தண்ணீரை மறந்து போன தமிழர் அமைப்புகள்! | தினகரன்


தண்ணீரை மறந்து போன தமிழர் அமைப்புகள்!

வடக்கில் வளருகிறது தண்ணீர் வணிகம். குடிநீர்ப் போத்தல்களுக்காக பெருமளவு பணம் வடக்கில் இருந்து வெளியே செல்கிறது. வறியவர்களின் நிலைமையே பரிதாபம்!
 
நிலத்தின் நீரூற்றுகளில் 'ஒயில்' கலந்தது பற்றியோ, யாழ்.குடாவின் தண்ணீர்ப் பிரச்சினைக்கு மாற்றுவழி எதுவென்பதையிட்டோ எவரும் இப்போது கவலை கொள்வதில்லை. அன்று நடத்திய போராட்டங்களும்
இன்று மறந்து போய் விட்டன
 
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் தண்ணீர் கெட்டு விட்டது. குடிநீருக்கே பிரச்சினை. குடிநீருக்கான நல்ல தண்ணீர் ஊற்றுள்ள வலிகாமம் வடக்கிலுள்ள சுன்னாகத்தில் 'ஒயில்' கலந்து விட்டது. அங்கே அமைக்கப்பட்டிருக்கும் மின்பிறப்பாக்கிகளின் கழிவு எண்ணெய் மண்ணில் ஊறி நீரூற்றுக் கண்களை மாசுபடுத்தி விட்டது. போகிறபோக்கில நிலாவரை ஊற்றும் கெட்டு விடும் போலிருக்கு” என்ற அபாயக் குரல்கள் பெரிதாக ஒலித்தன.
 
இந்த அபாயக் குரலை அடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலானோர் தங்கள் கிணறுகளைக் கவலையோடு எட்டிப் பார்த்தனர். காலாதிகாலமாக இந்தக் கிணறுகளிலிருந்தே நீரெடுத்துக் குடித்ததும் சமைத்ததும் கோயிலில் பொங்கலிட்டதும் பிற கொண்டாட்டங்கள் செய்ததும் நடந்தன. போர்க் காலத்தில் இடம்பெயர்ந்து வேறு ஊர்களுக்குச் சென்ற போது கூட பலருடைய வாயிலும் வந்த வார்த்தைகள், “என்ன இருந்தாலும் எங்கட வீட்டுத் தண்ணி மாதிரி வராது. எங்கட கிணத்தில இருந்து பச்சைத் தண்ணியை அள்ளிக் குடிச்சிட்டுப் படுத்திருக்கலாம். பசி, தாகம் எல்லாம் தீர்ந்திடும்” என்பதாகவே இருந்தது.
அப்படிப் பெருமிதமாக நம்பிக் கொண்டிருந்த கிணறுகளை இப்படித் திடீரெனக் கைவிடுவதென்றால்...!
 
இந்த அதிர்ச்சித் தகவலைத் தாங்க முடியாத பத்திரிகைகள் ஐயோ என்று கூக்குரலிட்டன. சனங்கள் திகைத்துத் துக்​கம் அடைந்தனர். அரசியல் தரப்புகள் இதை அவரவருக்கு ஏற்ற மாதிரி தங்களிடமிருந்த அளவுகோல்களால் அளக்க முற்பட்டன. எவருக்கும் அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியவில்லை. பலரும் சுத்திகரிக்கப்பட்ட போத்தல் தண்ணீரை வாங்கிப் பாவிக்கத் தொடங்கினார்கள். நாளொன்றுக்கு பல இலட்சம் ரூபா  குடிநீருக்காக யாழ்ப்பாணத்துக்கு வெளியே போகிறது என்று கவலைப்பட்டார்கள்.  இந்த நிலையில் சில இளைஞர்கள் மட்டும் இந்தப் பிரச்சினை குறித்துக் கொஞ்சம் கடுமையாகச் சிந்திக்க முற்பட்டனர்.
 
