலே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டும் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்தவேண்டும்.

இதில் முதலாவது வழிமுறை தொடர்பாக புதன்கிழமை விவாதித்த பாராளுமன்றம், அந்த யோசனையை நிராரித்தது. இது தொடர்பாக ஒரே நாளில் கொண்டுவரப்பட்ட அடுத்தடுத்த தீர்மானத்திலும் எந்த சூழ்நிலையிலும் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் யோசனையை நிராகரித்தே பாராளுமன்றம் வாக்களித்தது.

ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் யோசனைக்கு ஆதரவாக 308 பேரும், எதிராக 312 பேரும் வாக்களித்தனர். மெல்லிய, நான்கு வாக்கு இடைவெளியில் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.

ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் யோசனையையும் நிராகரித்த நிலையில், தற்போது பிரிட்டன் வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டுமா என்பது தொடர்பான தீர்மானம் ஒன்றின் மீது நேற்று பிரிட்டன் பாராளுமன்றம் வாக்களிக்கவிருந்தது.


Add new comment

Or log in with...