சோதிடம் கூறுவது என்ன? | தினகரன்


சோதிடம் கூறுவது என்ன?

ஆட்சியை கைப்பற்றும் அதிர்ஷ்டம் உள்ளதா?

இது இந்திய நாடாளுமன்ற தேர்தல் காலம். அடுத்த பிரதமரும் மோடிதான் என்றே கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே ராகுல்காந்தி பிரதமராக அமர வாய்ப்பு உள்ளது. ஸ்டாலின் தவிர கூட்டணிக் கட்சியினர் யாருமே ராகுல்காந்தியை முன்மொழியவில்லை.

இப்படியிருக்க, ராகுல்காந்திக்கு நாடாளும் யோகம் வந்து விட்டதா? அவரது ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கின்றன? இதுபற்றி சோதிடம் என்ன கூறுகின்றது என்று இந்தியாவின் பிரபல இணையத்தளங்கள் விபரம் வெளியிட்டுள்ளன.

அரசியல் யோகம் தரும் கிரகங்களில் முக்கியமான மூன்று கிரகங்கள் சூரிய பகவான்,சனி பகவான் மற்றும் ராகு பகவான் ஆகும்.இவை ஒருவருடைய ஜாதகங்களில் கேந்திரம்,திரிகோண பலம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு அடுத்ததாக அரசியல் யோகம் தந்து நிர்வாகிக்கும் திறனை அளிக்கக் கூடிய கிரகங்கள் புதன் பகவான்,சுக்கிர பகவான்,செவ்வாய் பகவான் மற்றும் அரசியல் தந்திரத்தை அளிக்கக் கூடிய கேது பகவான் ஆகும்.

ஒருவர் அதிகாரம் செலுத்தக் கூடிய அமைச்சர், முதல்வர், பிரதமர் போன்ற உயர் பதவியைப் பெற வேண்டுமாயின் அவரது ஜாதகத்தில் ராஜ ராசியான சிம்மமும், அதன் அதிபதியான சூரியனும் மிக அதிகமான சுபத்துவம் அடைவதோடு, பதவி ஸ்தானம் எனப்படும் பத்தாமிடமும் வலுப்பெற்றிருக்க வேண்டும். ராகுல்காந்திக்கு பத்தாமிடத்தில் லக்னாதிபதி சுக்கிரன் வலுப்பெற்று அமைந்துள்ளார். சூரியன், செவ்வாயோடு இணைந்துள்ளார். சிம்மத்தில் கேது அமர்ந்துள்ளார்.

ராகுல்காந்தியின் ராசி, நட்சத்திரத்தில் பல குழப்பங்கள் இருந்தாலும் அவரது பிறந்த நேரம், நாள், ஊரை வைத்து கணித்ததில் ராகுல் காந்தி ஜாதகத்தில் துலாம் லக்னம், தனுசு ராசி மூலம் நட்சத்திரம் என வந்துள்ளது.

ராகுல்காந்திக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ராகுதிசை ராகுபுத்தி ஆரம்பிக்கப் போகிறது. இது லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என்றே ஜோதிடர்கள் கணித்துள்ளனர். தற்போது நடந்துள்ள ராகு பெயர்ச்சியும், 2020வரை சனிப்பெயர்ச்சியும் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ள ராகுல்காந்திக்கு சாதகமாகவே அமையும் என்கின்றனர். கடந்த தேர்தலைப் போல காங்கிரஸ் கட்சி மரண அடி வாங்காமல் ஓரளவிற்கு சீட்டுகளை பெறும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர் ஜோதிடர்கள்.

ராகுல்காந்தி ஜாதகத்தில் ராகு ராஜயோகத்தை தரக்கூடிய இடம் என்று மூலநூல்கள் குறிப்பிடும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து இடங்களில் ராகு இல்லாமல் கும்பத்தில்தான் இருக்கிறார். அதைவிட மேலாக தற்போது ராகுலின் ராசியான தனுசுவிற்கு கோட்சார ரீதியில் ஜென்மச்சனி நடந்து கொண்டிருக்கிறது.

என்ன இருந்தாலும் வேத ஜோதிட விதிகளின்படி நடப்பு கோட்சாரம் மற்றும் தசாபுக்தி அமைப்புகள் சாதகமாக இல்லாததால் இம்முறை அதி உச்ச பதவியை அடைவதற்கு ராகுலுக்கு தடை இருக்கும் என்பதே ஜோதிடர்களின் கணிப்பு.


Add new comment

Or log in with...