தொன்னாபிரிக்கா 4-0 என முன்னிலை | தினகரன்


தொன்னாபிரிக்கா 4-0 என முன்னிலை

இசுரு உதான ஆட்ட நாயகன்

இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் நான்காவது போட்டியில், தென்னாபிரிக்க அணி இலங்கை வீரர்களை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இருப்பதுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் 4-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.

முன்னதாக போர்ட் எலிசபெத் நகரில் ஆரம்பமான இந்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணித் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தார்.

ஆரம்ப வீரராக வந்த ஓஷத பெர்னாந்துவும் நிலைக்கவில்லை. லுங்கி ன்கிடியின் பந்துவீச்சில் ஸ்லிப் களத்தடுப்பாளரான ரீசா ஹென்றிக்ஸிடம் பிடிகொடுத்த ஓஷத பெர்னாந்து ஓட்டம் எதனையும் பெறாமல் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

பின்னர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாந்து மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சற்று நிதானமான முறையில் இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி இலங்கை அணிக்காக ஓட்டங்கள் சேர்க்க முயன்ற போதும், அவிஷ்க பெர்னாந்துவின் விக்கெட்டோடு இந்த இணைப்பாட்டம் விரைவாக நிறைவுக்கு வந்தது. என்ரிச் நோர்ட்ஜே இன் பந்துவீச்சில் இலகுவான பிடியெடுப்பு ஒன்றினை வழங்கிய அவிஷ்க 27 பந்துகளில் 5 பெளண்டரிகள் அடங்கலாக 29 ஓட்டங்களை பெற்றவாறு மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

அவிஷ்க பெர்னாந்துவின் விக்கெட்டினை அடுத்து, இப் போட்டியில் அறிமுகமான ப்ரியமால் பெரேராவும் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி ஒரு கட்டத்தில் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியது.

இதனை அடுத்து இலங்கை அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களும் ஜொலிக்கத் தவறினர். இலங்கை அணியின் மத்திய வரிசை வீரர்களில் கமிந்து மெண்டிஸ் 9 ஓட்டங்களை பெற, குசல் மெண்டிஸ் 21 ஓட்டங்களை பெற்றிருந்தார். தொடர்ந்து களம் வந்த திசர பெரேராவும் 12 ஓட்டங்களை மட்டும் பெற்று ஏமாற்றினார். இதனால், ஒரு கட்டத்தில் இலங்கை அணி 97 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் தடுமாற்றமான நிலைக்குச் சென்றது.

எனினும் பின்வரிசையில் துடுப்பாடிய தனன்ஞய டி சில்வா மற்றும் இசுரு உதான ஆகியோர் இலங்கை அணியின் 8 ஆவது விக்கெட்டுக்காக நல்ல இணைப்பாட்டம் ஒன்றை பெற முயற்சி செய்தனர். இந்நிலையில், தனன்ஞய டி சில்வாவின் விக்கெட்டோடு இந்த இணைப்பாட்டம் முடிவுக்கு வந்தது. தனன்ஞய டி சில்வா 22 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு நடந்தார்.

தனஞ்சய டி சில்வாவின் விக்கெட்டிற்கு பின்னர் இசுரு உதான அதிரடியான முறையில் ஆட ஆரம்பித்து தனித்து போராடினார். ஒரு கட்டத்தில் மிகவும் இக்கட்டான நிலையில் இருந்த இலங்கை அணி இசுரு உதானவின் அதிரடி துடுப்பாட்டத்தால் சரிவில் இருந்து ஓரளவு மீண்டு 39.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் தனித்து போராடிய இசுரு உதான ஒரு நாள் போட்டிகளில் தனது கன்னி அரைச்சதத்தினை பூர்த்தி செய்து வெறும் 57 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்களைக் குவித்து ஒரு நாள் போட்டிகளில் தனது சிறந்த துடுப்பாட்ட இன்னிங்ஸை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு மேலதிமாக, இசுரு உதான இலங்கை அணியின் கடைசி விக்கெட்டுக்காக 58 ஓட்டங்களை பகிர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பாக என்ரிச் நோர்ட்ஜே 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அன்டைல் பெஹ்லுக்வேயோ 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 190 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி தொடக்கத்தில் தடுமாற்றம் ஒன்றினை காட்டியது.

தென்னாபிரிக்க தரப்பிற்காக குயின்டன் டி கொக் மற்றும் அணித்தலைவர் பாப் டு ப்ளெசிஸ் ஆகியோர் சிறப்பான முறையில் ஆடி ஓட்டங்கள் சேர்த்திருந்தனர். இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு தென்னாபிரிக்க அணி போட்டியின் வெற்றி இலக்கான 32.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 190 ஓட்டங்களுடன் அடைந்தது.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் அதன் வெற்றிக்கு பிரதான காரணமாக இருந்த குயின்டன் டி கொக் ஒரு நாள் போட்டிகளில் தனது 20 ஆவது அரைச்சதத்துடன் 51 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, இந்த ஒரு நாள் தொடரில் நான்காவது தடவையாக 50 ஓட்டங்களுக்கு மேலான ஓட்டப்பதிவையும் வைத்திருந்தார். அதேநேரம் பாப் டு ப்ளெசிஸ் 38 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக தனன்ஞய டி சில்வா மாத்திரம் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது இலங்கை அணிக்காக போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய இசுரு உதானவிற்கு வழங்கப்பட்டது.

இந்த ஒரு நாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறியிருக்கும் இலங்கை அணி, இந்த ஒரு நாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் ஆறுதல் வெற்றி ஒன்றை எதிர்பார்த்து தென்னாபிரிக்க வீரர்களை நளை சனிக்கிழமை (16) கேப்டவுன் நகரில் வைத்து எதிர்கொள்ளவுள்ளது.


Add new comment

Or log in with...