நாடு திரும்பும் தமிழர்களுக்கு வீடு, வாழ்வாதாரம் உள்ளிட்ட தீர்வு வேண்டும் | தினகரன்


நாடு திரும்பும் தமிழர்களுக்கு வீடு, வாழ்வாதாரம் உள்ளிட்ட தீர்வு வேண்டும்

வசதி வாய்ப்பு இன்மையால் தாயகம் திரும்ப விருப்பமுள்ள பலருக்கு அச்சம்

விசேட செயற்றிட்ட பொதியொன்றை அரசு வழங்க வேண்டும்

இந்தியாவிலிருந்து நாடு திரும்ப ஆவலாகவிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு வீடு, வாழ்வாதாரம் உள்ளிட்ட தீர்வுப்பொதியொன்றை வழங்கி அவர்கள் நாட்டுக்கு வருவதை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டுமென குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார். 

இந்தியாவிலிருந்து நாடு திரும்ப பெரும் எண்ணிக்கையான ஈழத்தமிழர்கள் தயாராக இருக்கின்ற போதும், இங்கு நாடு திரும்பிய பின்னர் வாழ்வதற்கான இடம், வாழ்வாதாரம் இன்மையால் மீண்டும் திரும்பிச் செல்லக்கூடிய நிலைமை காணப்படுகிறது. ஏற்கனவே நாடு திரும்பி கஷ்டப்படுபவர்கள் இந்தியாவிலிருப்பவர்களுக்கு தொலைபேசியில் நிலைமைகளைக் கூறுகின்றனர்.

இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்தார். பிரதமரின் கீழான தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். இந்தியாவின் தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் தமது தாயகம் திரும்ப விரும்புகின்றார்கள். ஆனால் அவ்வாறு திரும்பியவர்களுக்கு அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் இங்கு முதலில் வந்தவர்கள் வரவிரும்புகின்றவர்களை வரவேண்டாமெனத்தடுக்கின்றனர். எனவே இலங்கை திரும்பும் அகதிகளுக்கு வீட்டு வசதிகளுடன் அவர்களுக்கான சுயதொழில் வசதிகளையும் அரசு செய்துகொடுக்க வேண்டும்.அத்துடன் தமிழகத்திலிருந்து இலங்கை திரும்ப பலர் விரும்புகின்றபோதும் அவர்கள் படகுகள்மூலமே தமிழகம் சென்றதால் அவர்களிடம் கடவுச் சீட்டுக்கள் இல்லை. அதனால் அவர்கள் இலங்கைக்கு விமானம் மூலம் திரும்ப இந்திய ரூபாவில் 40,000ரூபா முதல் ஒரு லட்சம் ரூபா வரை செலவிடவேண்டியுள்ளது.எனவே இவ்விடயத்தில் இந்திய அரசுடன் பிரதமர் தொடர்பு கொண்டு மாற்று வழிகளை செய்யவேண்டும். 

தமிழகத்துக்கு அகதிகளாக சென்றவர்கள் பல வருடங்களாக அங்கு வாழ்கின்றனர். அவர்கள் விமானம் மூலம் இலங்கை திரும்பும்போது குறிப்பிட்ட கிலோ அளவு பொருட்களையே கொண்டுவரமுடியும். இதனாலும் பலர் இலங்கை திரும்ப தயங்குகின்றனர். எனவே இவர்கள் இலங்கை திரும்ப தலைமன்னார்- இராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவையொன்றை நடத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)


Add new comment

Or log in with...