நீண்ட கால இழுபறியில் ஆசிரியர் சம்பள முரண்பாடு | தினகரன்


நீண்ட கால இழுபறியில் ஆசிரியர் சம்பள முரண்பாடு

இலங்கையில் நேற்று ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கையில் 353 தேசிய பாடசாலைகள் மற்றும் 9841 மாகாணப் பாடசாலைகள் அடங்கலாக மொத்தம் 10,194 பாடசாலைகளில் சுமார் 41இலட்சத்து 66ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.சுமார் 2 இலட்சத்து 50ஆயிரம் ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்.

கல்விப் புலத்தில் ஆசிரியர்களின் வகிபாகம் என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்பது உண்மை. எனவேதான் ஆசிரியர்களின் போராட்டம் நேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது எனலாம்.

நேற்றைய தினம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அங்கம் வகிக்கும் 18 சங்கங்களைச் சேர்ந்தோர் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்திலீடுபட்டனர்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் அண்மையில் இசுருபாய முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது பொலிசார் நீர்த்தாரை பாய்ச்சிஅடக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் நேற்றைய போராட்டத்தின் ஒரு நோக்கமாகும் என்று அச்சங்கம் குறிப்பிடுகிறது.

இலங்கை ஆசிரிய சேவை சங்கத்தின் உபதலைவர் எஸ்.பிரதீப் இதுபற்றிக் கூறுகையில் 22 வருட கால சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், அதிபர் சேவை சங்கம், இலங்கை ஆசிரிய ஆலோசகர்கள் சங்கம், சுயாதீன ஆசிரியர் சங்கம், இலங்கை அரச ஆசிரியர் சங்கம், தேசிய அதிபர் சங்கம், அகில இலங்கை ஜக்கிய ஆசிரியர் சங்கம், பொது ஆசிரிய சேவையாளர் சங்கம், பயிற்சி கல்வியியல் கல்லுரி மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கம், கிறிஸ்தவ ஆசிரியர் சங்கம், அதிபர் சேவையாளர் சங்கம், பிரிவேனா ஆசிரியர் சங்கம் என்பன போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறினார்.

போராட்டத்துக்கான அழைப்புகள் நாட்டின் ஏனைய பிரதேச ஆசிரியர்களுக்கு எத்துணை சென்றடைந்ததோ அத்துணை வடக்கு, கிழக்கு ஆசிரியர்களைச் சென்றடையவில்லை என்பதை நேற்றைய போராட்டம் எடுத்துக் காட்டியிருந்தது.

அவர்களது கோரிக்கைகளில் 3 கோரிக்கைகள் முக்கியமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தன.

1. அதிபர் ஆசிரியர்களது சம்பளத்தை உயர்த்த வேண்டும். 1997ஆம் ஆண்டு பீ.சீ.பெரேரா சம்பள ஆணைக்குழுவின் சிபார்சின்படி கொண்டுவரப்பட்ட சம்பள மறுசீரமைப்பின் பின்னர் இதுவரைக்கும் அதாவது 22 வருட காலம் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளக் கொடுப்பனவுகள் உயர்த்தப்படவில்லை.

2. ஆசிரியர்கள் மீது செலுத்தப்படும் தேவையற்ற நெருக்கீடுகளை அகற்றுதல்.

3. மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6வீதத்தை ஒதுக்க வேண்டும். கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முற்றாகப் பயன்படுத்தப்படவில்வை. அத்துடன் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்தயோசனையும் முன்வைக்கப்படவில்லை என்பதும் குற்றச்சாட்டாகும்.

இதை விட 22வருட கால சம்பள முரண்பாட்டை தீர்த்து வைத்தல் வேண்டும். 30 மாதங்களுக்கான சம்பள நிலுவைப் பணத்தை உடனடியாக வழங்குதல். 2016.01.01 முதல் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ரத்துச் செய்யப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவை மீண்டும் வழங்குதல் பெற்றோரிடமிருந்து பாடசாலைக்கு நிதி அறிவிடலைத் தடுத்தல் போன்றனவும் அடங்குகின்றன.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதுபற்றிக் கூறுகையில், "வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதனூடாக அதிபர் மற்றும் ஆசிரியர் பிரச்சினைகளுக்கு உடனடியாக அரசாங்கம் தீர்வைப் பெற்றுத் தர வேண்டுமென வலியுறுத்துகிறோம். தவறினால் தொடர் பேராட்டங்களை முன்னெடுக்கவும் தயங்க மாட்டோம்" என்றார்.

