ஒரே நாளில் காணிப் பதிவுகளை வழங்க நடவடிக்கை | தினகரன்


ஒரே நாளில் காணிப் பதிவுகளை வழங்க நடவடிக்கை

காணிகளைப் பதிவு செய்து ஒரே நாளில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.  

கம்பஹா மாவட்ட செயலக காரியாலய வளவில் அமைக்கப்படவுள்ள ஏழு மாடிகளைக்கொண்ட கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், எமது அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கு விரைவான சேவைகளை வழங்கி வருகின்றோம். அந்தவகையில் காணி உறுதிப்பத்திரமொன்றை இனிமேல் பெறும்போது, காலையில் சமர்ப்பித்து அன்றைய தினம் மாலையிலேயே பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.  

இம்மாதம் 16ஆம் திகதி இந்த திட்டம் ஆரம்பிக்கவுள்ளோம். இதேவேளை, பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவுகளையும், இவற்றின் பத்திரங்களையும், மிகவும் பாதுகாப்பான முறையில் தரம்மிக்கதாகப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மிகத்துரிதமாக மேற்கொண்டு வருகின்றோம்.  

இது தவிர, 155 வருடங்கள் பழைமை வாய்ந்த பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சகல சேவைகளையும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவும், மிகச்சிறந்த நடைமுறைத்திட்டத்தின் கீழ் முன்னெடுத்து வருகின்றோம் என்றார். 

இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னப்பெரும, முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க, கம்பஹா மாவட்டச் செயலாளர் சுனில் ஜயலத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.  


Add new comment

Or log in with...