மக்கள் நலத் திட்டங்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றி | தினகரன்

மக்கள் நலத் திட்டங்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றி

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இதன்படி 43 மேலதிக வாக்குகளால் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேறியுள்ளது.

அதேநேரம் இவ்வாக்கெடுப்பில் 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமையும் முக்கியமான அம்சமாகும்.

இன்றைய அரசியல் சூழலில் இவ்வரவுசெலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றிருப்பது ஐ.தே.மு அரசாங்கத்தின் முக்கிய அரசியல் முன்னேற்றமாகும். 2015 ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்ததோடு அந்த அரசங்கம் 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி வரையும் நீடித்தது. இருப்பினும் ஒக்டோபர் 26ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ.ல.சு.க விலகிக் கொண்டதைத் தொடர்ந்து அரசியல் நெருக்கடி தோற்றம் பெற்றது. அந்த நெருக்கடி சுமார் 52 நாட்கள் நீடித்தது.

இந்நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் ஐ.தே.மு ஆட்சியமைப்பதற்கு எதிரணியிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு நல்குவதாக அறிவித்தது. அதனடிப்படையில் ஐ.தே.மு டிசம்பர் 16ஆம் திகதி ஆட்சிபீடம் ஏறியது.

அதனைத் தொடர்ந்து அரசாங்கத்தை முன்னெடுத்து வருகின்ற ஐ.தே.மு இவ்வரவு செலவுத் திட்டம் வரையும் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பான சவாலை எதிர்கொள்ளவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மார்ச் மாதம் 5ம் திகதி நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அது மக்கள் நலன்களுக்கு முக்கியத்துவமளித்துள்ள ஒரு வரவு செலவுத் திட்டமாகும். இத்திட்டம் தொடர்பில்ஆறு நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடாத்தும் நிலைமை நேற்றுமுன்தினம் ஏற்பட்டது.

2015 முதல் 2018 வரையான நான்கு வரவு செலவுத் திட்டங்களையும் எவ்வித சவாலுமின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு ஸ்ரீ.ல.க. பக்கத் துணையாக இருந்தது. என்றாலும் இக்கட்சி நல்லாட்சியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ஐ.தே.மு அரசாங்கம் சமர்ப்பித்த இவ்வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுமா? இவ்வரவு செலவுத் திட்டம் வெற்றியீட்டுமா என்றவாறான பல்வேறு வினாக்கள் பல மட்டங்களிலும் எழுந்திருந்தன.

ஏனெனில் ஐ.தே.மு அரசாங்கத்தில் ஸ்ரீல.சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைவதற்கு அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை விதித்திருந்தமை மற்றும் ஐ.தே.மு ஆட்சி அமைப்பதற்கு எதிரணியிலிருந்து ஆதரவு நல்குகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்திருந்தமை என்பன இதற்கு அடிப்படை காரணங்களாக அமைந்தன.

இவ்வாறு பல்வேறு அரசியல் சவால்களுக்கு மத்தியில் அரசாங்கத்தின் பெரும்பான்மையை உரசிப் பார்க்கும் வகையில் இவ்வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு அமைந்தது.

இவ்வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருப்பதால் அதன் பயன்கள் மக்களை சென்றடைவதைத் தடுப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு எந்தவொரு மக்கள்நேய பாராளுமன்ற உறுப்பினரும் விரும்ப மாட்டார்கள். இந்த வகையில்தான் பாராளுமன்றத்தில் எதிரணியில் இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ.ல.சு க பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்து 43 மேலதிக வாக்குகளால் இவ்வரவுசெலவுத் திட்டத்தை வெற்றி பெறச் செய்தனர்.

அதேநேரம் இவ்வரவு செலவுத் திட்டம் உள்ளடக்கியுள்ள நன்மைகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 30 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது இவ்வரவுசெலவுத் திட்டம் வெற்றி பெற வழிவகுத்துள்ளனர்.

ஐ.ம.சு. முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளேயின் தந்தையினது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்றதால் தாம் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே கூட இவ்வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன்படி வரவுசெலவுத் திட்டம் உள்ளடக்கியுள்ள நன்மைகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் மக்கள்நேய பிரதிநிதிகள் உறுதியாக இருந்திருப்பதையே இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை வெளிப்படுத்தியுள்ளது.

அதேநேரம் ஐ.தே. மு அரசாங்கம் இவ்வாக்கெடுப்பின் ஊடாகப் பெரும்பான்மையை மிக தெளிவாக நிரூபித்திருக்கிறது. அதுவும் டிசம்பரில் பதவிக்கு வரும் போது இருந்ததை விடவும் ஆதரவு அதிகரித்திருப்பதையே வாக்கெடுப்பு முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. அதேவேளை கூட்டு எதிரணி டிசம்பரில் கொண்டிருந்ததை விடவும் தற்போது அதன் ஆதரவு பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கு இவ்வாக்கெடுப்பில் கிடைக்கப் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை நல்ல எடுத்துக்காட்டாகும்.

ஆகவே மக்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பிரதிபலனே இவ்வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் வெற்றி என உறுதிபடக் கூறலாம்.


Add new comment

Or log in with...