எமது வாசகர்களுக்கு மனம் திறந்த மடல் | தினகரன்


எமது வாசகர்களுக்கு மனம் திறந்த மடல்

தினகரன் பத்திரிகை இன்று 87வது அகவையில கால் பதிக்கின்றது. எமது நாட்டின் 'ஊடகப் பல்கலைக்கழகம்' எனப் பெயர் பெற்றிருக்கும் ஏரிக்கரை பணிமனையான லேக் ஹவுஸிலிருந்து வெளிவரும் தினகரன் 1932 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி இதே தினத்தில்தான் அதன் முதலாவது இதழை வெளியிட்டது. சுதந்திரப் போராட்டத்திலும், தேசிய எழுச்சியிலும் தன்னை முழுமையாக அர்ப்பணிப்புச் செய்த தேசிய இயக்கச் செயற்பாட்டாளரான ஊடகக் குடும்பத்தின் பெருமகனான டீ. ஆர். விஜேவர்தனவினால் தொடங்கப்பட்ட லேக்ஹவுஸிலிருந்து வெளியான தினகரன் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொண்டு இன்று ஒன்பதாவது சகாப்தத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இதழியல் துறையில் தனக்கெனத் தனித்துவமான முத்திரை பதித்து சமூகப் பணியில் சாதனை படைத்து வரும் தினகரன் இன்று நவீன தொழில்நுட்ப மாற்றங்களுடன் தன்னை முழுமையாக இணைத்து களத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றது. ஈழத்து புத்திலக்கியப் படைப்புகளுக்கு தினகரன் முன்னோடியாகவே காணப்படுவதாக ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். தமிழ் ஊடகத்துறையில் முத்திரை பதித்த நாளேடாக தினகரனை பார்க்க முடிகிறது. ஊடகத்துறை ஈழ மண்ணில் துளிர்விடாததொரு கலகட்டத்தில்தான் இங்கு தினகரன் கால்பதித்ததென்பதை பெருமையோடு நோக்க முடிகிறது.

‘மாற்றம்’ என்ற சொல்லைத் தவிர அனைத்துமே மாற்றம் பெறும் என்ற கார்ல் மாக்சின் தத்துவத்தை முன்பொரு தடவையும் இங்கு பதிவு செய்திருப்பதை மீண்டும் நினைவூட்டிக் கொள்கின்றோம். அதற்கமைய ஊடகத்துறையிலும் காலத்துக்குக் காலம் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த வளர்ச்சிக்கேற்ற மாற்றம் தினகரனிலும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. தினகரன் 1932 இல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், 1959 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப் பகுதியே அதன் பொற்காலமாக கருத முடியுமென்பது ஆய்வாளர்களின் நிலைப்பாடாகும். இது வரலாற்றுண்மையும் கூட. காலமாற்றத்தினுடே இதனை நன்கு அவதானிக்க முடிகின்றது.

பேராசிரியர் கைலாசபதி என்ற பேரறிஞர் தினகரனின் பிரதம ஆசிரியராக பொறுப்பேற்ற காலம்தான் 1959 ஆம் ஆண்டு. அன்னாரது வருகைக்குப் பின்னர் தான் புத்திலக்கியப் படைப்புகளும், தேசிய இலக்கியமும் எழுச்சி பெறத் தொடங்கியது என்பது வரலாற்றுண்மையாகும். கைலாசபதி ஈழத்து எழுத்தாளர்களுக்கு தினகரனில் ஏற்படுத்திக் கொடுத்த களம் ஊடகத்துறையில் மகத்தான எழுச்சியை உருவாக்கியதுதான் யதார்த்தமாகும். இதனை எவராலும் மறுத்துரைக்க முடியாது. இக்காலப் பகுதியில் தினகரனில் பிரசுரமான ஆயிரமாயிரம் படைப்புகள் இன்றும் கூட படித்துச் சுவைக்கக் கூடியவையாகவே காணக் கூடியதாக உள்ளன. அன்று தினகரனில் அவர் ஏற்படுத்திக் கொடுத்த களம் ஈழமண்ணில் ஒரு புதிய இலக்கியத்தலைமுறையை உருவாக்குவதற்கு வழி செய்தது.