கல்வி ஊழியர் சங்கத்திற்கான தலைவர் வசந்த தர்மசிறி கூறுகையில் "கடந்த மஹிந்த அரசில் தேசிய சம்பளக் கொடுப்பனவுகளுக்கான கொள்கையினை உருவாக்குவதற்கென லயனல் பெர்னாண்டோ மற்றும் சாலிய போன்றவர்களின் தலைமையின் கீழ் சம்பள ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த ஆணைக்குழு பரிந்துரைத்த சம்பளம் அதிபர் ஆசிரியர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படவில்லை.அதன் பின்னர் எந்த அரசாங்கமும் சம்பள மாற்றம் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனை வலியுறுத்தியே போராட்டம் நடத்தப்பட்டது" என்றார்.

நேற்றைய போராட்டம் வடக்கு கிழக்கிற்கு வெளியே வெற்றி பெற்றிருப்பதாக கூறப்பட்ட போதிலும், கிழக்கில் வழமை போல நேற்று பாடசாலைகள் இயங்கின.

வடக்கில் கறுப்புப் பட்டி அணிந்து அரை மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பின்னர் கற்பித்தல் நடவடிக்ைகயில் ஈடுபட்டனர். கறுப்புப் பட்டி அணிந்து கவனஈர்ப்பு போராட்டம் நடத்துமாறு பொதுவான அறிவித்தலை ஒரு ஆசிரியர் சங்கம் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் பெரும்பாலான பாடசாலைகள் ஒரு பட்டியுமில்லாமல் வழமை போல கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.

கல்முனை உவெஸ்லி உயர்தரக் கல்லூரி அதிபர் வ.பிரபாகரனிடம் இதுபற்றிக் கேட்டபோது "எமக்கு யாரும் எவ்வித அழைப்பையும் விடுக்கவில்லை.பிரசுரமும் தரவில்லை.கறுப்புப்பட்டி என்பதை முகநூலில் மாத்திரமே பார்த்தோம்.இன்று வழமை போல ஆசிரியர்கள் வந்து கற்பித்தலில் ஈடுபடுகிறார்கள் புலனாய்வாளர்களும் கணக்கெடுக்கிறார்கள்" என்றார்.

தேசிய பாடசாலையான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் முத்துஇஸ்மாயிலிடம் கேட்ட போது "வழமை போன்று பாடசாலை இயங்குகின்றது.எந்தச் சங்கமும் எந்த அறிவித்தலையும் எமக்குத் தரவில்லை" என்றார்.

போராட்டம் வெற்றி பெறுவதென்பது போராட்டக்காரர்களின் ஒற்றுமையில் தங்கியுள்ளது. ஆசிரியர் சங்கங்களிடையே காணப்படும் பேதங்கள் போராட்டத்தை சோபையிழக்கச் செய்து விடும்.

வெறுமனே அறிக்கைகளை வெளியிட்டு பெயருக்கு முகநூலில் அறிவித்து அல்லது ஒரு பிரசுரத்தை பொதுவில் வழங்குவதால் மட்டும் போராட்டம் வெற்றி பெறாது. அதுபற்றி ஆசிரியர்கள் அறியவும்வாய்ப்பில்லை.அந்தக் காலத்தில் போராட்டம் என்றால் பாடசாலை பாடசாலையாகச் சென்று ஒவ்வொரு ஆசிரியருக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கி அழைப்பு விடுப்பார்கள்.

ஆனால் இன்று அப்படியில்லை. சில ஆசிரியர் சங்கங்கள் பொதுவாக இடமாற்ற சபையில் பங்குபற்றுவதை மாத்திரமே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அல்லது அறிக்கைகள் விடுக்கின்றனர். தவிர ஆசிரியர்களுக்கான நன்மைதீமைகள் நலனோம்புகைகளை ஏறெடுத்துப் பார்ப்பதாயில்லை.

மறுபக்கம் புலனாய்வாளர்கள் கடந்த ஒருவார காலமாக அதிபர் உள்ளிட்ட பலரிடமும் ஆராய்ந்துள்ளனர். நேற்றும் அவ்வாராய்வு இடம்பெற்றுள்ளது.

ஒரு அறிவித்தலை மாத்திரம் விடுத்தால் அல்லது பத்திரிகையில் முகநூலில் செய்தியை இட்டால் போதுமானது என்ற மனநிலையிலிருந்து சங்கங்கள் மாற வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

எதுஎப்படியிருந்த போதிலும் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் நியாயம் உள்ளதா அல்லது இல்லையா என்பதை அரசாங்கம் முதலில் ஆராய வேண்டும். அவர்களது கோரிக்ைககளில் நியாயம் இருந்தால் அவற்றை கட்டாயம் தீர்த்து வைக்க வேண்டும். சம்பள முரண்பாடு என்ற விடயம் நீண்ட காலமாக பிரஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முடிவு காண வேண்டும். இதுவே பொதுவான எதிர்பார்ப்பு ஆகும்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...