அவர்கள் இதை ஒரு விழிப்பு நிலைக்குக் கொண்டு வர விரும்பினர். இதற்காக அவர்களால் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஏறக்குறைய யாழ்ப்பாணத்தை உலுக்கி, ஒரு கணம் சிந்திக்க வைத்த போராட்டம் அது. மாகாணசபை தொடக்கம் மத்திய அரசு வரையில் தலையைப் பிய்க்கும் அளவுக்கு இந்தப் பிரச்சினை தீவிரமடைந்தது. ஆனால் எந்தப் பெறுமானங்களையும் பெறாமல், அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாமல், அதில் வெற்றியை எட்டாமல் அந்தப் போராட்டத்தை அப்படியே மெல்லக் காயடித்துக் கைவிட்டனர் யாழ்ப்பாண மக்கள்.
 
இப்பொழுது நீர் மாசு பற்றிய கதைகளில்லை.ஒயில் கழிவு பற்றிய பேச்சுகளைக் காணோம். அப்படியென்றால் எல்லோரும் தங்களுடைய கிணறுகளிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடிக்கிறார்களா என்றால், அப்படியில்லை. யாழ்ப்பாணத்துக்கு வெளியிலிருந்து வரும் போத்தல் தண்ணீரையே எல்லோரும் வாங்குகிறார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றவர்கள் மட்டும் இதில் இல்லை.இது தவிர தண்ணீர் பற்றிய கவலைகள் யாருக்குமில்லை.
 
இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்துக்காக தெரு நீளத்துக்குக் குழாய்கள் பொருத்தப்படுகின்றன. இந்தக் குழாய்களுக்கு எங்கேயிருந்து எப்படித் தண்ணீர் வருமென்று யாருக்கும் தெரியாது. இதைப் பற்றி இந்தப் பத்தியாளர் சில நாட்களுக்கு முன்பும் குறிப்பிட்டிருந்தார்.
 
மக்களின் கவலைக்கேற்ற மாதிரி தினமும் தண்ணீருக்காக யாழ்ப்பாணத்திலிருந்து பெருந்தொகை பணம் வெளியே போகிறது. தண்ணீர் வணிகம் வளர்ந்து கொண்டு வருகிறது.
இது எங்கே போய் எப்படி முடியும் என்றும் யாருக்கும் தெரியாது. யாழ்ப்பாணத்திலிருந்து நான்கு தினசரிகள் வருகின்றன. தனியாக நான்கு வாரப் பத்திரிகைகள் வெளியாகின்றன. தொலைக்காட்சிகள் இரண்டு ஒளிபரப்பாகின்றன. பத்துக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள், சக்திகள் உள்ளன. தண்ணீர்ப் பிரச்சினையை தொடக்கத்தில் இவையெல்லாம் கண்ணீர் மல்கப் பேசின. இப்பொழுது "முன்னொரு காலத்திலே யாழ்ப்பாணத்திலே தண்ணீர்ப் பிரச்சினை என்றொரு விடயம் இருந்தது” என்று சொல்லுமளவுக்கு இவற்றுக்கும் இந்தப் பிரச்சினைக்குமான இடைவெளி (தூரம்) வந்து விட்டது.
“அப்படியென்றால்  யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக இயக்கங்களைச் சேர்ந்தோர், புத்திஜீவிகள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்?” என்று இப்பொழுது நீங்கள் கேட்கலாம்.
கையை விரிப்பதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும்?
 
