'மிச்செலின்' டயர் நிறுவனம் முதலீடு செய்ய முன்வருகை | தினகரன்


'மிச்செலின்' டயர் நிறுவனம் முதலீடு செய்ய முன்வருகை

 
பிரான்ஸின் முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான 'மிச்செலின்' இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஆராய்வதற்காக மிச்செலின் நிறுவனத்தின் தூதுவர் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, முதலீட்டு சபையினரைச் சந்தித்துக் கலந்துரையாடியது.  
 
மிச்செலின் நிறுவனத்தின் பொது விவகார குழுமப் பணிப்பாளர் எரிக் லீ கொரெ தலைமையில் இந்தக் குழு இலங்கை வந்திருந்தது. இவர்கள் முதலீட்டு சபையின் தலைவர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் அதன் பணிப்பாளர் சம்பிக்கா மலல்கொட உள்ளடங்கலான உயர் குழுவினரைச் சந்தித்திருந்தார்கள்.   
 
நாட்டின் முன்னணி இறப்பர் உற்பத்தி நிறுவனமான கம்சோ லோடஸ்டார் நிறுவனத்தை மிச்செலின் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதன் ஊடாக இலங்கையில் தனது செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.  
 
மிச்செலின் குழுமம் உலகத்தில் இரண்டாவது பாரிய டயர் தயாரிப்பு நிறுவனமாகும். உலகின் 17 நாடுகளில் இதன் செயற்பாடுகள் காணப்படுவதுடன், 114,000 ற்கும் அதிகமான பணியாளர்கள் அவற்றில் பணியாற்றுகின்றனர். இலங்கை, தாய்லாந்து, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இறப்பர் உற்பத்திக்குப் பலமான நாடுகளாக உள்ளன என்று மிச்செலின் நிறுவனத்தின் பொது விவகார குழுமப் பணிப்பாளர் எரிக் லீ கொரெ குறிப்பிட்டார்.  
 
மிச்செலின் நிறுவனத்தின் செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுப்பதற்கான உத்துழைப்பை முதலீட்டுச் சபை வழங்கும் என அதன் தலைவர் சேமசிறி பெர்னான்டோ உறுதியளித்தார். 
 
இலங்கையில் முதலீடு செய்வதற்கு அவர்கள் தீர்மானித்தமையையிட்டு மகிழ்ச்சியடைவதுடன், அதனை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் இலங்கையில் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொள்வதை எதிர்பார்ப்பதாகவும் முதலீட்டுச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.    

Add new comment

Or log in with...