பேராசிரியர் கைலாசபதியின் காலமே தினகரனின் பொற்காலம் என பல்கலைக்கழக ஆய்வுகள் பதிவு செய்திருக்கின்றன. அதற்குப் பின்னரான காலப் பகுதி சற்றுக் கசப்பானதாகவே நோக்கப்படுகின்றது. அது அன்றைய ஆசிரியர்களின் தவறு என்றோ, இயலாமையென்றோ கூற முடியாது. லேக் ஹவுஸ் நிறுவனம் அரசியல் சுழிகளுக்குள் சிக்கிக் கொண்டது. தினகரன் கூட அந்தச் சுழியிலிருந்து தப்ப முடியாது போனது. இதுதான் யதார்த்தமானதாகும். 1973 ஜுலை மாதம் 22 ஆம் திகதி லேக் ஹவுஸ் நிறுவனம் அரசு​ைடமையாக்கப்பட்டது. அன்றிலிருந்து இற்றை நாள் வரை அது அரசு நிறுவனமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தினகரனின் வரலாற்றைப் பதிவு செய்யும் போது அதன் ஆரம்ப ஆசிரியர் ஏ. கே. பி. நாதன் முதல் மயில்வாகனம் இராமநாதன், பேராசிரியர் கைலாசபதி, ஆர். சிவகுருநாதன் போன்றோரையும் பின்னர் வந்த ஆசிரியர்களையும் மறந்தோ, புறந்தள்ளியோ பதிவு செய்ய முடியாது. கைலாசபதியின் பொற்காலத்தைப் போன்றே ஆர். சிவகுருநாதனின் 30 வருடகால தினகரன் ஆசிரியர் பணியையும் மறந்துவிட முடியாது. ஒரு நாளிதழுக்கு 30 வருட காலம் ஆசிரியராகப் பணிபுரிவதென்பது சாதனைப் பணியாகவே நோக்க வேண்டியுள்ளது.

இச்சந்தர்ப்பத்தல் மற்றுமொரு விடயத்தைச் சுட்டிக்காட்டியாக வேண்டியுள்ளது. ஊடக சுதந்திரத்திற்காக கடந்த காலங்களில் அரசியலோடு பேரம் பேசப்பட்டு பயனற்றுப் போனதன் காரணமாக பெறுமதி மிக்க பல ஊடகவியலாளர்களை நாம் இழந்திருக்கின்றோம். பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றோம். இந்த வடுக்களின் வேதனை ஒருபோதும் ஆறக் கூடியதல்ல. ஆனால் 2015 க்குப் பின்னரான இன்றைய காலப் பகுதியில் எம்மால், ஊடகத்துறையினரால் சுதந்திரக் காற்றை ஓரளவேனும் சுவாசிக்கக் கூடியதாக உள்ளது. ஊடகவியலாளர்களின் எழுதுகோல்களுக்கு கொடுக்கும் சுதந்திரமென்பது ஜனநாயகத்துக் கொடுக்கும் கௌரவம், மரியாதை என்பதை நாம் மனமார ஏற்றுக் கொள்கின்றோம்.

நவீனத்துவத்துக்குள் கால்பதித்திருக்கும் தினகரன் கூட்டுழைப்புக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. ஜீவோனாபாயத் தொழிலுக்கு அப்பால் சகலருமே ஆத்ம திருப்தியோடு கூட்டுழைப்புக்கு பக்கபலமாக இருக்கிறதென்பதை நாம் சொல்லியே ஆக வேண்டும்.

பக்கச்சார்பாக செயற்பட்டமை, கல்விச் சமூகத்தைக் கண்டு கொள்ளாமை, வாசகர்களை மறந்த செயற்பாடுகள் எல்லாம் கடந்த கால தவறுகளாகவே இருக்கட்டும். புதிய தடத்தில் நாம் இப்போது காலடி வைக்கிறோம். ஊடகத்துறையின் நவீன வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து நிற்கும் இளம் ஊடகவியலாளர் குழுவோடு நாம் இப்போது களம் இறங்கியிருக்கிறோம்.

ஜனநாயகத்தின் காவலன் ஊடகமென்ற அடிப்படையிலிருந்து நெறிபிறழாது ஊடக தர்மத்தை நாம் பேணுவோமென்பதை இந்த நல்லநாளில் வாசகர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.


Add new comment

Or log in with...