தோட்டப்புற மக்கள் வாழும் இடங்களில் எமது சேவைகள் விஸ்தரிக்கப்படும் | தினகரன்

தோட்டப்புற மக்கள் வாழும் இடங்களில் எமது சேவைகள் விஸ்தரிக்கப்படும்

மக்களைப் பலப்படுத்தும் நோக்கில் களுத்துறை மாவட்டத்தில் இரண்டு கிராமங்களைக் கொண்டு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்திலுள்ள கோவின்ன, புரோசெட் தோட்டத்தில் அமைக்கப்பட்ட 18 வீடுகளைக் கொண்ட புதிய கிராமத்தை  கையளிக்கும் நிகழ்வு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சமுர்த்தி, சமூக மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பாலித்த தெவரபெரும தலைமையில் இடம்பெற்றது. இவ்விழாவில், கலந்து கொண்டு உரையாற்றியபோதே எம்.திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு இப்புதிய கிராமத்தை நிர்மாணிப்பதற்கான நிதியை ஒதுக்கியது.

நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தெரிவான உறுப்பினர்களாகிய நாங்கள் அந்த மாவட்டத்துக்கு வெளியே பெருந்தோட்டங்கள் அமைந்துள்ள எல்லா மாவட்டங்களிலும் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

இன்று களுத்துறை மாவட்டத்தின் புரோசெஸ்டர், கீகியனகந்த ஆகிய இரண்டு தோட்டங்களில் மொத்தமாக 28வீடுகளும், கேகாலை மாவட்டத்தில் டெனிஸ்வத்தை தோட்டத்தில் 48வீடுகளுமாக 76புதிய வீடுகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

கீகியனகந்த தோட்டத்தில் மரண நிகழ்வு இடம்பெறுவதால்அங்கு விழா நடைபெறவில்லை. ஆனாலும் மக்கள் புதிய வீடுகளில் குடியேறலாம். நாங்கள் குறித்த மாவட்டங்களில் நேரடியாக வாக்கு கேட்டு வருவதில்லை. ஆனால், அந்த மாவட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் வாக்குகளைப் பெறும் அரசியல்வாதிகளையும் இணைத்துக்கொண்டு இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

தோட்டப் பகுதிகளில் வேலை செய்வதற்கு பிரதேச சபை சட்டத்தில் முன்பிருந்த தடைகளை காரணம் காட்டியே அவர்கள் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளாதிருந்திருக்கலாம்.

ஆனால், அந்த சட்டம் திருத்தம் செய்யப்பட்டது பற்றி எடுத்துக் கூறி தங்களது நிதியின் மூலமும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

 நுவரெலியா பதுளை மாவட்டங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்திய வீடமைப்புத் திட்டத்தை மாத்தறை முதல் மாத்தளை வரையும், கேகாலை முதல் மொனராகலை வரையும் விஸ்தரித்துள்ளோம்.எதிர்வரும் காலத்தில் களுத்துறை மாவட்டத்திலும் இந்திய வீடமைப்புத் திட்டம் அமுலுக்கு வரும் என்றும்  அவர் தெரிவித்தார்.

காணிகளைப் பெற்றுக்கொடுக்க உறுதியாக உழைப்பேன்

இந்த நிகழ்வில், உரையாற்றிய பிரதி அமைச்சர் பாலித்த தெவரபெரும, களுத்துறை மாவட்டத்தில் தோட்ட மக்களிடம் சென்று வாக்குகளை கேட்பதற்கு நாங்கள் வெட்கப்படுவதுண்டு. அந்த மக்களின் வாழ்க்கை நிலை அவ்வளவு மோசமாக இருக்கும் . இப்போது அமைச்சர் திகாம்பரம் முன்னெடுத்துவரும் வீடமைப்புத் திட்டத்தால் அந்த மக்களுக்கு நன்மை கிடைக்கிறது.

மாவட்ட மக்களின் பிரதிநிதி என்றவகையில் அவர்களின் பல்வேறு போராட்டங்களில் நான் பங்கேற்றுள்ளேன். அனைத்து தோட்டப்பகுதி மக்களுக்கும் காணிகளைப் பெற்றுக் கொடுக்க  நான் உறுதியாக இருக்கின்றேன். அதனை வலியுறுத்தி விரைவில் ஒரு பேரணியை கொழும்பு நோக்கி நடாத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

பெண் உறுப்பினர்களின்   அர்ப்பணிப்புக்களால் மக்களுக்கு விடிவு

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பெருந்தோட்டத்துறை ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் புனரமைப்பு பணிகளுக்காக இந்த மாவட்டத்திற்கு வருகை தந்தபோது, இங்கே புரோசெஸ்டர் தோட்டத்தில் புதிய வீடமைப்பு திட்டம் மக்களுக்கு கையளிக்கப்படுவது பற்றி அறிந்து இங்கே வருகை தந்தேன்.

நேற்று பதுளையிலும் இரண்டு இந்திய வீடமைப்புத் திட்டங்களை ஆரம்பித்து வைத்தோம். உண்மையில் அமைச்சர் திகாம்பரம் முன்னெடுத்துவரும் வீடமைப்புத் திட்டத்தை நான் பெரிதும் பாராட்டுகிறேன். எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட சில மனக்கசப்புகளை சிலர் பெரிதுபடுத்த முயற்சிக்கிறார்கள் . உண்மையில் எங்களுக்குள்  தனிப்பட்ட பிரச்சினை ஏதும் இல்லை.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை விடயத்தில் சில மனக்கசப்பு ஏற்பட்டது. இப்போது அது சரி செய்யப் பட்டுவிட்டது.

எங்கெல்லாம் எமது மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் பணியாற்றும் அவரது அரசியல் பயணம் பாராட்டுக்குரியது. இங்கே  வந்தபோது இந்திக்கா மற்றும் தமிழ்ச் செல்வி ஆகிய பிரதேச சபை உறுப்பினர்களான  இரண்டு தமிழ் பெண்கள்   துடிப்பாக மக்கள் பணி யாற்றுவது கண்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

(களுத்துறை சுழற்சி நிருபர்)


Add new comment

Or log in with...