ஒரு தண்ணீர்ப் பிரச்சினைக்கே தீர்வைக் காண முடியாத அளவுக்குத்தான் இன்றைய யாழ்ப்பாணம் உள்ளது. இதையிட்டு யாரும் கோபப்படத் தேவையில்லை. பதிலாக வெட்கப்பட வேண்டும்.
ஏனென்றால், யாழ்ப்பாணத்தில் மூன்றில் ஒரு பிரதேசங்களில் நிலத்தடி நீர் மிகச் சிறப்பாகவே உள்ளது. அதைக் கெட்டு விடாமல் பராமரிக்கும் பொறுப்பை முதலில் ஏற்படுத்த வேண்டும். இதற்குரிய பொறிமுறையில் ஊரில் உள்ள குளங்கள் ஆழப்படுத்தப்பட்டாலும் இன்னும் இது போதாத நிலையே காணப்படுகிறது. தொண்டமானாறு, நாவற்குழி போன்ற இடங்களில் நீர்த் தடுப்பணைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தொடர்ந்து தொடர்ச்சியான அவதானிப்பும் களஆய்வும் மேற்கொள்ளப்படுவது அவசியம்.
அடுத்தது, புவியியல் ரீதியாகவே நல்ல தண்ணீர் இல்லாத உவர்நீர்ப் பிரதேசங்கள் உள்ளன. தீவுப்பகுதி, காரைநகர், அராலி, வட்டுக்கோட்டை, மூளாய், சுழிபுரம், வடமராட்சியில் கரவெட்டி, உடுப்பிட்டி, நெல்லியடியில் சில பிரதேசங்கள், தென்மராட்சியில் பல இடங்கள் மற்றும் யாழ்ப்பாண நகரைச் சூழவுள்ள பிரதேசங்கள் என பல இடங்கள் உள்ளன.
 
இவற்றுக்கு குழாய்நீர் விநியோகமே ஒரே வழி. அதற்கு எங்கே இருந்து நீரைக் கொண்டு வருவது என்பதே அறியாப் பிரச்சினை. அதனை தீராப் பிரச்சினை எல்லாம். இதற்கெல்லாம் முதலில் யாழ்ப்பாணத்தில் முறையான கழிவகற்றல் முறைமை உருவாக்கப்பட வேண்டும். இதைப் பற்றி பலரும் பேசி வருகின்றனர். மனேஜர்ஸ் போறத்தில் இது தொடர்பான பல கலந்துரையாடல்கள் நடந்துள்ளன. ஊடகங்கள் சிலவும் இது குறித்து உரையாடியுள்ளன. ஆனால், இதொன்றும் கவனத்திற் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வரவில்லை.  
 
இந்தக் கழிவகற்றல் பற்றிய பேச்சு வந்த போது ஒரு நண்பர் கேட்டார், “எந்த வீட்டிலிருந்து மலக்கழிவகற்றல் நடக்கிறது? அதற்கான வசதிகள் எத்தனை வீடுகளில் உண்டு? அப்படிக் கழிவை அகற்ற வேண்டும் என்று யாராவது சிந்திக்கிறார்களா? பொதுவாகவே கழிவகற்றல் குறித்து நகரசபை, பிரதேச சபை போன்றவையே கவனத்திற் கொள்வதில்லை. இப்படியிருந்தால் தண்ணீர் கெடாமல் வேறு எப்படி இருக்கும்?” என்று.
எனக்குத் தெரிந்த வரை எவருடைய வீடுகளிலிருந்தும் மலக்கழிவை அகற்றுவது நடக்கவில்லை. அவ்வளவு கழிவுகளும் தலைமுறை தலைமுறையாக வளவுகளுக்குள் சேகரித்துப் பாதுகாக்கப்படுகின்றன. கழிவுகளை அகற்றாமல் அவற்றை அப்படியே பெறுமதியாகச் சேகரித்து வைத்திருக்கும் மக்களாக யாழ்ப்பாண மக்கள் இருக்கிறார்கள்.
யாழ்ப்பாண மக்கள் கழிப்பறைகளை உருவாக்கும் முறையே அலாதியானது. 
 
மலக்குழிகளை அவற்றுக்குரிய சரியான முறைமையில் அமைப்பது கிடையாது. குழியைக் கட்டும் போது அடிப்பாகத்தை அடைப்பதே கிடையாது. மலம் மண்ணில் சேமிக்கப்பட வேண்டும் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்ற மாதிரி கீழ்ப்பகுதியை கொங்றீற் பண்ணாமல் மண்ணோடு இணைத்து விடுவார்கள். இதனால் எத்தனை ஆண்டுகளானாலும் எத்தனை பேர் பாவித்தாலும் எந்த மலக்குழியும் நிரம்பாது.
இது நிலத்தையும் சூழலையும் கெடுக்காமல் வேறு என்ன செய்யும்?
 
