இஸ்லாத்தின் பார்வையில் பெற்றோருக்கு உபகாரம் செய்தல் | தினகரன்

இஸ்லாத்தின் பார்வையில் பெற்றோருக்கு உபகாரம் செய்தல்

குடும்ப அலகை பாதுகாத்தல், அதனை பலப்படுத்தல் போன்ற விடயங்களுக்கு இஸ்லாம் மிகப் பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றது, ஏனெனில் குடும்பம் என்பது சமூகத்தின் ஒரு பிரதான அங்கமாகும், குடும்பமெனும் அலகு முக்கியத்துவமளித்து கவனிக்கப்படுவதில் தான் சமூகத்தின் வளர்ச்சியும் சீர்திருத்தமும், ஆரோக்கியமும் தங்கியுள்ளது.அருள்பாளிக்கப்பட்ட சிறந்த குடும்பத்தின் பிரதான தூண்கள் பெற்றோர்களாவர். இவர்கள் மூலமே குடும்பக் கட்டமைப்பு உருவாகிறது மேலும் அடுத்த சந்ததி தோற்றம் பெறுகிறது.  
 
பெற்றோரின் கண்ணியம் மகத்துவம் என்பவற்றை போதிக்கும் பல வசனங்களை அல்குர்ஆனில் கண்டுகொள்ளலாம், உதாரணமாக.  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும் பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான் அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!. இன்னும்இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும் 'என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல் நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!' என்று கூறிப் பிரார்த்திப்பீராக!. 
 
பெற்றோரை நடத்துவது பற்றி உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்புக் கோருகிறாறோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான். (அல் இஸ்ரா 23-25)  
அதேபோல நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடைய ஏராலமான ஹதீஸ்களும் இது விடயமாக வலியுறுத்துவதை காணலாம்.  
அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் ' அல்லாஹ்வின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது, அல்லாஹ்வின் வெறுப்பு தந்தையின் வெறுப்பில் உள்ளது' ( அல் அதப் அல் முப்ரத்)  
 
பெற்றோருக்கு நிறைவேற்றவேண்டிய கடமைகள் மிகப்பாரியவை, அவர்களுக்க நாம் செய்யவேண்டிய உபகாரங்கள் அதிகமானவை, வெருமனே ஒரு சில பரிசுகளை வழங்குவதாலோ, ஒருசில கடமைகளை செய்வதாலோ அவர்களுக்கு செய்யவேண்டிய உபகாரங்களை பூரணமாக நிறைவேற்றியதாகாது.  
 
ஒரு தடவை ஒருமனிதர் தனது தாயை தோழிலே சுமந்தவராக கஃபாவை வழம்வந்தார், பின்னர் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் 'நான் எனது தாய்க்கு செய்யவேண்டிய கடமைகளை( உபகாரத்தை) செய்து முடிந்துவிட்டேனா?' எனக் கேட்டார் அதறகு இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், உமது தாயின் பிரசவ வலிக்குக் கூட இது ஈடாகாது, எனினும் நீர் உமது தாய்க்கு நன்மை செய்துள்ளீர் உமது குறைவான நன்மைக்கு இறைவன் நிறைவான கூலியை வழங்குவானாக. எனக் கூறினார்.  
 
இந்த அடிப்படையில் தான் எமது முன்னோர் பெற்றோருக்கு உபகாரம் செய்தல் என்பதன் அர்த்தத்தை புரிந்துவைத்திருந்தனர், அலி இப்னுல் ஹுஸைன் அவர்கள் ஒரு ஆச்சரியமான விடயத்தை செய்து வந்தார்கள்.... ஒரு முறை அலி இப்னுல் ஹுஸைன் அவர்களிடம் 'நீங்கள் பெற்றோருக்கு மிகச்சிறந்த முறையில் உபகாரம் செய்யும் மனிதர் என்று நாம் அறிவோம் ஆயினும் உங்கள் தாயாருடன் ஒரே தட்டில் சாப்பிடுவதில்லையே' எனக் கூறப்பட்ட போது, ' எனது தாய் உண்பதற்கு ஆசைப்பட்டு பார்க்கும் உணவுக்குவளத்தை அவரது கரம் எடுப்பதற்கு முன்னர் எனது கை எடுத்துவிடக் கூடும், இதனால் நான் எனது தாயை நோவினை செய்துவிடுவேனோ என அஞ்சுகிறேன்' என்று பதிலளித்தார்.  
 
