5 ஆண்டுகளுக்குபின் விஜயகாந்தை நேரில் சந்தித்த ராமதாஸ் | தினகரன்


5 ஆண்டுகளுக்குபின் விஜயகாந்தை நேரில் சந்தித்த ராமதாஸ்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பாமகவைப் போன்று தங்கள் கட்சிக்கும் 7 இடங்கள் ஒதுக்க வேண்டும் என தேமுதிக கேட்டு வந்ததால் கூட்டணி இழுபறி நீடித்தது. இந் நிலையில் கடந்த வாரம் தேமுதிக - அதிமுக கூட்டணி உறுதியானது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் தேமுதிக - பாமகவுக்கு இடையே தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது. இரு கட்சிகளும் ஒரே தொகுதிகளைக் கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி, நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, அதிமுக நிர்வாகி கோகுல இந்திரா உள்ளிட்டோர் கூட்டாகச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின் போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "விஜயகாந்த் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்தோம். அந்தச் சந்திப்பு நல்லபடியாக முடிந்தது, நல்லபடியாகப் பேசினோம்" என தெரிவித்தார்.

அதிமுக தலைவர்களும் உடன் வந்திருப்பதால் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்துப் பேசப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ராமதாஸ் "இல்லை" என பதிலளித்தார். தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் பாமக பிரச்சாரம் மேற்கொள்ளுமா என்ற கேள்விக்கு அன்புமணி ராமதாஸ், "நிச்சயமாக" என பதிலளித்தார்.

கடந்த காலங்களில் எதிரெதிர் நிலையில் நின்று தேர்தல்களைச் சந்தித்த பாமக - தேமுதிக இடையே மோதல் நிலவி வந்தது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு விஜயகாந்த் - ராமதாஸ் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.


Add new comment

Or log in with...