சரி, பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மலக்குழிகளில், கழிவகற்றல் பொறிமுறையில்தான் தவறோ, பிழையோ என்றால், இப்பொழுது அமைக்கப்படுவது மட்டும் என்ன?
அதே பழைய பல்லவிதான்.
 
புதிதாக அமைக்கப்படும் வீட்டுத் திட்டங்களிலும் புதிய மலசல கூட நிர்மாணத்தின் போதும் இந்த விடயம் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களாலும் அதிகாரிகளாலும் பேசப்படுகிறது. கழிவகற்றலுக்கு ஏற்ற மாதிரி நிர்மாணிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஆனால், இதைப் பெரும்பாலானவர்கள் கேட்பதில்லை.
 
சில வாரங்களுக்கு முன்பு வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு இடத்துக்குப் போயிருந்தேன். அங்கே  புதிய முறைப்படி மலக்கழிவை அகற்ற வேண்டும் என்று தொழில்நுட்ப உத்தியோகத்தர் வலியுறுத்தியிருந்தார். அதைச் சரியாக நடைமுறைப்படுத்துவதற்கு அவர் இறுக்கமான கண்காணிப்பையும் மேற்கொண்டிருந்தார்.
ஆனாலும் என்ன பயன்? ஏனென்றால் அந்தத் தொழில்நுட்ப உத்தியோகத்தரின் காதில் பூவைக்கிற மாதிரி, அவர் நிர்மாணப் பணிகள் நடக்கும் இடத்தைக் கண்காணித்து அறிக்கையிட்ட பிறகு இரவோடிரவாக மலக்குழிகளின் அடிப்பாகத்துக்கு இடப்பட்ட கொங்கிறீற்றை உடைத்து அதை வெறும் நிலமாக்கி விடுகிறார்கள்.
இது தவறல்லவா என்று அந்த மக்களிடம் கேட்டேன்.
 
"நிலத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது எந்தக் கழிவையும் அப்படியே நாலு நாளில் அடையாளம் தெரியாமலாக்கி விடும். இந்த இடத்தில் நெருப்பை மூட்டுங்கள். இன்றைக்கு நிலம் அப்படியே கொதித்துப் போயிருக்கும். இரண்டு வாரத்துக்கு சுடுமணலாகத் தெரியும். 
 
இரண்டு வருசத்தில் இதில் என்ன நடந்தது என்று தெரியுமா? இது மண். இயற்கை. வழியில் நாயெல்லாம் மலம் கழிக்கிறது. அது அப்படியே நாறிக் கிடக்குதா? அடையாளம் தெரியாமல் அப்படியே உக்கிப் போகிறது. இயற்கை எல்லாவற்றையும் சீர் செய்து விடும். எங்கள் மண்ணுக்கு அப்படியான சிறப்புக் குணமிருக்கிறது” என்றார்.
 
எனக்கு மறு பேச்சே வரவில்லை. அவரோடு அதற்கு மேல் என்ன பேசுவது?அவரைப் போலத்தானிருக்கிறார்கள் பலரும். நாம் அவர்களுடன் எதை எப்படிப் பேசுவது? இது அந்த மக்களின் பழக்கம். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற வேண்டும். அவர்களைக் கோபித்து ஆகப் போவது ஒன்றுமில்லை என்கிறார் இன்னொருவர்.
 
அவர் சொல்வதிலும் நியாயமிருக்கலாம். ஆனால், அதற்கிடையில் வேகமாக நிலமும் நீரும் கெட்டு விடும். நிலமும் நீரும் கெட்டால் நாமும் நமது உடலும் கெட்டு விடும் யாழ்ப்பாணத்தில் சிறுநீரகப் பாதிப்புக்கும் புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கும் தண்ணீர் கெட்டதும் உணவுப்பழக்கம் பாழானதும் சூழல் தவறியதுமே காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
நல்லனவற்றை யார்தான் கேட்கிறார்கள்!
 
கருணாகரன்

Add new comment

Or log in with...