பெற்றோர் தமது உள்ளத்தில் பிள்ளைகளின் மீது அதிக அன்பை சுமந்து வாழ்கின்றனர், ஆயினும் சிலபோது பிள்ளைகள் தமது மனைவியரை அல்லது நண்பர்களை பெற்றோரைவிட முதன்மைப் படுத்தும் நிலமைகளை காண்கின்றோம்.  
 
இப்னு அவ்ன் அவர்கள் தனது தாய் உணராத விதத்தில் கூட அவருக்கு எந்த தொந்தரவும் செய்ததில்லை, அவர் தனது வாழ்வில் நிகழ்த ஒரு சம்பவத்தை இவ்வாறு கூறுகிறார் ' ஒரு முறை எனது தாயார் என்னை அழைத்தார், அவருடை அழைப்பிற்கு நான் பதிலளித்தேன், அப்போது எனது சப்தம் தாயின் சப்பதத்தைவிட உயர்ந்தது, ஆகவே நான் இரு அடிமைகளை விடுதலை செய்தேன்'.   
பெற்றோருக்கு உபகாரம் செய்வதன் சிறப்புகள் மற்றும் அதன் உலக, மறுமை பயன்கள் தொடர்பாகவும், பெற்றோரை நோவினை செய்வதன் விபரீதங்கள் தொடர்பாகவும் ஏராளமான நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன.  
 
ஒருவர் பெற்றோருக்கு உபகாரம் செய்யும் போது   
1. இறை நம்பிக்கை பூரணமடைவதுடன் இஸ்லாத்தை அழகிய முறையில் பின்பற்றியவராக கருதப் படுகிறார்.  
2. இறைவனுக்கு மிகவுமே விருப்பமான அமல்   
3. ஒரு மனிதனை சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் அமல்.  
4. செல்வத்திலும், சந்ததியிலும் அபிவிருத்தியை ஏற்படுத்துகிறது  
5. பெற்றோருக்கு பணிவிடைசெய்வோருக்கு பணிவிடை செய்யும் ஒரு சந்ததியை இறைவன் ஏற்படுத்துகிறான்.  
6. கவலைகள், கஷ்டங்களிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.  
அதே போல பெற்றோருக்கு நோவினை செய்வோருக்கான பாதக விளைவுகளையும் இஸ்லாம் எச்சரிக்கையாக முன்வைப்பதைக் காணலாம்.அவற்றுல் சில  
1. இறைவனின் கோபத்தை கொண்டுவரும்  
2. பெரும்பாவங்களில் ஒன்றாகும்  
3. நரகத்திற்கு அழைத்துச் செல்லும் செயலாகும்  
4. பெற்றோருக்கு நோவினை செய்வோரின் நல்ல செயல்கள் அங்கீகரிக்கப்படமாட்டாது  
5. இத்தகையோருக்கு இறைவன் உலகிலும் தண்டனை வழங்குகிறான் மறுமையிலும் தண்டனை வழங்குகிறான்.  
பெற்றோருக்கு உபகாரம் செய்து, இறைதிருப்தியையும், உலக மறுமை அருள்களையும் பெற்றுக்கொள்வதற்கு இறைவன் எமக்கு அருள்புரிய வேண்டும். பெற்றோருக்கு நோவினை செய்யும் பாவத்தையும் அதன் மோசமான விளைவுகளையும் விட்டு அல்லாஹ் பாதுகாப்பானாக.   
 
அஷ் ஷெய்க்  
எம்.ஜீ. முஹம்மத் இன்ஸாப் (நளீமி) எம்.ஏ
 

Add new comment

Or log in with...