அரசியலமைப்பு பேரவையை மீறி ஜனாதிபதி செயற்பாடு | தினகரன்


அரசியலமைப்பு பேரவையை மீறி ஜனாதிபதி செயற்பாடு

அரசியலமைப்பையும் அரசியலமைப்புப் பேரவையையும் மீறி ஜனாதிபதி செயற்பட்டு வருவதாகவும் நீதித்துறை உட்பட நியமனங்கள் பலவற்றில் தமது அதிகாரத்தையும் மீறி அவர் செயற்பட்டு வருவதாகவும் ஜே. வி. பி. யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எம். பி. நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி, பிரதமர் தலைப்பிலான 25 நிறுவனங்களுக்கான நிதியொதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கான தலைவர் நியமனத்தில் ஜனாதிபதி அரசியலமைப்புப் பேரவையை மீறி செயற்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அரசியலமைப்பையும் அரசியலமைப்புப் பேரவையையும் உதாசீனம் செய்து செயற்படுகிறார். பல தடவைகளில் அவரது பல்வேறு தலையீடுகள் மூலம் இது இடம்பெற்றுள்ளன.

சுமார் ஆறு தடவைகள் அரசியலமைப்பை மீறி செயற்படும் ஜனாதிபதியிடம் அவருக்கான பொறுப்பு தொடர்பாக எவ்வாறு நம்பிக்கைகொள்ள முடியும்? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

நாட்டின் முதன்மையான சட்டவாக்கம் அரசியலமைப்பே. அதனை மீறிசெயற்படுவது எவ்வாறு என்றும் சகல நியதிகளையும் அலட்சியம் செய்து பல அமைச்சர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்களையும் அவர் நியமித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...