இரவுநேர தொழுகையின் சிறப்புகள் | தினகரன்


இரவுநேர தொழுகையின் சிறப்புகள்

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் காலைவரை தூங்கிய ஒரு மனிதரைப்பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள்,  அவரது இரு காதுகளிலும் ஷைத்தான் சிறு நீர் கழித்துள்ளான் என்று கூறினார்கள். ஆதாரம் (புஹாரி,  முஸ்லிம்)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,  உங்களில் ஒருவர் தூங்கினால் அவரது தலையின் பின்பகுதியில் ஷைத்தான் மூன்று முடிச்சுக்களைப் போடுகிறான். ஓவ்வொரு முடிச்சுப் போடும் போதும்.உணக்கு நீண்ட இரவு உள்ளது. நன்கு உறங்குவாயாக எனக் கூறி முடிச்சுப் போடுகிறான்.அவர் விழித்து அல்லாஹ்வின் பெயரைக் கூறினால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகின்றது. வுளூச்செய்தால் இரண்டாவது முடிச்சு அவிழ்கின்றது. அவர் தொழுதால் அனைத்து முடிச்சுகளும் அவிழ்ந்து விடுகின்றன. அவர் காலையில் உற்சாகத்துடனும் நல்ல மனதுடனும் இருப்பார். அவ்வாறில்லையானால் தீய மனதுடனும் சோம்பேறியாகவும் காலையில் இருப்பார்.ஆதாரம் புஹாரி,  முஸ்லிம்)

ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கின்றேன். நிச்சயமாக இரவில் ஒரு முஸ்லிமான மனிதர் அல்லாஹுத்தஆலாவிடம் தனது இம்மை மறுமை சம்மந்தமான எந்த நல்ல விடயத்தைக் கேட்டாலும் அதனை அவருக்கு அல்லாஹ் கொடுத்து விடுவான். இப்படி ஒவ்வொரு இரவிலும் இருக்கிறது.  ஆதாரம் முஸ்லிம்

இவ்வாறு இரவு நேரத் தொழுகையின் சிறப்புக்கள் பற்றி நிறையவே ஹதீஸ்கள் வந்துள்ளன. முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்களே கால் வீங்கும்  அளவுக்கு இரவு நேரங்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால், இன்று எம்மில் எத்தனை பேர் பர்ளுத்தொழுகைகளைக் கூட நேரத்திற்கு தொழுகின்றோம் என்கின்ற வினாவை எமது உள்ளத்தை தொட்டு கேட்க வேண்டும். பர்ளுத் தொழுகைகளைக் கூட ஒழுங்காக நிறைவேற்றாமல் புறந்தள்ளி விட்டு மனம் போன போக்கில் இருக்கும் போது எவ்வாறு இரவு நேரத் தொழுகைகளை நாம் நிறைவேற்ற எம்மை நாம் அர்ப்பணிக்கமுடியும்.

நாம் ஒவ்வொருவரும் இதனை உணர்ந்து செயற்பட வேண்டியுள்ளவர்களாக மாற வேண்டும். ஷைத்தானுக்கு இடம் கொடுக்காமல் எமது வாழ்வை மாற்றிக் கொள்ள  முயற்சிப்போமாக.

ஐ.ஏ.ஸிறாஜ் 

பாலமுனை  


Add new comment

Or log in with...